நினைவுகளின் சாரலில்
அன்றொரு நாள், ஜில்லென்ற மழையில்
ரோட்டோர தேநீர் கடையில், வாங்கிய தேநீரை
நடு நடுங்கும் கையோடு, குவளையை இறுக்கமாக
பிடித்த படி, சொட்டு சொட்டாய்
குடித்த தேநீரின் சுவையில்
இன்றும் இனிக்கிறது மனது .. !
அன்று தான் பிறந்த அக்காவின்
குழந்தையின் முதன் முதல்
ஸ்பரிசத்தின் நினைவில், இன்றும் சிலிர்க்கிறது
உள்ளம் .. !
ஒவ்வொரு முறை ஊர் விட்டு, வரும் போதும்
அழுத கண்களோடு, அழுத்தமான முத்தம் பதித்து
அனுப்பும் அம்மாவின் நினைவில் அழகாய்
கனிகிறது உள்ளம் . !
ஏதோ ஒரு சண்டையில் எதிர்த்து பேசி
அப்பாவிடம் வாங்கிய அறையின்
நினைவில் இன்றும், கன்னங்களை
தானாய் தொடுகிறது கைகள்... !
ஏதோ ஒரு பள்ளி விழாவில்
வாங்கிய மூன்றாம் பரிசை
முதல் பரிசு என காட்டி, வீட்டில் நான் அடித்த
கூத்தை நினைக்கையில், உதட்டு வரி
பள்ளங்களில் தானாய் வந்து விழுகிறது
விரிந்த புன்னகை .. !
சோகமான நேரங்களில் கூட , எட்டி பார்த்து சிரிக்கிறது
சில பல சுகமான நினைவுகள்.. !
சில நினைவுகள் கண்களில் கண்ணீராய் வழிகிறது .. !
சில நினைவுகள் மெல்லிய புன்னகையாய் விரிகிறது .. ! :-)
-இனிய நினைவுகளுடன்..
நிஷாந்தினி