பனித்துளி சுமந்த புல்லிடம் பேசுகிறேன்
மண் நீர் வற்றிப் போனதால்
கண்ணீர் துளிர்க்கிறதா உனக்கு...?
என்ன வேலை செய்தாய்
இப்படி வியர்த்திருக்கிறது உனக்கு...?
ஆச்சர்யம் தான்.!
ஒரு துளியில் உலகத்தையே
பிரதிபலிக்கிறாயே...
உற்றுப் பார்த்தால் என்னையும்...!
பாதம் பதித்து பரவசப்பட
நான் நடந்து சென்றால்
உன் ஒருநாள் தவம்
கலைந்து விடுமா...?
இரவுக் காதலன் தந்த
ஈர முத்தத்தை
காலைக் கதிரவன் களவாடிச்
சென்று விடுவான்...
எச்சரிக்கை...!