இன்றைய திரைப்படம்

சூரியன் ஒளியை
உமிழ்ந்த உடன்
கவ்விக்கொண்டு பின்பு
கலவியின்பம் போல
கண்ணாடி வெளிச்சத்தில்
மாயை பிம்பத்தினை
தோற்றுவிக்கும் கடவுள்.

தோற்றுவிட்டவனை கழுவி
வெற்றி எலும்பினை கவ்வி
வெறிப்பிடித்து அலையவிடும்
பித்தசூத்திரம்.

பதிவாகும் நிகழ்வுகளில்
வெளியாகும் வரவுகள்
வெளியேறிய வியர்வைகளுக்கு
வெள்ளி தட்டில் காசுகள்.

திரைசீலையின் கவர்ச்சியில்
மிளிரும் நாயகர்கள்.
திரைக்காக சீலைகளை
தொலைக்கும் நாயகிகள்.
இதன் பெயர் கலையம்சமாம்.
ஆம் ! கலையம்சம் சேவையில்
அவிழ்த்து ஆடும் கலாச்சாரம்..
கைத்தட்டும் ரசிக ரசிகைகளின்
ஆடை அவிழ்ந்தால் கலாச்சார சீர்கேடு.
இப்படியும் முரட்டு முரண்ப்பாடு..!
இப்படியும் ஒரு சமுதாய பண்பாடு..!


சரிகமபதநீ........
சங்கீதங்களை
வெட்டி தட்டி கட்டி
விளையாடும் இசைக்கருவிகள்.
தடா புடா சத்தத்தில்
சங்கீத தேவையும்
ராகத்தின் தேவதையும்
காதை பொத்திக்கொள்ளுமாம்..!

மொழி கன்னியின்
கற்புக்கு விலை பேசுமாம்
இசையமைப்பின் குறியீடுகள்...!

பாடகர்களாம், இசைமேதைகளாம்
லகர ளகர ழகர அழகுகளை
இசைந்து கொடுக்காத நாக்குகளாம்.


சரித்தரங்களையும் காவியங்களையும்
கலாச்சார விழிமியங்களையும்
காட்சிப்படுத்த கஷ்டப்பட்டு
அரிதாரத்தினை அர்த்தப்படுத்தி
அகராதியாகி அர்பணிப்புக்கொண்ட
அற்புத நடிகர் நடிகையர்கள்
ஆற்றிய கலைசேவை அன்று.


இன்றோ....!

அற்பகாசுக்கு
அரிதாரம் பூசி
அளவுக்கு மிஞ்சி
ஆடையை குறைத்து
அசிங்கத்தை நிறைத்து
குத்தாட்டத்தில் மூச்சு திணறி
குலுங்கி செத்து மடிகிறது
பெண்மையின் பெருமையும்
கலாசாரத்தின் மகிமையும்.

திரைப்படம் சாபக்கேடா ?
திரைப்படம் கலாச்சார சீர்கேடா ?
விடையை நான் சொல்லும்முன்
திரைப்பட பிரம்மாக்களே ..!
என் வினாவை அழிக்க பாருங்கள்.


---------------------இரா. சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (8-Mar-14, 8:04 pm)
பார்வை : 384

மேலே