ஆறிலிருந்து அறுபது வரை
பிஞ்சிலே உறங்கினேனா
சத்தியமாய் தெரியவில்லை
மடி வற்றிய தாய்க்கு
மகனாய் பிறந்து
எப்படி உறங்கியிருப்பேன்?
அஞ்சிலே உறங்கினேனா
அதுவும் நினைவிலில்லை
அரை வயிற்று சோற்றிலே
ஆழ்ந்த உறக்கமேது
காளையாய் தான் உறங்கினேனா
கஞ்சிக்கு வழி தேடும்
கவலையிலே உறக்கமேது
மகனாய் தான் உறக்கமில்லை
கணவனாக உறங்கினேனா
பசி என்று பிள்ளையின் கதறல்
பாத்திரம் உருட்டும்
மனைவியின் குமுறல்
உறக்கம் மறந்தே போனது
தந்தை ஸ்தானத்தில்
சத்தியமாய் உறக்கமேது
கன்னி பருவத்தில்
கரை சேர கனவு கண்டு
காத்திருக்கும் மகள்
படித்தும் வேலை இல்லா மகன்
வயோதிகப்பிடியில் என் அன்னை
இத்தனை கடமையோடு
கடன் தொல்லை சேர்ந்து
உறக்கம் களைத்தது
ஆறிலிருந்து அறுபது வரை
நிம்மதியான உறக்கமில்லை
எனது இறுதி உறக்கமாவது
நிம்மதியாய் அமைந்திடுமா?