ஆறு விரல் -அதிர்ஷ்டம்-2

ஒரு பொருளோ மனிதனோ இருந்ததை அது அல்லது அவன் மறைவுக்குப் பிறகு அதிகமாக உணர முடியும். அய்யாக்கண்ணு எனும் மனிதன் அந்த குடும்பத்தில் அச்சாணி போல் இருந்து அத்தனையும் நகர்த்தி வந்திருக்க, அவர் இல்லாமல் அந்த குடும்பம் ஸ்தம்பித்து நின்றது. தன் கஷ்டத்தைக் கூறி, அழுவதற்கு அன்னத்திற்கு ஒரு நண்பனாய், தன் கவலையை வெளிபடுத்த ஒரு வடிகாலாய் அன்னத்தின் தாய்க்கு அவர் இருந்ததை இப்போது இருவரும் உணர்ந்தனர்.

தந்தை போன பிறகு தன் தவறை உணர்ந்த அன்னம் பேசா மடந்தை ஆனாள். பிள்ளைகள் அலறினாலும் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள். அன்னத்தின் தாய்க்கு பற்றிக் கொண்டு வந்தது. தன் புருஷனை விழுங்கியது அந்த அதிர்ஷ்டமில்லா பேரக் குழந்தைகளே எனக் கூறி அடித்து துவம்சம் செய்தாள். குட்டிகள் கரைந்தால் குல நாசம் என்ற பழமொழி நினைவுக்கு வந்து அழுதால் மென்மேலும் அடித்தாள். அன்னமோ இது எதையும் சட்டை செய்யாமல் தன் கனவு உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவாள். இரவு நேரத்தில் கடிதம் எழுதி எழுதி கிழித்துப் போட்டாள். தலையை விரித்துப் போட்டு அழுவாள். ஊர் சிரிக்க ஆரம்பித்தது.பைத்தியம் என்ற பெயர் அவளுக்கு தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது. அவளதுகுழந்தைகள் கூட அவளை சீண்டிப் பார்த்து சிரித்தன.

அன்று விடுமுறை தினம்,. ஆறுமுகம் தன் ஆசை நாயகியுடன் சினிமாவுக்குப் போய் விட்டு வீடு திரும்பி இருந்தான். மொத்தமான கவர் ஒன்று அவன் பெயருக்கு வந்திருப்பதைக் கண்டான். அன்னத்தின் தாயார் எழுதி இருந்தாள். அனைத்து சொத்தையும் அவன் பெயருக்கு மாற்ற இருப்பதாகவும் அவன் வந்து அன்னத்தைக் கூட்டிச் சென்று நில புலன்களை கவனிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் எழுதி இருந்தாள். ஆறுமுகம் ஒரு நிமிடம் பரிதாபப் பட்டான். மறு நிமிடம் கடிதத்தைக் கிழித்துப் போட்டு விட்டு டி.வி.யில் செய்திகள் பார்க்கலானான்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை. காலையில் 7.00 மணி இருக்கும். அவன் காபி குடித்து விட்டு, கையில் ‘தம்’ பற்ற வைத்து செய்தித் தாளை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு முழுவதும் தூக்கம் வராமையால் உடம்பு வலித்தது. வலது கண் துடித்துக் கொண்டே இருந்தது. ஆயினும் சினிமாப் பக்கம் புரட்டி எந்த தியேட்டரில் என்ன படம் எனப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அன்னத்தின் அத்தை மகன் நான் எனக் கூறிக் கொண்டு ஒரு சவடால் பேர்வழி “ஹாய்” என ஆறுமுகத்தின் முன் கையை நீட்டினான். ”ஹாய்” என பதில் கூறிய ஆறுமுகம் அவனை கண்ணால் அளக்கலானான்.
“ வெரி குட், ஆறு விரலா, அதான் ஒங்களுக்கு இவ்ளோ அதிர்ஷ்டம். சரி எப்ப அன்னத்தை கூட்டிக்கப் போறீங்க” என்றான்.

“அந்தப் பேச்சு பேசறதா இருந்தா இடத்தை காலி பண்ணு” என முகத்தைத் திருப்பிக் கொண்டான் ஆறுமுகம்.

“ சரி, நான் போகிறேன். ஆனால், கைல விலங்கோடு ஒண்ணை கூட்டிப் போக வருவேன்”
எனக் கூறி வெளியேறினான்.

யார்டா இவன் கைல வெலங்கோட வருவானாமே. வெகுண்டான். அன்னத்தைப் போனில் கூப்பிட்டான். “ ஒன் கள்ளக் காதலனை அனுப்பி என்னை மிரட்டிறியா? பெரிய புடுங்கியா அவன்”.

என்ன நடக்கிறது என்பது எனப் புரியாத அன்னம்
பேசியது யார் என்பது தெரியாமல் டொக்கென போனை வைத்து விட்டாள். ஓடி வந்து ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த அவளது தாயார், ஓங்கி அவள் முதுகில் அடித்தாள். பதிலுக்கு அன்னம் அருகில் இருந்த குத்து விளக்கால் தாயின் மண்டையில் அடித்து விட்டாள்.

மீண்டும் போன் அலறியது. ஆறுமுகம் தந்தி, செய்தி எதையும் சட்டை செய்யவில்லை. அவனது அலுவலக தணிக்கையில் அவனது தில்லு முல்லு நாடகம் அம்பலம் ஆகியது.. பொய் சான்றிதழ்கள், பொய் கையெழுத்துக்கள் என ஆயிரம் பொய்கள் அவனுக்கு எதிராக மெய் சாட்சி கூறின. ஆறுமுகத்திற்கு வேலை போய் விடும் எனத் தெரிந்த போது, மாமியார் நினைவு வந்தது ஊருக்கு ஓடினான். தன் அன்னை இறந்து விட்டாள் எனப் புரிந்து கொண்ட அன்னம் விஷம் வைத்து பிள்ளைகளைக் கொன்று விட்டு தானும் குடித்து விட்டாள். நாங்கு பிணங்கள் முற்றத்தில் கிடக்க ஒரே சொந்தமான அவன் அவர்கட்கு கொள்ளி வைக்கவாவது வந்தானே என ஊர் மெச்சியது.

பொங்கி வரும் சோகம், பயம் அனைத்தையும் அழுத்திட எண்ணி சுடுகாட்டில் இருந்து திரும்பும் வழியிலேயே கொஞ்சம் “தீர்த்தம் “ வாங்கி குடித்துக் கொண்டான். சாவுக்கு வந்திருந்தவர்களில் ஒரு வக்கீல் இருந்தார். அவரிடம் முன் ஜாமீன் எடுக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு முன் பணமாக ஐயாயிரம் ரூபாய் கொடுத்தான்.. அதைக் கொடுக்கும் போது அவன் கைகளில் இருந்த ஆறு விரல்களைப் பார்த்து, “பயங்கர அதிர்ஷ்டக் காரனய்யா நீர், கவலைப் படாதீர்” என்றார் வக்கீல்.

வீட்டிற்குப் போய் விளக்கேற்ற வேண்டும். அதற்கு முன் குளிக்க வேண்டும் என்ற நினைப்போடும் ஒரு கணம் தான் அன்னத்துடன் வாழ்க்கை நடத்தியதை நினைத்துப் பார்த்த அவன், ‘ என்னை மன்னித்து விடு அன்னம்’ என மனதில் கூறிக் கொண்டு ஆற்று நீரில் மூழ்கினான். மூச்சுப் பிடித்துக் கொண்டு நீருக்குள் சிறிது நேரம் நின்றான். மூன்று முறை முழுக வேண்டும் என ஐயர் சொன்னது ஞாபகம் வந்தது. அவன் நீரில் மூழ்கி எழுந்தான்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ். (10-Mar-14, 11:18 am)
பார்வை : 365

மேலே