புதியதோர் உலகம் செய்வோம்

"கலிகாலத்தில் உலகம் அழியும்..."
இது மூத்தோர் மொழி...!

"அழிவென்பதன் அர்த்தம் யாது...?"

வானம் இடிந்து விழுவதா...?
பூமி பிளந்து விடுவதா?

இல்லை...இல்லை...!

புயல் ஒருபுறமும், பூகம்பம் மறுபுறமும்..
நீர் (வெள்ளம் ) ஒரு புறமும்...
நெருப்பு (புவி வெப்பமாதல் ) மறுபுறமுமாக...

இயற்கை அன்னை நம்மை
தண்டிக்கத் தொடங்கி விட்டாள்....!

வன்முறையும், கொலையும், கொள்ளையும்,
புரட்டிப் போடும் போர்களும்,
அழிவின் ஆரம்பங்கள் தான்...!

மண்ணை மாசாக்கும் மடைமைகளும்,
பெண்ணை புண்ணாக்கும் கயமைகளும்,
அழிவின் உச்சங்கள்...!

மிச்சமிருப்பது... புனிதமிழந்த பூமியும்,
மரித்துப்போன மனிதமும் தான்...!

இனி...?
புவிக்கோள் பூண்டற்றுப் போகலாம்...
மனிதகுலம் மண்ணோடு மட்கலாம்...!

போனது போகட்டும்...
புதுயுகம் பிறக்கட்டும்...

ஓ... படைப்புத் தலைவனே..!
பிரம்மதேவனே...!

இப்புவி அழிந்த பின்
மீண்டும் புதிய பூமி படைப்பாய்தானே..?

ஆங்கே...
காடும்,கழனியும், கடலும், வானும்,
செடியும், கொடியும், காயும், கனியும்,
குயிலும், மயிலும், மானும், மீனும்
புலியும், நரியும், மண்ணும், மரமும்,
மாற்றமின்றி படைத்து விடு...

மனிதன் படைக்கையில் மட்டும்
உன் படைப்புச் சூத்திரத்தில்
ஒரு மாற்றம் செய்து விடு...!

ஆம்...!
அந்தப் புதிய மனிதனுக்குள்...
ஒரு இதயத்தை மட்டும் வைத்துவிடாதே...!

மாறாக கரங்களில் பளு தூக்கும்
வலு தராமல் அங்கிரு
இதயத்தைப் பொருத்தி விடு...!
ஆயுதமேந்தும் கரங்களெல்லாம்
ஆதரவாய் தலை வருடும்...!

தலைக்குள்ளும் மூளைக்குப் பதில்
மற்றொரு இதயத்தை வைத்து விடு...
அது அழிவை யோசிக்காமல்
அன்பை போதிக்கும்...!

அப்பொழுதேனும்
அன்பு மழையில் நனையட்டும் இத்தரணி...!
அதற்கு வழி சொல்லும் இப்பரணி ...!

எழுதியவர் : ஜெயக்குமாரி (10-Mar-14, 12:20 pm)
பார்வை : 259

மேலே