பாப்பா வந்ததும்0தாரகை0

பூக்களின் பாசை
புரியத் தொடங்கும்

வண்ணத்துப்பூச்சிகள்
நெருங்கிய உறவாகும்

கவிதையை
உருவமாய் பார்க்கலாம்

கிறுக்கல்கள்
அர்த்தம் சொல்லும்

எச்சில்
அச்சுவெல்லமாய் இனிக்கும்

சிரித்துச் சிரித்தே
கன்னங்கள் அழகாகும்

அழுகையிலும்
அழகு கொஞ்சும்

இரவில் விழித்து
விளையாடுவாய்
பகலில் விடுப்பெடுத்து
உறங்குவாய்

விளையாடும் பொழுது
தூங்கச் சொல்வாய்
தூங்கும் பொழுது
கொஞ்சி விளையாடுவாய்

'காக்கைக்கும் தன்குஞ்சு
பொன்குஞ்சு'
என்ற வாக்கிற்கு
உயிர்கொடுப்பாய்

'உலகி அழகி' என்று
உறுதியிட்டுச் சொல்வாய்

தும்மினால்
துடித்துப்போவாய்
விக்கினால் வீட்டிற்கு
மருத்துவரை அழைப்பாய்

இருதயம் துடிக்கிறதாவென
தூங்கும் பொழுதெல்லாம்
சோதனை செய்துபார்ப்பாய்

அடிபட்டுவிட்டால்
எப்படி வலிக்குமென்று
உன்னையே அடித்துப்பார்ப்பாய்

உன் உடல் உறுப்பு ஒன்று
உயிர் பெற்றுத்
திரிவதாய் உணர்வாய்

பாசம் பைத்தியமாய் மாறி
எதையும் செய்யத்
துணிவாய்

அன்பின் முன்னால்
சமுத்திரம்
சிறியதாய் தெரியும்

அழகின் முன்னால்
வான்மதி
தோற்கும் என்பாய்

தூங்கும் பொழுது
மொட்டுக்கு கட்டளை இடுவாய்
அமைதியாய் மலரச் சொல்லி

தென்றலிடம் சொல்லிடுவாய்
மெதுவாக வீசென்று.

அவள்
அருகில் இருந்தால்
உன் பெயரும்
வீட்டு முகவரியும்
அலைபேசி இலக்கமும்
மறந்திடுவாய்

சில வேளைகளில்
அவரையும் தான்.

பசி பொறுக்கத் தெரியாத
உன் வயிறும்
பட்டினிக்கு பழகிப்போகும்

பாடத்தெரியாத உனக்கு
தாய்பால் போல்
தாலாட்டு சுரக்கும்.

எறும்பும் கொசுவும்
உன் ஜென்ம எதிரிகள்

எச்சிலும் வியர்வையும்
இனிக்கும் தீர்த்தங்கள்.

சின்ன சின்ன அசைவும்
உன்னை தட்டி எழுப்பும்
அலாரம்.

யாருடைய ஆட்சி
என்பதும் மறந்து போகும்
உன்னை ஆட்சி செய்யும்
'அவளால்'.

அம்மா! என்றழைத்து
வாயில் ஏதோ ஒன்றை
திணிக்கும் பொழுது
அம்மாவை மறந்து
அம்மா! என்பாய்
அவளைப்பார்த்து.

புது உலகில் நுழைவாய்
அது சொர்க்கமாய் இருக்கும்

எழுதியவர் : தாரகை (10-Mar-14, 10:49 am)
பார்வை : 357

மேலே