தொலைத்த பால்யம்

எதனாலும் கலைக்க இயலாத பின்னிரவின் தூக்கம்
வேலைமுடிந்து வரும் தந்தையின் சருவைத்தாள் பிரிப்பில்
தானாக கலைவது அனிச்சைச்செயலாயிருந்தது..

அதிகபட்சம் இருபது ரூபாய்க்கான சில்லறைகளையே கொள்ளும்
பாட்டியின் சுறுக்குப்பையும், அம்மாவின் சேலத்தளைப்புகளுமே
நான் கண்டிருந்த கட்டற்ற சொர்க்கம்..

அம்மிக்கல்லில் அடித்து நொறுக்கப்படும்பொழுது
சிதறும் தேங்காய்க்காய் காத்திருப்பேன் நான்..
வேண்டுமென்றே முரியையே சிதறடிப்பாள் ஆச்சி..

பம்பரம்.,கோலி.,கண்ணாமூச்சி.,
இலந்தை, கொடிக்காய் புளி.,மாங்காய் அடித்தல்
அத்தனையும் கோடைக்கால உச்சி வெயிலில் சாகசங்களே..

தாமிரபரணி கரையோரம் கோரைப்புல் விரித்து
மல்லாக்க படுத்து அரணா கயிறு மட்டும் அணிந்து
வானம் பாத்து களித்திருந்தது என் பால்யம்..,

இரும்புக்கை மாயாவியும் அதனுள் வைத்திருந்த,
கூடியவிரைவில் குட்டிபோட ஏதுவாயிருந்த மயிலிறகும்
வீடு மாறும்பொழுது என்பால்யம் தொலைத்தஅற்புதங்கள்..,

தொலைந்த ஆலமரம், எழுப்பிவிடும் கோழி,பாசக்கார பசுமாடு,
ஓளி வேகத்தில் பறந்த கனவுகள்,எதுவுமே இல்லை இப்போது
ஆச்சியோடு எல்லாம் புதைத்து விட்டு இருந்தேன்..,.

இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன்
என் பால்யத்துள் தொலைத்த என்னை..,
ஒருவேளை என் இறந்த ஆச்சியுடன்
என் பால்யத்தையும் புதைத்திருப்பேனோ..??????

எழுதியவர் : தொப்புளான் (11-Mar-14, 12:40 pm)
பார்வை : 241

மேலே