இறுதி ஊர்வலம்

முதுமையில் இளமை தேடும் எனக்கு
ஏற்ற இறக்கங்களில்
என் மீதே எனக்குக் கோபம் வரும்

எனக்காக அழுவதற்கு
நான் மட்டும் நின்றிருப்பேன்

நான் ஷாஜகான் இல்லை
எனக்கெப்படி
ஔரங்கசீப்புகள்

நான் எழுப்பிய மாளிகையே
என்னைச் சிறை வைக்கும்

சந்தேகப் பேயிடம்
சடுதியில் தோற்றுப் போவேன்

தண்டனைக்குத் தப்பித்த
தவறெனது
மறக்கப்படலாம்
மன்னிக்கப்படலாம்

குற்றஞ்சாட்டுவதில்
குறியாய் இருப்பேன்

தூக்கம் என்
பேராசைகளுள் ஒன்றாகும்

அனுபவப் பள்ளியின்
சராசரி மாணவன் நான்
அதிகமாய் வேதாந்தம் பேசுவேன்

அர்த்தமற்ற என் பேச்சை
அர்த்த சாஸ்த்ரம் என்பேன்

சாவடித் திண்ணைகளில் நானே சாணக்கியன்
உதவி செய்த கைத்தடி
உதறி நன்றி மறப்பேன்

கடந்த கால நினைவுகளில்
கடலளவு இன்பம் காண்பேன்


காரணமின்றி
கதையளக்கும் எனக்கு
மரணம் மணம் செய்விக்கப்படும்

அழுகை அறியாதவன் நான்

மூடிய கண் விடுத்து
முத்து முத்தாய் நீர் வடியும்
வாய்ப் பூட்டுச் சட்டம் விலக்கப்பட்டும்
பேசமாட்டேன்

உதடு வரை உயிர் வந்து
முனகிச் செல்லும்
அழுக்கு வேட்டி
அகற்றப்படும்
அலங்காரம் செய்யப்படும்
ஒழித்து வைத்த வட்டிப் பணத்திலிருந்து
ஒற்றைக் காசு மட்டும்
நெற்றியில் வைக்கப்படும்
திருடர் பயம்
இனி எனக்கேது
சந்தனக்கட்டையா
சவப்பெட்டியா ?
ராமரா ? பாபரா ?
மத மாச்சர்யமும்
மரித்துவிடும் என்னோடு

சாதித் தலைவன் நானும்
எரிக்கப்படுவேன்
அல்லது
புதைக்கப் படுவேன்

எழுதியவர் : ராசைக்கவிபாலா (19-Mar-14, 10:08 am)
Tanglish : iruthi oorvalm
பார்வை : 105

மேலே