- பெண்மை என் பேனா மை -காதங்கராசுவைப் பாராட்டி --குறள் யாப்பு--
குடிவந்தாள் தூக்கம் கெடுமாம்! வலித்தும்
துடிக்காதென் நெஞ்சம் தினம்!
முன்னர்நீ நிற்க, முடியாத சூரியனும்
தன்னை மறைத்துளான் தான்!
உந்தன் முகவரிக்குள் ஒவ்வொன்றாய் நான்தொலைத்தேன்!
எந்தன் முகவரியும் சேர்த்து!
பெண்ணே எனக்குள்,நீ பேனாவின் மையாவாய்!
எண்ணித்,தீ ராதென் எழுத்து!
கண்ணே! எழுகோல் கலந்தமசி யே!என்னுள்
எண்ணமே! நீதான் எழுத்து!
எந்தன் எழுதுகோலில் என்றும் மசி,நீயே!
அந்தம் எழுத்தில்,இல் ஆம்!
எழுதத்தீ ராதென் எழுத்து,நீ என்னுள்
ஒழுவாய் மசியாய் ஓர்!
கண்ணை அகற்றேன்,என் கண்ணாடி முன்,நின்று
பெண்ணை அதுகாட்டப் போம்!
திரும்பத் திரும்பவந்து தேடுவேன் ஆடி
விரும்புவாள் காட்ட விழைந்து!
எத்தனை நாள்வந்து எதிர்நின்றும் ஆடியே!
பித்திமுகம் காட்டுகிலாய் போ!
என்னுள் இருப்பவளை ஏன்காட்டாய் ஆடியே!
உன்முன் அகலேன் உணர்!
என்னைத்தான் காட்டுவாய்! என்னுள் இருப்பவளை
முன்காட்டு ஒரே,ஓர் முறை.
பின்னும் வருவேன் பித்திமுகம் காட்டுமட்டும்
என்,ஆடி யே!செல்வது எங்கு!
***
பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்மையும் எழுத வைக்கும் ஒரு உந்துதலாக அமையும்;
அதற்க்குச் சாட்சியாக மேலே உள்ள கவிதையை நான் எழுத உந்துதலாக -185016-என்ற எண்ணின் கீழ், -கா.தங்கராசு எழுதியுள்ள கவிதையிருந்தது.
இதுபோன்ற கவிதையின் எண்ணும் கவிஞரின் பெயரும் இதைப் படிப்பவர்கள் அவரையும் சென்று படித்து ஊக்குவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் கொடுக்கப்படுகிறது.
அவருக்கு எனது பாராட்டுகளாக இக்கவிதையை மட்டுமல்ல, எனது நன்றியினையும் சமர்ப்பித்து மகிழ்ந்து கொள்கிறேன்.
==== ======