வெடிக்கும் அத்தனைப் பூக்களும் எனக்காக

சிரிப்பொன்று உதிர்த்தாள்
சிறு புன்னகைப் பூவை
அவள் எனக்கென்று உதிர்த்தாள்..!!

செதுக்கி வைத்திருந்த
காதல் சிலைக்கு
நாணத்தால்
உயிர் கொஞ்சம் கொடுத்தாள்
அதில் நளினப்பூ அசைத்தாள்..!!

படபடக்கும்
பார்வை தன்னில்
கருப்பு வெள்ளை பூ பூத்தாள்
அதில்
காதல் வண்ணம்
பதுக்கி வைத்து
எனக்கு மட்டும் காட்சி தந்தாள்..!!

கருங்கூந்தல் நெளிவுகளில்
கனவுக்கொடி படர விட்டாள்
அனிச்சை இல்லா
ஒதுக்கல்களில்..
அரை நொடிநேர
அகிம்சை நாழிகையில்..
உலகின் அழகிய மலர் ஒன்றை
பூக்க வைத்து கொடுத்துப் பறித்தாள்..!!

பெருங் களிப்பு
உள் கொண்டாள்
எனை காணும் பொழுதுகளில்
மலர் வெடிக்கும் பூரிப்புடன்
செவ்விதழ் விரிப்புகளில்
தேன் படர்ந்த ஈரங்களில்
மனக் கிறக்கம் எனக்களித்தாள்..!!

அதன்
பொறுமையில்லா
சுவாசங்களின் வாசத்தில்
என் உயிரினையே
இழுத்துக் கொண்டாள்..!!

***

மொட்டுக்களாய்
மூடி வைத்தாள்
புன்னகை எல்லாம்
முடிந்து வைத்தாள்
வண்ணங்களை
ஒளித்து வைத்து
எண்ணத்தேன் சுரக்கவிட்டு
காதல் வாசம்தன்னை
எவரும் உணரா வண்ணம்
காத்திருப்பில் அடைத்து வைத்து
என்வரவை பார்த்திருந்தாள்..!!

இவை
அத்தனையும்
வெடிக்கவிட்டு
அதன்
கனம் கொண்ட
மனக் குனிவில்
அவள் காலடியில்
வேர் பதித்து நின்றிருந்தாள்..

எனைக் கண்ட பெரும் நொடியினில்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (20-Mar-14, 1:08 pm)
பார்வை : 124

மேலே