திருட்டு போக ஒண்ணுமில்ல

திருட்டு போக ஒண்ணுமில்ல...
=============================

சிறு பிள்ளையா இருக்கையில
சொப்பு வெச்சி வெளயாடும்போது
கூட இருந்தே வெளயாடிபுட்டு
அடுத்த வீட்டுப் பொண்ணு வந்து
தெரியாம எடுத்துப் போனா
என் அழகான சொப்பு திருட்டு!!!

பள்ளிக் கூடம் போகையில
மக்கு பய ஒருத்தன்
பரீட்சை நேரத்துலதான்
நேரம் பாத்து அடிச்சிபுட்டான்
முத்து முத்தா எழுதி வெச்சேன்
என் நோட்டு புத்தக திருட்டு!!!

வெடலப் பருவத்துல
வெகுளியாத்தான் இருந்தப்ப
கண்ணுக்கே தெரியாத மனச
கூடவே படிச்ச பய
சொல்லாமத்தான் கொத்திப் போனான்
புரியாத வயசுல மனசு திருட்டு!!!

வேலைக்குப் போகையிலே
வெவரம் கெட்டு நானிருந்தேன்
நான் செஞ்ச வேலயத்தா(ன்)
தான் செஞ்சதா சொல்லிப்புட்டான்
நார பய நாசமா போக
பணியிடத்தில உழைப்பு திருட்டு!!!

வட்டிக்கு கடன் பட்டு
வாக்கப் பட நெனைக்கையிலே
மாப்பிள்ளை தாலிகட்டி வேட்டையாடி
கண்டெடுத்த வரதட்சிண பணம்
புகுந்த வீட்டுலதான் போனதெங்கோ
வரதட்சிணையா பணம் திருட்டு!!!

வேலக்கி போன புருஷனதா(ன்)
வளச்சிப் போட்டு மயக்கிபுட்டா
சக்களத்தியா வந்தவதா(ன்)
சாதுர்யம் நெறஞ்சவதா(ன்)
புருஷனத்தான் திருடிப் போனா
என் வாழ்க்கையே திருட்டு!!!

பறி கொடுத்து... பறிகொடுத்து
பதறித்தானே நா அழுதேன்
பட்ட துன்பம் கொஞ்சமில்லே
சொல்லி அழ ஆளும் இல்லே
என் நிம்மதியும் தூக்கமுந்தான்
விதி பறித்துப் போன திருட்டு!!!

நிம்மதிய வேண்டி நானும்
கோயிலுக்குத்தான் போயி நின்னேன்
என்னத்த நான் சொல்லுறது
காணலியே சாமியத்தான்
கள்ளப் பய கொள்ளையில
கோயிலில தெய்வமே திருட்டு!!!

மனமொடிஞ்சி நானுந்தானே
கோயில் வாசல் தாண்டி வந்தேன்
விட்டு விட்டு போன செருப்பு
கால் நடந்து போயிருச்சா
வாசலிலே காணலியே
போனதே என் செருப்பு திருட்டு!!!

இனி திருட்டு போக என்ன உண்டு
வாழ்க்க இருட்டு வழி ஆகிப் போச்சு
குருட்டு வழி நான் நடந்தேன்
திக்கு தெசை தெரியாமத்தா(ன்)

"உசிர் இருக்கு... உசிர் இருக்கு...
திருடிப் போவ நான் வரவா??"

கிசு கிசுப்பா காதோரம்
கேட்ட குரல் யாருதுன்னு
கண் இடுக்கி பாக்குறனே
என் காட்சியில எமராசா
எடுத்துப் போக சொல்லிபுட்டேன்
என் கழுத்துலதான் பாசக் கயிறு.....

எழுதியவர் : சொ. சாந்தி (3-Apr-14, 8:15 am)
பார்வை : 476

மேலே