உயிர் மணக்கும் ஒரு பொழுது

நெடுவாக மூச்செரிக்க - மனம்
முழுக்க வெடி வெடிக்க
இதயம் இரத்தம் உறைந்து
போன சதைக்கட்டியாய்
மாறும் முயற்ச்சியில்
மும்முரமாய்
ஈடுபட்டுக் கொண்டிருக்கும்

சுவாசக் காற்றுக் கூட
நாசியைத் தொட - அடம்பிடித்துக் கொண்டு
வரமறுக்கும் தருவாயில்
வலுக்கட்டாயமாய் மூக்குத் துவாரங்கள்
அதை உள்ளிழுக்கும்

நுரையீரல் சுவர்களில் முட்டி மோதிக் கொண்டு
உருமாறி பின் வெளிவரும் பொழுதுகளில்
பெருமூச்சாய் உருவெடுக்கும்

ஒருமுறை சுவாசித்த
களைப்பாறும் பொழுதுகளில்
மறுமுறை சுவாசிக்க
உடல் மறுத்துவிடும்

இதுவரை வாழ்ந்த வாழ்வெல்லாம்
நொடிப் பொழுதி
திரைப்படமாய் ஓடிக்கொண்டிருக்கும்
விழித்திரை அதை மனதுக்கு மட்டும்
வெளிக்காட்டும்

இறைவனிடம் இன்னும் சில நாட்கள்
கடனாய் கேட்டு மனம் மண்டியிட்டு
மன்றாடும்
உடலின் உலர்ந்து கொண்டிருக்கும்
கலங்கள் கூட கண்ணீர்விடும்

கண்விழித்துப் பார்க்கையில்
காலங்கள் பறிபோயிருக்கும்
இமை மூடுகையில்
இன்னுமொருமுறை
இமை திறக்க முடியுமா என
மனது சந்தேகித்தே சலனப்படும்

ஒவ்வொரு மனிதனும்
மனத்தால் வேறுபட்டாலும்
உயிர் மனக்கும் பொழுது
ஒன்று தான்

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (5-Apr-14, 2:12 pm)
பார்வை : 111

மேலே