முனிவரின் கதை கேட்க வாருங்கள்
எங்கெங்கு தேடினாலும் என்னைபோல
எண்ணிலடங்க பிரச்சினைகள் உள்ள
மனிதனை பார்க்கமுடியாது என்று
மனச்சோர்வுடன் மலைத்து இருந்தேன்
மனம்விட்டு பேசி ஆறுதல் வேண்டி
முனிவர் பெருமான் அணுகி நின்றேன்
பொறுமையாக எல்லாம் கேட்டபின்
உனக்கு தீர்வு கதைதான் கேள் என்றார்
ஓராயிரம் காலம் தவமாய் தவமிருந்து
நூறாயிரம் வானவில் பார்த்து ரசிக்கும்
அற்புத வரம் பெற்ற நான் மமதையில்
அனைத்தையும் கண்டுகளிக்க அமர்ந்தேன்
வான்மழை வெறித்து கார்முகில் விலக
வானவில் பார்த்து பரவசம் அடைந்தேன்
பத்தாவது வானவில் பார்த்த பொழுது
புத்தியில் ஒரு உண்மை உரைத்தது
எண்ணிலடங்க வானவில் பார்த்தாலும்
யாவற்றிலும் வர்ணங்கள் ஏழு மட்டும்தான்
பிரச்சனைகள் மலை அளவு ஆனாலும்
அலசிப்பார்த்தால் தீர்வு கையளவுதான்
பளீரென்று அறைந்தது போல் உணர்ந்தேன்
சுளீரென்று புரிந்தது என்று உரைத்தேன்
என்னதான் புரிந்தது சொல்லமுடியுமா
என்று நிதானமாக முனிவர் கேட்டார்
பன்னாட்டு இசைக்கருவிகள் இசைக்கும்
பலநூறு கலைஞர்களின் சிம்போனியிலும்
ஏழே ஏழு ஸ்வரங்களின் சப்தம் மட்டுமே
என்னாட்டவர்க்கும் காதில் கேட்கமுடியும்
ரசித்தார் சிரித்தார் ஆசிர்வதித்தார் இனிமேல்
பிரச்சனைகள் ரசிக்க மனம் பழகிவிடும் என்றார் ...