நம்பிக்கையில்லா நம்பிக்கைகள்
நம்பிக்கையில்லா நம்பிக்கைகள்
வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருப்பது என்பதே “நம்பிக்கை”யின் அடிப்படையில் சென்று கொண்டிருப்பதுதான். இந்த ‘நம்பிக்கை’ எதன் அடிப்படையில் சொல்லப்படுகிறது? என்னும் கேள்விக்கு ‘உயிரியியல்’ வாழ்வியலை உதாரணமாக எடுத்து கொள்வோம்.’இயற்கை’ வகுத்து வைத்த கூற்றுப்படியே ஒரு உயிர் உலகில் வளர்ந்து இனப்பெருக்கம் செய்து முடிவில் இயற்கையிடமே சென்று விட வேண்டும். இந்த நியதிப்படியே ஒவ்வொரு ஜீவராசியும் இயற்கையின் கூற்றுப்படியே சென்று கொண்டிருக்கின்றன. மனிதர்கள் உட்பட.
இது இயற்கை உயிர்களுக்கு அளித்த நம்பிக்கை, என்னால் உருவாக்கப் படும் நீ எப்படி வாழவேண்டும்? என்ன உண்ண வேண்டும்? அந்த உணவு சைவமா அசைவமா? அல்லது இரண்டும் சேர்ந்து உணவாக எடுத்து கொள்ளும் உயிரியா? அதற்கு தேவையான எல்லா வசதிகளையும் இயற்கையே இந்த பூமியிலும், ஆகாயத்திலும் கடலிலும் உயிர்களுக்கு ஏற்படுத்தி உள்ளன.
ஏன் தான் படைத்த உயிரிகளிண் உடல்களிலே கூட உணவை உறிஞ்சி அல்லது உண்டு வாழக்கூடிய உயிர்களையும் இயற்கை படைத்திருக்கிறதே கொசு, அட்டை, பாக்டீரியாக்கள், நுண்ணியிரிகள், இன்னும் எத்தனையோ உயிர்கள்
நம்பிக்கை, அவநம்பிக்கை, இரண்டு மட்டுமே இருக்கும் மனித சமூக வாழ்க்கையில் அது என்ன நம்பிக்கையில்லா நம்பிக்கை?
விழித்து எழும் எல்லா உயிர்களும் இன்று நம் வாழ்க்கை நிச்சயம் என நினைத்து தன் வாழ்க்கையை தொடங்குகின்றன. இது அதனதனின் நம்பிக்கை, என்றாலும் இயற்கையின் நோக்கம் அதற்க்கு வேறு விதமாய் இருக்கும் போது இது நம்பிக்கையில்லா நம்பிக்கைதானே.
சரி மனிதர்களின் சமூக வாழ்க்கைக்கு வருவோம், ஜோசியத்தை நம்புபவர்கள், நம்பாதவர்கள் இரு பிரிவு என்றாலும் ஜோசியத்தை நம்பமாட்டேன் என்று பொது வெளியில் சொல்லி அதனடிப்படையிலேயே எல்லா காரியங்களையும் செய்பவர்கள். இவர்களை என்னவென்று சொல்லலாம்?
உலகத்தின் இயக்கங்களே நம்பிக்கையின் அடிப்படையில் நகர்ந்து கொண்டிருந்தாலும் அந்த நம்பிக்கை எப்பொழுதும் நம்பிக்கையில்லா நம்பிக்கையாகவே இருக்கும் வாய்ப்பு உண்டு.
இதை விபத்து, மரணம் என்று மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டிய அவசியமில்லை. சின்ன சின்ன விசயங்களும் கூட இதனடிப்படையில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு தேர்வில் எண்பது மதிப்பெண் வாங்கியவன் சொல்வது தொன்னூறு வரும் என்று நினைத்தேன் என்றால் அவனது நம்பிக்கை சற்று குறைந்து போனது எனலாம். அவனே எப்படியும் பாஸ் மார்க் வந்துடும்னு நினைச்சேன், ஆனா இவ்வளவு வருமுன்னு நினைக்கலை இது அவனது நம்பிக்கை தான் தேர்வு பெறுவிடுவோம் என்று அதே நேரம் எதிர்பாராமல் நல்ல மதிப்பெண் கிடைத்துவிட்டது, இது நம்பிக்கை தந்த ஊக்கம் என்று கொள்ளலாம். மற்றொருவன் நான் ‘பாஸாவானேனான்னு, பெயிலாவேனான்னு தெரியாது, ‘பாஸ்’ அப்படீன்னா கட்டாயம் நல்ல மார்க்குலதான் பாஸ் பண்ணியிருப்பேன். பெயிலாயிருந்தா ஒரு மார்க்குல இரண்டு மார்க்குல போயிருக்கும், இது அவனது நம்பிக்கையில்லா நம்பிக்கை. இதை அவன் நினைப்பானா? என்னும் கேள்விக்கு செல்ல வேண்டியது இல்லை, காரணம் நம்பிக்கையில்லா நம்பிக்கை என்பதற்கான உதாரணம் மட்டுமே.
இப்படி பார்க்கலாம், ‘கோள்கள்’ அனைத்துமே அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக நமக்கு தெரிந்திருக்கும் தகவல். நாம் வாழும் பூமி உட்பட. ஆனால் அனைத்தும் எந்த விதமான பிடிப்பும் இல்லாமல் எப்படி தானும் சுற்றி சூரியனையும் சுற்றுகின்றன? அதற்கு அடிப்படை காரணம் ஈர்ப்பு விசை (காந்த விசை) அதனால் அவைகள் நேர்கோட்டில் சுற்றி வருகின்றன என்பது போன்ற அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்து காட்டினாலும் நம் மனதுக்குள் இன்னுமே அதனை பற்றிய ஐயங்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதே நேரத்தில் அப்படி சுற்றுவதால்தான் இரவும், பகலும் வருகிறது, கால சூழ்நிலைகள் மாறுகிறது போன்ற பல சூழ்நிலைகளைகளை நம்புகிறோம்.
அப்படி எல்லாம் இல்லை என்று வாதாடுபவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சில உதாரணங்கள், உலகத்தை கடவுள்தான் படைத்துள்ளார் என்று நம்புகிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?. அந்தந்த இடங்களுக்கு (நாடுகளுக்கு) தகுந்தவாறு அந்த நாட்டு கடவுள்தான் இந்த உலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று நம்பும் மக்கள் எத்தனை பேர்?
மற்றபடி இந்த கட்டுரை மனித முன்னேற்ற சிந்தனைகளை குறைப்பதற்காக சொல்லப்பட்டவை அல்ல. உன்னால் முடியும் என்று தீர்க்கமாக நம்புகிறவர்கள், அதே நேரத்தில் அதைத்தான் நம்பி இருக்கிறேன் என்னும் எண்ணத்தை வளர்க்கவேண்டாம் என்பதே இதன் உண்மை.
சே..நான் எவ்வளவு நம்பினேன், இது போன்ற கழிவிரக்கமான பேச்சுக்களை கேட்டிருக்கிறோம் அல்லவா? அந்த நம்பிக்கை வைக்கும்போதே மனதுக்குள் ஒரு ஓரமாய் எதிர்மறை சிந்தனையையும் கொண்டு வந்து நம்பிக்கை பொய்த்து போனால் மாற்று உடனடியாக மேற்கொள்ளப் படவேண்டும் என்னும் எண்ணத்தை வளர்த்து கொள்ளலாம் அல்லவா?
இதை இப்படி பாருங்கள் தங்களுக்கு பிறந்த மக்களை எப்படியாவது நல்லபடியாக உருவாக்கிவிடவேண்டும் என்று தாங்கள் உழைத்து சம்பாதித்ததை எல்லாம் செலவு செய்து அவர்களை உருவாக்குகிறார்கள். உருவான மக்கள் தங்களை உருவாக்கியவர்களை கவனிப்பார்கள் என்பது எந்த நம்பிக்கையின் அடிப்படையில்?
தங்களுடைய மக்களை(வாரிசுகளை) நம்பி எதிர்காலத்தில் இருக்க கூடாது, அவர்களை உருவாக்கி விடுவதும், எதிர்காலத்தில் நம்மை பாதுகாத்து கொள்ள ஏற்பாடுகளை செய்து கொள்வதும், நல்லது என்று அந்த தம்பதிகள் மேற்கொள்ளும் உத்தியை “நம்பிக்கையில்லா நம்பிக்கைகள்” என்று சொல்லலாமா?
இயற்கை நமக்கு உணர்த்தும் பாடமும் அதுதான். நம்பிக்கை வையுங்கள், அதே நேரத்தில் அந்த நம்பிக்கையின் மீது நம்பிக்கை யில்லாமலும் (மாற்று யோசனை) இருக்க வேண்டும் என்னும் பாடத்தை ஓவ்வொரு சூழலிலும் கற்று கொடுத்து கொண்டேதான் இருக்கிறது.