அவன் வழி தனி வழி – பகுதி 2 - இறுதிப்பகுதி

மாலை 5.00 மணி.

பணியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள். மேனேஜர், அக்கௌன்டன்ட் மற்றும் சீனு, மேனேஜர் அறையில் அமர்ந்திருந்தனர். மூவர் முகத்திலும் கவலை. அதிலும் அக்கௌன்டன்ட் முகத்தில் ஈயாடவில்லை.

மேனேஜர் பிரச்சினை என்ன என்பதை மீண்டும் விவரித்தார். “இப்போதைய நிலவரப்படி, 5 வரவுகள், ரூ.8 லட்சம் அளவில் போன மாதத்தில் வங்கியின் கோவில் கணக்கிற்குள் வரவு வைக்கப் படவில்லை.. ஆனால் கோவிலுக்கு தரப்பட்ட ஸ்டேட்மெண்ட் படி, இந்த பற்றுக்கள் வரவு வைக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. எல்லாம் வெளியூரு செக்குகள். .

நிச்சயமாக கோவில் பணம் கையாடப் பட்டிருக்கு.அதிலே சந்தேகமேயில்லை. ஆனால், யார் செய்தது? இதைத்தவிர வேறே ஏதேனும் கையாடல் வெடிக்குமான்னும் தெரியலை.”

சீனு கூறினான் “ சார், எனக்கென்னமோ இந்த காரியத்தை கண்ணன்தான் செய்திருப்பான்னு தோன்றுகிறது.”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

சீனு விவரித்தான். “கண்ணன் தான் வெளியூர் செக்குகள் அனுப்புதல், வரவு வைத்தல் வேலைகளை கவனித்துக் கொள்கிறான். அந்த ஏரியாவில் தான் இப்போ கையாடல் நடந்திருக்கு. அப்புறம் இன்னொரு விஷயம். கோயில் கணக்கு அவனது கவுண்டர் இல்லைன்னாலும், கோயில் கணக்கு முழுவதும் கண்ணன் கண்ட்ரோலில் தான். 10 நாட்களுக்கு முன்பு கூட ஸ்டேட்மெண்ட் வேண்டும் என்று என்னிடம் கேட்டான். அவன் எதுக்கு கோவில் அக்கௌன்ட் விஷயத்தில் இவ்வளவு ஈடுபாடு காட்டணும்?”

அக்கௌன்டன்ட் கனைத்தார். “ சார், எனக்கு கூட கண்ணன் பத்தி சந்தேகம் தான். கண்ணனுக்கு தெரியும், கோவில் போன்ற நிறைய வரவு மற்றும் வெளியூர் டொனேஷன் செக்குகள் வரும் அக்கௌண்டில், இந்த மாதிரி கையாடல் அவ்வளவு எளிதில் வெளியே தெரியவராதென்று. கோவில் அக்கௌன்ட் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். எப்போதும் மூணு நாலு கோடிக்கு மேல் நிலுவையில் இருப்பதால், யாரும் இந்த திருட்டை கவனிக்க மாட்டார்கள். கொஞ்ச நாளில் சரி செய்து விடலாம் என நினைத்திருக்கலாம். அப்புறம், அவன் கொஞ்சம் செலவாளி, கொஞ்சம் கடன் தொல்லை என கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் இந்த காரியத்தை அவன் செய்திருக்கக்கூடாது?”

மேனேஜர் “இல்லே அக்கவுண்ட்டன்ட், கண்ணன் கொஞ்சம் வசதியான வீட்டுப்பையன். டிரஸ்ட்டீ வீட்டு சம்பந்தம் வேறே பேசறது அவனுக்கு தெரியும். அப்படி இருக்கும் பொது, அவன் எதுக்கு இப்போ போய் இந்த மாதிரி செய்யணும்? தெரியலை, ம்ம்.. ஆனால்..., நீங்க சொல்றதும் சரியாகத்தான் படுகிறது.”

ஒரு நிமிட யோசனைக்கு பிறகு, மேனேஜர் சொன்னார் “சீனு, ஒண்ணு செய்யுங்க, உடனே கோயில் ஆபீசுக்கு போன் பண்ணி, இந்த 5 கிரெடிட் விஷயமா, அவங்க கிட்டேயிருந்து பேங்க் ஸ்டாம்ப் இருக்கிற சல்லான் கவுண்டர்பாயில் கேட்டு வாங்குங்க. சாமர்த்தியமாக, சந்தேகம் வராதபடி கேளுங்க”

“சார், நான் மத்தியானமே கேட்டு வாங்கிட்டேன். இந்தாங்க கோவில் ரசீது/கவுண்டர்பாயில். இதிலே எல்லாத்திலேயும் கண்ணன் கவுண்டர் ரப்பர் ஸ்டாம்ப் தான் இருக்கு. அவனது இனிஷியல் /கையொப்பமும் இந்த வரவுகளிலும் இருக்கு.”

“சரி! அப்படியானால் இந்த டாகுமெண்ட்களை பத்திரப்படுதுங்க. நான் ஹெட் ஆபீஸ்க்கு விஷயத்தை சொல்லிடறேன். போலீசுக்கு சொல்லணுமான்னு தெரியலை. ஹெட் ஆபீசையே கேட்டுடறேன்.”

கண்ணன் ரொம்ப நல்லவன், கெட்டிக்காரன்னு நெனச்சேன். இப்படி ஆயிடுத்தே? அங்கலாயித்தார், மேனேஜர். ஹெட் ஆபீசில் குடை குடைன்னு குடைவார்கள், கோவில் பிசினஸ் கையை விட்டு போயிடும், ப்ரோமோஷன் அம்பேல். என்ன ஒரு கஷ்ட காலமடா சாமி!

***

இரண்டு நாள் கழித்து அக்கவுண்டன்ட் மேனேஜரை தனியாக பார்த்து ரகசியமாக சொன்னார். “ சார், எனக்கு சீனு பேரிலே சந்தேகமா இருக்கு சார்! ஏன்னா, அவன் கிட்டே தான் பிரிண்டர் இருக்கு. கம்பூட்டர் ஆபீசர் வேறே. எதுக்கும் உங்க காதிலே போடலாமேன்னு நினைச்சேன் சார்”

அதற்கு அடுத்த நாள் சீனு மேனேஜெரை தனியாக வந்து பார்த்தான். “ சார், தப்பா எடுத்துக்கலன்னா ஒன்னு சொல்லலாமா? அக்கௌண்டன்ட் சார் தான் தனியாக வங்கிலே இருக்கிறார். அன்னிக்கு கூட பார்த்தேன், ராத்திரி பத்து மணிக்கு, வங்கிலேருந்து போறார். சொல்லனும்னு தோணித்து சார்“

இரண்டு பேரின் சந்தேகத்துக்கும் மேனேஜர் தலையாட்டினார்.

***

ஒரு வாரமாயிற்று. கண்ணன் வங்கிக்கு வரவில்லை. 100 கி.மீ. தள்ளி திருச்சியில் அவன் வீட்டிற்கு ஆள் அனுப்பியாகிவிட்டது. ஊரிலிருந்து வந்தவுடன் சேதி சொல்வதாக அவனது அப்பா உறுதியளித்தார். ஹெட் ஆபீஸ்க்கு விஷயம் போய்விட்டது. லெட்டர் மேல் லெட்டர். போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பதை கொஞ்சம் தள்ளிப் போடும் படி உத்திரவு வந்து விட்டது.

***

ஒரு பத்து நாள் கழித்து:

மேனேஜர் மும்முரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்த நேரம். வாசலில் யாரோ டக் டக் என்று தட்டினார்கள். “சார்! சார்! உள்ளே வரலாமா? – குரல் கேட்டு நிமிர்ந்தார். ஆச்சரியம். வாசலில் கண்ணன் நின்று கொண்டிருந்தான். பின்னாடியே அக்கௌன்டன்ட்.

“என்ன கண்ணா ! எங்கே போயிட்டே, இவ்வளவு நாள் காணோம்? இப்படி பண்ணிட்டியே?” ஆரம்பித்தார் மேனேஜர்.

“சார்!, பத்து நாள் விடுப்பு எடுத்திருந்தேன். முந்தா நாள்தான் எனக்கு சேதி வந்தது. சார், இந்த கையாடல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு இதிலே ஒரு சம்பந்தமும் இல்லே!”

“என்னப்பா சொல்றே நீ? உன் பேரிலே சார்ஜ் ஷீட் பண்ணி பதில் வாங்கி அனுப்பச்சொல்லியிருக்காங்க? நீ செய்யலேன்னா, யாரு செஞ்சா?”

“அதான் தெரியலே சார், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் எந்த தப்பும் செய்யலேன்னு நிருபணம் பண்றேன்! ”

“அது முடியாது கண்ணா, ஒண்ணு செய்யலாம், இந்த குற்றத்திற்கு நீ காரணமில்லைன்னு விளக்கம் எழுதிக் கொடு, ஹெட் ஆபீசுக்கு அனுப்பி வைக்கிறேன். என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்”

“சரி சார், அப்படியே ஆகட்டும்” –கண்ணன்.

கண்ணன் தனது சீட்டில் சென்று அமர்ந்தான். வேலை பார்க்க ஆரம்பித்தான். மற்ற உழியர்கள் அவனிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்தனர். அவனது நெருங்கிய நண்பர்களும் கூட அவனிடம் பேசுவதை தவிர்த்தனர்.

அடுத்த நாள், கண்ணனது விளக்கத்தை மேனேஜர் ஹெட் ஆபீசுக்கு அனுப்பினார்.

***

மூணு நாட்களுக்கு பிறகு, ஹெட் ஆபீசிலிருந்து, விசாரணைக்காக ஒரு சீனியர் அதிகாரி, வந்து சேர்ந்தார். மேனஜரிடமிருந்து ஆரம்பித்து ஒவ்வொருவராக விசாரணை செய்தார். அக்கவுண்டன்ட், சீனு ஆகியோரை குடைந்தார். கண்ணனை கேள்வி மேல் கேள்வி கேட்டு கிழித்தார். கண்ணன் நடவடிக்கைகளை பற்றி, மற்ற உழியரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அவனது நண்பர்களை தனித்தனியாக கூப்பிட்டு விசாரித்தார். கணினியில் துருவி துருவி ஏதேதோ பார்த்தார். ஒரு இரண்டு நாட்களுக்கு பிறகு, திரும்பி ஹெட் ஆபீஸ் போய்விட்டார்.

***

இரண்டு மாதம் கழிந்தது.

டிரஸ்ட்டீ அன்று காலை வங்கிக்கு வந்திருந்தார். அவர் கண்ணனை தேடவில்லை. கண்ணன் இருக்க மாட்டான் என அவருக்கு தெரியும்.

நேராக மேனேஜர் அறைக்கு சென்றார். மேனேஜர் விசாரித்தார் “வாங்க சார் ! வாங்க ! புது மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்?”

டிரஸ்ட்டீ வாயெல்லாம் பல். “ என் பொண்ணோட கொடைக்கானல் போயிருக்கிறார், தேனிலவுக்காக” மகிழ்ச்சியோட சொன்னார். “நீங்கதான் கல்யாணத்திற்கு வரல்லியே?”

“ஆமா சார், தவிர்க்க முடியாத காரணமாக சென்னை போகவேண்டி வந்துவிட்டது”

“அப்புறம், வேறென்ன விஷயம்?”

“நம்ப அக்கௌன்டன்ட் சேலத்திற்கு மாற்றலாகிபோய் விட்டார். சீனு தான் இப்போ அக்கௌன்டன்ட். எனக்கும் சென்னைக்கு மாற்றல் வரும் போலிருக்கு. நாங்க இல்லேன்னாலும், உங்க மாப்பிள்ளை இருப்பார், கோயில் அகௌண்டை பார்த்துப்பார்.” சிரித்தார் மேனேஜர்.

“சரி, சீனுவை பார்த்து,என் வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பறேன். நீங்க உங்க வேலையை பாருங்க”.சிரித்துக்கொண்டே விடை பெற்றார் டிரஸ்ட்டீ.

***

கொடைக்கானல்.

“ஏன் கொஞ்சம் யோசனையாக இருக்கீங்க?” கண்ணனின் புது மனைவி மீனா , ஆதுரத்துடன்.

“ஒண்ணுமில்லே! வங்கியிலிருந்து போன் வந்தது. அந்த நினைவிலே மூழ்கிட்டேன்”

“கேக்கணுமின்னு நினைச்சிட்டிருந்தேன்! பாங்க்லே உங்க வேலை போக இருந்ததாமே? என்ன ஆச்சு?”- மீனா அவனது பக்கத்தில் வந்து அமர்ந்து அவனது கையை தன் கையுடன் இணைத்துக் கொண்டாள்.



“ரவின்னு எனக்கு ஒரு நண்பன்.. எனது பக்கத்து சீட். நாங்க ரொம்பவே க்ளோஸ். உங்க அப்பாவோட கோவில் அக்கௌன்ட்லே கையாடல் பண்ணிட்டான். என் போதாத நேரம், நான் மாட்டிக்கேட்டேன். பழியை எம்பேரிலே போட்டுட்டான்”

“அதெப்படி பண்ண முடியும்?- மீனா

கண்ணன் விவரித்தான் “கோவிலுக்கு வரும் வெளியூர் செக்குகளை நான் வாங்கி என்னுடைய டிராயர்லே போடற வழக்கம். பக்கத்து சீட்லே இருக்கிற ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் செய்யற வழக்கம் எங்களுக்குள்ளே இருந்ததாலே, நம்பிக்கை பேரில் டிராயர் திறந்தே வைப்பேன். நான் இல்லாத நேரத்தில், கோவில் வரவு இருக்கும் சீட்டை கொஞ்சம் கெமிக்கல்ஸ் போட்டு மாற்றி, தனது பினாமி அக்கௌன்ட் நம்பர் ,பேர் எழுதி வைத்து விடுவான் போலிருக்கு. வரவு அந்த அகௌண்டுக்கு போய்விடும். வேலை பளுவில் நானும் கொஞ்சம் அசட்டையா இருந்திட்டேன். அக்கவுண்டன்ட் சாரும் பார்க்கவில்லை”

“அடபாவி, இது எவ்வளவு நாளா நடந்துகிட்டிருக்கு ?”

“இப்பதான், ஒரு மாசமா, என் பக்கத்து சீட்டுக்கு வந்த பிறகு. ஆரம்பிச்சிருக்கான்.! நூறு வரவில், ஒன்னு இரண்டு குறைந்தால், கோவில்லே யாரும் கண்டு பிடிக்க மாட்டாங்கன்னு நெனைச்சான்.”

“கோவில்லே இந்த வரவு வரல்லைன்னு கண்டு பிடிக்கலையா? அவங்க பணம் தானே? அவங்களுக்கும் பொறுப்பு இருக்கில்லே? ”

“கணக்கை அவங்க மாசம் ஒரு தடவைதான் சரி பார்ப்பாங்க. அங்கேயும், ரவி என்னை உபயோகப் படுத்திகிட்டான் மீனா. திடீர்னு, உங்கப்பா கோவில் ஸ்டேட்மெண்ட் கேட்டப்போ, சீனு சார் கிட்டேந்து நாந்தான் வாங்கி வெச்சேன். அதை பார்துகிட்டிருந்த ரவி, ஆனால், நான் கொடுத்திடறேன்னு சொல்லி, ரவி தான் என்கிட்டேயிருந்து வாங்கிட்டு போய் , அதை கொடுக்காமே , வேறே ஒரு ஸ்டேட்மெண்ட் ஒண்ணு தயார் பண்ணிக் கொடுத்துட்டான். என்னென்ன கோவில் வரவை தனது பினாமி அக்கவுண்டுக்கு மாத்தினானோ, அத இவனோட ஸ்டேட்மெண்ட்லே வரவா காமிச்சுட்டான். ”

“அட பாவி! அப்புறம் என்ன ஆச்சு?”

“உங்கப்பா அந்த ஸ்டேட்மெண்ட்டில் ஏதொ சந்தேகம் கேக்கபோக, மேனேஜர் திருட்டை கண்டு பிடிச்சுட்டார். முதலில், அவருக்கு என் பேரிலே தான் சந்தேகம். ஹெட் ஆபீஸ்லேருந்து வந்த என்குயரி ஆபிசர் தான், கோயில் அகௌன்ட்லே திருவிளையாடல் பண்ணது ரவின்னு கண்டு பிடிச்சார்”

“அவருக்கு எப்படி தெரிஞ்சுது, ரவிதான் இதெல்லாம் செஞ்சிருக்கன்னு?

“என்குயரி ஆபிசர் ரொம்ப கில்லாடி. கம்ப்யூட்டர் எக்ஸ்பெர்ட். எல்லாருடைய நடவடிக்கைகளையும் கவனிச்சிருக்கார். என்னை பத்தி, ரவி பத்தி விசாரிச்சிருக்கார். என்னையும், ரவியும் வேலை செய்யற போது கண் காணிச்சிருக்கிறார். என்னை துருவி துருவி கேள்வி கேட்டார். ஏனோ தெரியலே, நான் தப்பு செய்யலே, உண்மைதான் சொல்றேன்னு அவருக்கு தோணியிருக்கனும். அப்புறம், அந்த இரண்டு மாச கம்ப்யூட்டர் ரெகார்ட் எல்லாம் பாத்து, அந்த 8 லட்சம் கோவில் பணம் எந்த அக்கவுண்டுக்கு திருப்பப் பட்டிருக்குன்னு கண்டுபிடிச்சார். அதுக்கப்புறம், விசாரணையிலே அதட்டிக் கேட்டப்புறம், ரவியே குற்றத்தை ஒப்புக்கிட்டான். அவசர தேவையாம். கோவிலை, பாங்கை ஏமாத்தறது சுலபம்னு நினைச்சான். தானே மாட்டிகிட்டான்”.

“சரியாய் போச்சு போங்க! ஆமா, இதை சீனு ஏன் கண்டு பிடிக்கலை?”

‘சீனு சாருக்கு கம்பூட்டர் அவ்வளவா தெரியாது மீனா. அவரு புதுசு. ஏதோ சொல்லிக் கொடுத்ததை செய்வார். எல்லாத்துக்கும் பயப்படுவார். அவ்வளவுதான்”

“நல்ல பேங்க் போங்க!”

கண்ணன் கொஞ்சம் பெருமையாக “வங்கியை ஏமாத்தறது அவ்வளவு ஈஸி இல்லே தெரியுமா? எங்கயாவது மாட்டிப்பாங்க !”

“போதுமே! நீங்களும் உங்க பாங்கும் !” – சிரித்தாள் மீனா. “ஆமா? இப்போ ரவி எங்கே?”

“பேங்க் வேலையிருந்து பணி இடைவேளி நீக்கத்திலிருக்கிறான். வேலை போயிடுச்சாம். அதான் இப்போ பேங்க் லேருந்து போன். பாவம். எல்லா பணத்தையும் அவன்தான் திருப்பி கட்டணும். அநேகமாக ஜெயிலுக்கு கூட போகவேண்டிவரும்.”

“சரி, சரி, அவன் எப்படியாவது போகட்டும், இனி மேலாவது நீங்க ஜாக்கிரதையாக இருங்க” – வழி சொல்ல ஆரம்பித்தாள் மீனா.

இனிமேல் காலம் முழுக்க அட்வைஸ் பண்றது அவளது உரிமை. தலையாட்டி கேட்டுக் கொள்ள வேண்டியது அவன் கடமை. வேறே வழி?.

இதிலே ரவியோட வழி தான் தனி வழி!!! எல்லோரும் ஆபிஸ் வீடுன்னு அலைஞ்சா, இவன் மட்டும் கோர்ட், ஜெயிலுன்னு அலையறான்.

***முற்றும் ..(விழிப்புணர்வு கதைகள்)

எழுதியவர் : முரளி (12-Apr-14, 9:07 am)
பார்வை : 155

மேலே