இடைவெளி

நீலமலைதனின் ஓசைக்குயில் ஒன்று
நின்று பாடுது -அதன்
கோலக்குர லிசை கொள்ளும் அழகென்ன
காண ஏங்குது- தினம்
சாலச்சிறந்தெழில் காணும் மலர்சிரித்
தாடும் வேளையில் - மனம்
காலக் கடலிடை ஆடும் அலை யெனக்
காணத் தோன்றலேன்

மேலைத் திசையினில் வானக்கதிர் மறைந்
தெங்கு போனது --அதில்
சோலை கொண்டமரம் மீதிலுள்ள குயில்
சோர்ந்து வாடுதோ - கதிர் .
மூலைத்திர ளிருள் முற்றும் அகன்றிட
மெல்லத் தோன்றுமா - அங்கு
ஓலைத்திரை யசைத்தோடும் தென்றல் சுட்டு
உள்ளம் மாறுமோ

காணும் பொழுதயல் கற்பனை யென்றொரு
கானம் கேட்டது- அது
பேணும் சுகம்நெஞ்சில் பிள்ளை..மனதென
பேச வைத்தது - மங்கை
பூணும் மலர்த்தொடை பூவில் எழும் மணம்
போலும் நீரொடு குளிர்
வீணு முழன்றலை ஆடும் நளினமென்
ஆகும் வாழ்விது

நாணும் அழகொடு பூவை முகமென
நாளின் வானடி தனும்
கோணும் வளை வில்லின் கோலமெனுமடி
கொண்ட செம்மையில் ஒரு
தூணும் இதுவெனத் தோன்றும் உரமொடு
தூய மன்னவன் தனை
காணும் நிலைகொண்ட காரிகையோ இந்த
கண்கள் மூடுமோ

கண்ணின் மணியெனக் காணக்கிடைத்தை
கண்ணும் காணுமோ - பக்கம்
எண்ணி அணைந்தெங்கும் ஏகும்நிழல் தனும்
என்னை நீங்குமோ - ஒரு
தண்மலர்ச் சோலையில் தாவிமுயல் சென்ற
தன்மை யாகுமோ சொலும்
பண்ணில் சினமெழப் பாடும் தொழில்தனைப்
பக்கம் வைப்பதோ

எழுதியவர் : கிரிகாசன் (12-Apr-14, 11:04 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 85

மேலே