வான் கொடையே கோடை மழையே வருக வருக

குளம் குட்டை வறண்டாச்சு
கேணி எல்லாம் வற்றியாச்சு
நிலத்தடி நீர் குறைஞ்சாச்சு
நிலமும் வெடிப்பு விட்டாச்சு ...!!

மழை பெய்து நாளாச்சு
தண்ணீர் பஞ்சம் வந்தாச்சு
குடத்தில் தூக்கி சுமந்திட
உடம்பில் தெம்பும் போயாச்சு ....!!

வான்மழையே கண் திறந்திடு
வறட்சி போக்க வந்திடு
வளம் மீட்டுத் தந்திடு
வரமாய் மண்ணில் சிந்திடு ....!!

அமிர்த வர்ஷினி ராகம்பாட
அமுதமாய் நீ பொழிந்திடு
கருமுகிலாய் திரண் டெழுந்து
கருணை கூர்ந்து பெய்திடு ....!!

கோடை வெப்பம் தணித்திடவே
கோடை மழையாய் கொட்டிடு
மாரி வேண்டி வணங்குகிறோம்
மனம் இரங்கி வழங்கிடு .....!!

வெயில் வருத்தும் வேளைதனில்
வெப்பம் தணிக்க விழுந்திடு
வங்கக்கடலில் மையம் கொண்டு
புயல் மழையாய் அடித்திடு ....!!

நில மகளை நீராட்ட
நிச்சயம் நீ இறங்கிடு
செடி கொடியை செழிப்பாக்க
வான் கொடையே பெய்திடு .....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Apr-14, 2:12 pm)
பார்வை : 295

மேலே