பிடிக்காத நிர்வாணம் - கே-எஸ்-கலை

உண்மையைச்
சொல்கிறேன் !
அது "அழகானது"

முக்காடு போட்ட
முழுமதி பாவைப் போல
முழுதாய் யாருக்கும்
முகம் காட்டாது !

தப்பித் தவறி
எட்டிப் பார்த்தால்
துப்பித் தூற்றி
பூட்டிப் போடுவார் !

எந்த நாட்டிலும்
எந்த வீட்டிலும்
பலாத்கார மறைத்தலில்
மானம் காத்து
மகுடம் சூட்டும் !

அது...
கசக்கும் கரும்பு !
புளிக்கும் பொங்கல் !
உறைக்கும் அதிரசம் !
நாறும் பாரிஜாதம் !

சரிந்த பின்
மட்டுமே நிழல்தரும்
அரூப ஆலமரம் !

புத்தியுள்ளவன் வீட்டில்
ஆயுள் கைதி !
கத்தியுள்ளவன் வீட்டில்
பணயக் கைதி !
ஒன்றுமில்லாதவன் வீட்டில்
செல்லப் பிள்ளை !

யாருக்கும் அதன்
நிர்வாணம் பிடிப்பதில்லை
அதனால் தான்
"பொய்" என்ற ஆடை
போட்டு விடுகிறார்கள் !

ஆனாலும்
இன்னும் அது
நிர்வாணமாய் தவழும்
மழலைகளின் நெஞ்சிலும்
பேச்சிலும் மட்டும் !

உண்மையைப் பற்றிய உண்மையிது !

எழுதியவர் : கே.எஸ்.கலை (12-Apr-14, 4:23 pm)
பார்வை : 197

சிறந்த கவிதைகள்

மேலே