இறந்தகால எச்சங்கள்

சீழ்பிடித்துக்
கடைக்கோடி வீதியாகிப்
போனபோதும்
மறக்கமுடிவதில்லை
மறைக்கவும்
மன்னிக்கவும் ...

திரைவிலக்கிய
அனுபவத் தலைகளின்
சத்தமிடா
உதடுகளிலோ
வறண்ட நியாங்களின்
ரேகைப் பிளவுகள்

கண்ணீருக்குத் தூங்கித்
தீர்ந்துபோன
இரவுகளின் வெளிச்சம்
நாளைதான்
அதுவே
மீண்டுமான போது...

பறத்தல் அறியாத
பறவையானது - காற்றுக்குள்
உந்திய தடத்தினை
அழிக்கும் தன் நகங்களையும்
அறியாது ...

சேற்றுச்
செந்நீரில் மிதக்கும்
முத்துக்களாய் - பல
புன்னகைகள் கறையோடு
அக்கரையில் ...
அக்கறையில்லா இக்கரை !

நலமறிந்த நேரம்
சுயநலமாகியது
கல்லுக்குள் ஈரமெனக்
கசிந்திடும்
விரதம் போலானது

போர்க்களத்தில்
வெட்டுண்ட வாள்களைத்
தேடியெடுக்கும்
காற்றின் மடமைக்குள்ளோ
நெடுவழியில்லை

மூடிவிட்டபின்னும்
சந்தேகக் கதவுகளின் திறப்பு
இந்நேரமும்
இறக்கவேண்டும் - அன்றியும்
ஏழாம் எட்டாம்
அறிவுகளுக்கும் பலனில்லை

நாளைய
தாரகைகளையும்
வரவேற்கும் வானம்
இன்றேபோல் - நிகழ்ந்தபின்
இறந்தகாலமாய் ..........

எழுதியவர் : புலமி (14-Apr-14, 12:12 am)
பார்வை : 133

மேலே