நிலவின் மதுமடை

கெண்டைக ளிரண்டு கொண்டலை கின்றக்
==கேகய மவளது நயனம். பார்வைக்
குண்டுக லெரியுங் குற்றம் புரிந்தே
==கொன்று குவிப்பது சயனம். அந்த
தண்டலை முகிழ்த்த தன்பனிப் பூக்களின்
==தன்மை நிகர்த்தொரு நளினம். காதல்
வண்டலை வதற்கே வாலிப மெடுத்து
==வசந்தம் பொழியுதே வானவில் வதனம்.
பிறையினை எடுத்து நுதலென இணைத்துப்
==பிரம்மன் படைத்த நவரதி. இதயச்
சிறையினி லடைத்து விடுதலை மறுக்கும்
==செயல்புரிந் திடாதொரு கொடுவிதி கொண்டே
நிறைகுட மாகியே நித்தமும் ஜொலித்து
==நெஞ்சினில் வழிந்திடும் கனிநதி. வாழ்க்கைத்
துறைமுக மீதொரு கப்பலாய்த் தரிக்க
==துடிக்கும் அலையுடன் தவிக்கும் இளமனம்.
தகடினை யொத்த தளிர்க்கொடி இடையது
==தாங்குவ தெங்கனம் இமயம்? வியந்தம்
முகடடி வாரம் முகம்புதைத் திடவே
==முனிவனின் அடிமனம் புழுங்கியே அன்று
அகலிகை மறுபடி பெண்ணாய் சமைந்திட
==அடியது பதித்த இராமனின் பாதமாய்
சுகமென அவளது பார்வை பட்டே
==சுந்தர வாழ்வில் சுவையுறத் தவிக்கும்
அடவியின் குகைதனில் மறைந்துள கூட்டினுள்
==அடர்ந்துள தேனியின் அருஞ்சுவைத் தேனடை
புடவையில் மூடியே பொதிந்துள பூமகள்
==பொன்னெழிற் மேனியின் பெருஞ்சுவைத் தானடைந்
திடவெனத் தவித்திடு மிளமனக் குமுறலைத்
==திருமண மெனுமொரு நறுமணப் பூநடை
நடந்திட வரந்தரும் நன்மொழி யாயவள்
==நவின்றிட திறக்குமே நிலவதன் மதுமடை.
கேகயம்= மயில்
தண்டலை =பூங்கா