தாளாத தனிமை தானெழுதிய கொடுமை---அஹமது அலி----

என் அறையின்
வெற்றிடங்களில்
வெறிச்சோடிக் கிடக்கும்
தனிமை!
(=)
வெற்றிடங்களிடையே
வெட்டிக் கதை பேசியே
பொழுது கழிக்கும்
பொழுதும் கழியாமல்
போட்டி போடும்!
(=)
அறையின்
அறுபக்கமும்
வெறுப்பேற்றி சீண்டும்
பொறுப்பின்றி
தனிமை நினைவு தூண்டும்!
(=)
ஆற்றுப்படுத்தி
விசிறிடுமந்த மின்விசிறி
இடவல புறங்களில்
விசிறியே தேற்றும்!
(=)
உழைப்பின்
அயர்ச்சியை போக்க
முயற்சிக்கும் படுக்கை!
(=)
தலையணைகள்
அணைபோட மறுத்து
ஏகாந்தத்தை
ஏகோபித்த வண்ணம்
மொட்டைப் பாறைகளாய்
சுட்டெரிக்கும்!
(=)
வியர்வைச் சுரப்பிகளும்
விதி நொந்து
உப்புத் திரவத்தை
உடலெங்கும் உகுக்கும்!
(=)
ஆணியில் தொங்கும்
கைச்சட்டையும் கால்சட்டையும்
என்னையே சிலுவையில்
ஏற்றினார் போல்
அச்சுறுத்தும்!
(=)
சுவற்றுப் பல்லியொன்று
தனிநிலை கண்டு
உச்சுக் கொட்டி
பரிகசிக்கும்!
(=)
கால நேரம் பாராது
அரட்டை அடித்த கணினி
குறட்டை விட்டு தூங்க
ஓடி விளையாடிய சுண்டெலி
சுருண்டு படுத்துக் கொள்ளும்!
(=)
அழைப்பாரற்றுக் கிடக்கும்
அலைபேசி தொலைவில்
மெளன நோன்பை
மோனையாக அனுசரிக்கும்!
(=)
அறையெங்கும்
விரவிக் கிடந்த
சிரிப்பொலிகளும்
முடிவிலி உரைகளும்
முட்டி மோதி திரும்பும்!
(=)
கதவிடுக்கின் வழி
வெளிக்காற்று
என்னை உளவு பார்த்து
ஜன்னல் வழியே
சேதி அனுப்பும்!
(=)
இப்படியே தொடரும் நிலையில்
தனிமையின் தவிப்புகளை
தாளாமல் நினைவுகள்
தானெழுதிப் பார்க்கும்!