இயற்கையொடும் இணைந்த வாழ்வு---நற்றிணைச் செய்திக் கட்டுரை----05

இயற்கையொடும் இணைந்த வாழ்வு: (நற்றிணைச் செய்தி)----05
திணை மருதம் ..
இயற்றியவர்..ஆலங்குடி வங்கனார்

முயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக்
கயக்கணக் கொக்கின் கூம்புமுகை அன்ன
கணைக்கால் ஆம்பல் அமிழ்துநாறு தண்போது
குணக்குத்தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும்
கயற்கணங் கலித்த பொய்கை ஊர


(சொற்பொருள்.)
- நெருங்கிய பிடியானையின் செவிபோன்ற பசிய இலையையும் குளத்தின்கணுள்ள அழகிய கொக்குப் போல வளைந்து கூம்பிய முகையையும் அவற்றிற்கொத்த திரண்ட தண்டினையுமுடைய ஆம்பலின்;
- அமிழ்து நாறும் மெல்லிய மலர் வைகறையிலே கீழ்த்திசையின் கண்ணே தோன்றுகின்ற வெள்ளியைப் போல இருள்கெட மலர்ந்து நிற்கும்; கயல்மீன் கூட்டஞ் செருக்கிய பொய்கையையுடைய ஊரனே!;

அரும்பதம்:
முயப்பிடி =நெருங்கிய பெண்யானை ; பாசடை =பசிய இலை; கயக்கணம் =குளத்தில் தோன்றும் கூட்டம்; கயற்கணம் = மீன்கூட்டம்; கலித்த = செருக்கிய, பெருகி நெருங்கிக் காணப்படும்;

யானையின் செவி ஆம்பல் இலைகளுக்கும், கொக்குகள் ஆம்பலில் கூம்பிய அரும்புகளுக்கும்,
இருண்ட வானம்போலுள்ள பொய்கையில் வெண்ணிறமாக மலரும் ஆம்பல் பூக்கள் இருண்ட வானில் ஒளிவிடும் வெள்ளியைப் போலவும் உள்ளதாகப் புலவர் கற்பித்துள்ள நயம் உணரவேண்டிய ஒன்று.
==== =======
பீடுடை விமான வீடுகள் எடுத்துக்
காடழி கின்ற கேடுடை நாட்களில்
கோடுடைக் கரிகள் கூட்டமாய் எழுந்தே
ஓடியும் உழந்தும் ஊர்ப்பயிர் மேய்ந்தும்
நாடயல் விளங்கும் நன்னீர்க் கலையும்
ஏடவிழ் கற்பனை இதுபோல்
கூடுமோ எழுதவும் குமுறுவோர் இதயமே!
==== ======
நற்றிணைச் செய்தி முற்றும்.

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (20-Apr-14, 10:09 am)
பார்வை : 1104

சிறந்த கட்டுரைகள்

மேலே