கடைசி அத்தியாயம்

நீண்ட நேரம் பொழிந்த மழை அப்போதுதான் சற்றே ஓய்ந்திருந்தது. ஜன்னல் கம்பிகளில் பளிங்கென உருளும் மழைத் திவலைகள் காற்றிற்குத் தடுமாறி சிதறி கீழே விழுந்தது. மழைக்குப்பின் ஏற்பட்ட திடீர் புழுக்கத்தால் ஜன்னலைத் திறந்த இளங்கோ தன் ஆள் காட்டி விரலால் ஜன்னல் கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மழைத் துளிகளை ஓரத்திற்கு வழித்தான். சாலை வெறிச்சோடிக்கிடந்தது. மாலை அடங்கும் நேரம் என்பதால் பறவைகள் குறுக்கும் நெடுக்குமாக தத்தம் கூடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. ஜன்னலின் ஓரத்தில் மழைக்கு தலை குனிந்தபடி இருக்கும் மருதாணிச் செடியிலிருந்து அதன் பூக்களின் வாசம் அறை முழுவது பரவியது. அறையின் மூலையில் போடப்பட்டிருக்கும் மேஜைக்கருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான் இளங்கோ.

இரண்டு நாட்களுக்குள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தான் கொடுக்க வேண்டிய தொடர் நாவலின் கடைசி அத்தியாயத்திற்காக வெகு மும்முரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். மிகப் பிரபலமான வெகு ஜனப் பத்திரிக்கை ஒன்றில் அவனுடைய “பெண்” என்ற தொடர்கதை ஒரு வருடத்திற்கு மேல் வந்து கொண்டிருந்தது. ஒரு பெண் தன் திருமண வாழ்க்கையில் எதிர் கொள்ளும் வேதனைகளையும், தோல்விகளையும் கோர்வைப்படுத்தி அனுபவ ரீதியாக இளங்கோ எழுதிக் கோண்டுவந்தான். வாசகிகளின் அடி மனதைக் கிளர்த்திப் போட்டு தன் கதையின் கதாநாயகி மாதவியின் அவலங்களை மிகச் சாதுர்யமாக பதிவு செய்திருந்தான். ஒரு பெண் எப்படியெல்லாம் துன்பப்பட்டால் வாசகிகளை ஈர்க்குமோ அதற்கு ஈடுகொடுத்த்து அவனின் அபாரமான எழுத்தின் வசீகரம்.

ஒரு வருடமாக விதவிதமான சித்திரவதைகளை மற்றவர்களிடம் கேட்டறிந்தும், வலைதளத்தின் மூலமாகக் கண்டறிந்தும், மாதவியை ஒரு நடை பிணமாகவே மாற்றி விட்டான் இளங்கோ. மன்றாடச் செய்வது, தொடர் மௌனம், பட்டினி போடுதல், சுய கௌரவத்தை தயக்கமில்லாமல் சேதாரமாக்குதல், சுடு சொற்களை உபயோகித்தல், தனிமைப்படுத்துதல், போன்ற பல சித்திரவதைகளை மாதவிக்குக் கொடுத்தான். ஒவ்வொரு வாரமும் புதுப்புது செயல்பாட்டு முறைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.

ஒரு சமயம் மாதவிக்குத் தன் குடும்பத்தினர் இழைக்கும் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுந்த அவளின் கோழைக் கணவன் குடும்பத்தினரிடம் எதிர்த்துப் பேசுவதாக எழுதியனுப்பிய பிரதியைக் கண்டு கொதித்துப் போன பத்திரிக்கை ஆசிரியர், ஆயிரக்கணக்கான வாசகர்களின் மன நிலையை இது போன்ற மன மாற்றம் மிகவும் பாதிக்கும் என்று அஞ்சி, தன் பங்கிற்கு மேலும் சில சித்திரவதைக் குறிப்புகளை மேற்கோள் காட்டி, கதையின் போக்கை மாற்றி எழுதச் சொன்னார். தான் படைத்த கதாநாயகி மாதவி எதிர்கொள்ளும் கொடுமைகளைக் காணச் சகியாத இளங்கோ, தொடரை இடையிலேயே முடித்துக்கொள்ள ஆசிரியரிடம் அனுமதி கேட்க, அவரோ மிகவும் திகைப்பிற்குள்ளாகி இளங்கோவிற்கு நீண்ட அறிவுரை வழங்கினார்.
“இங்கே பார், இளங்கோ நீ மிகவும் குழம்பிய மன நிலையில் இருக்கிறாய் என்று எண்ணுகிறேன். உன் தொடர் கதையை வாசகர்கள் வாசிப்பதற்குக் காரணம், உன் கதாநாயகி மாதவியின் சாயலிலும், கதை நிகழ்வுகளின் பிரதிபலிப்பிலும் ஏராளமான வாசகிகள் தங்களையே அடையாளம் காண்பதால்தான். கண்களில் நீர் பெருக உன் கதையைப் படிக்கும் வாசகிகள் தான் உனக்கு மூலதனம். நீ ஒன்றும் சமுதாயத்தில் நிகழாதது பற்றி எதுவும் எழுதவில்லையே. கதையின் போக்கு கொஞ்சம் ஈர்ப்பாக இருப்பதற்காக நிகழ்வுகளைக் கொஞ்சம் அதிகப்படியாக வாசகர்களின் உணர்வுகளைத் தூண்டும் அளவிற்கு வர்ணனை செய்திருக்கிறாய். இந்த அற்புத நடை, கதை சொல்லும் பாணி எல்லோருக்கும் அவ்வளவு சுலபமாக வாய்த்து விடாது. இப்போதாவது புரிந்துகொண்டு தொடர்ந்து எழுது”

ஆசிரியர் கூறுவதிலும் நியாயம் இருப்பதாகத்தான் இளங்கோவிற்கு தெரிந்தது. ஏதோ ஒரு வேகத்தில் தன் கதை பிரசுரமாக வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக அவன் மாதவிக்கு அளித்த கற்பனை சித்திரவதைகள் அவனைப் பல இரவுகள் தூக்கம் இல்லாமல் ஒரு பைத்தியக்காரனைப் போல ஆக்கியது. ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு தொடர்ந்து எழுத அரம்பித்தான். சில சமயங்களில் கூடுதலாக் எழுதுகிறோமோ என்ற எண்ணம் வரும் போதெல்லாம் வாசகர்களிடமிருந்து வரும் பாரட்டுக் கடிதங்களும், தொலை பேசியழைப்புகளும் அவனை மேலும் எழுதத் தூண்டியது. தன் கதாநாயகி மாதவிக்கு அளிக்கப் போகும் சித்திரவதைகளுக்கு மாமியார், நாத்தனார்கள், கொழுந்தனார்கள், கணவன் என்ற வழக்கமான் உறவுகளைத் தாண்டி தூரத்து உறவினர்களையெல்லாம் கதையின் களத்திற்கு இளங்கோ அழைத்து வந்து வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினான். இப்போது கதையின் கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறான். மிதமிஞ்சிய கொடுமைகளால் மாதவி இறந்து போவதாக எழுதினால் வாசகிகளின் மனதில் தன் கதாநாயகி என்றும் நீங்காத இடத்தைப் பிடிப்பாள் என்ற நம்பிக்கையில் அவளுக்கு மரணத்தை எப்படியெல்லாம் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். மாதவியின் முறிந்த மணவாழ்க்கையை நேர்படுத்தி அவளுக்கு சகஜமான வாழ்க்கையை அளிக்க அவன் தயாராக இல்லை. வாசகிகளின் விருப்பமும் அதுவாகத்தானிருக்கும் என்று தன் வாதத்திற்கு நியாயம் கற்பித்துக் கொண்டான்.

கதையின் இந்த முடிவுதான் வாசகிகளை அதிகம் பேசவைக்கும் என்பதில் அசைக்கை முடியாத நம்பிக்கை வைத்தான். சிறுது நேரம் தூங்கி எழுந்தால் மனது தெளிவாகி ஒரு முடிவிற்கு வரலாம் என்று எண்ணியவன் கட்டிலை நோக்கி நடந்தான். கட்டிலிற்கு மேலே குறுக்காக அமைந்த மர உத்திரத்தை பார்த்தவனுக்கு திடீரென்று ஒரு யோசனை உதித்தது. மாதவி தூக்குப் போட்டுக் கொண்டு இறந்தால் கதையின் முடிவு எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தான். சித்திரவதை முகாமிற்கு தலைவனாகும் அனைத்து தகுதிகளும் இருந்த இளங்கோவிற்கு மாதவியின் இறப்பு வழக்கமான செய்தித் தாள்களில் வரும் சாதாரணமான இறப்பாக இருக்காமல் பலராலும் பேசப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தான். `

ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்தவனை சகஜ நிலைக்கு கொண்டு வந்தது ஒரு இனிமையான பெண்ணின் குரல். முகத்தை வேகமாகக் குளிர் நீரில் கழுவி, பூத்துவாலையால் துடைத்துக்கொண்டே கதவைத் திறந்தான். “இளங்கோவென்று இங்கே.........! என்று வார்த்தைகளை சங்கீதமக இசைக்கும் அழகிய பெண்ணைப் பார்த்தவனுக்கு நொடியில் ஏதோ பொறி தட்டியது. இந்தப் பெண்ணை எங்கேயோ இதற்கு முன் அவன் பார்த்திருக்கிறான். மிகவும் அவனுக்கு பரிச்சயமான முகம். அந்தப் பெண்ணுடன் வாழ்ந்தது போன்ற உள் உணர்வு அவனை குழப்பத்திலாக்கியது. . தன்னை சுதாரித்துக் கொண்டு “நான் தான் நீங்கள் தேடி வந்த இளங்கோ. நீங்கள்....! என்று கண்களை உயர்த்தி அவளை முழுவதும் அளந்தான். சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரைக் கடந்து அவள் வந்ததால் சேலையின் கீழ்ப்பகுதி முழுவதும் ஈரமாக இருந்தது. மேலும் அவனுக்கு மிகவும் பிடித்த வெளிர் நீல நிறச் சேலையைக் கட்டியிருந்தாள். நெற்றியில் இழையோடும் மெல்லிய சந்தனக் கீற்று, அளவான கண்மை, நிரந்தரமான புன்முறுவலுடன் :நான் உங்களின் எதிர் வீட்டில் இருக்கும் பாலாவின் ஒரே தங்கை. ஆண்டு விடுமுறைக்கு வந்திருக்கிறேன். உங்களைப்பற்றி அண்ணா கூறியவுடன் பார்க்க வேண்டும் போல் இருந்தது. உங்களின் வாசகியர்க்ளில் நானும் ஒருத்தி. உள்ளே வர அனுமதி கிடைக்குமா?” என்று அவனுக்காகக் காத்திருக்காமல் அவன் கைகளை உரிமையுடன் விலக்கி உள்ளே நுழைந்தாள்.

தானுண்டு, தன் அறையுண்டு, தன் பத்திரிக்கை அலுவலகமுண்டு என்று வாழ்கின்ற இளங்கோவிற்கு பாலா என்ற பெயர் துளியும் அறிமுகமில்லாத ஒன்று. “உங்களின் கதை முடிவு குறித்து அறிய மிகவும் ஆவலாக வந்திருக்கிறேன். என்னிடம் கூறுவீர்களா?” என்று கேட்டபடி கட்டிலில் வந்தமர்ந்தாள். “எனக்கு ஒன்றும் பிடிபடவேயில்லை. மனதைப் போட்டு இரண்டு நாட்களாகக் குழப்பிக்கொண்டிருக்கிறேன்.” என்றான் இளங்கோ. அவளின் நெற்றியிலிருந்து வழிந்து படர்ந்த கற்றை முடிகளிலிருந்து மழைத்துளிகள் கன்னத்தில் பட்டுத்தெறித்தது. . “ஒரு வருடத்திற்கு மேலாக மாதவி அனுபவித்த கொடுமைகளை எப்படி உங்கள் கடைசி அத்தியாயத்தின் ஒரு சில பக்கங்கள் மட்டுமே மாற்றியமைக்கும்?” என்று கேட்ட அந்த மழைப்பெண்ணிடம் தன் முடிவைக் கூறி அவளின் கருத்தினையும் கேட்கத் தீர்மானித்த இளங்கோ மீண்டும் பேச ஆரம்பித்தான். “மாதவி வாழ்வதற்கான நியாயமான ஒரு காரணமும் எனக்குத் தெரியவில்லை. அவள் இறந்து போவதுதான் கதையின் நிச்சயமான முடிவாக இருக்கும். வாசகர்களின் மனதில் நிரந்தரமாக மாதவி வாழவேண்டுமில்லையா?’ பேசிக்கொண்டிருந்தவனை இடை மறித்து “உங்கள் முடிவில் எந்த விதமான மாற்றமும் இல்லையே. நீங்கள் முழுமனதுடன்தானே இந்த முடிவை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?” என்று அவனின் முடிவை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள் அந்த மழைப் பெண்.

இளங்கோ லேசாக இருமியவுடனேயே அடுக்களைக்குச் சென்று மிளகு இஞ்சியைத் தட்டி, கஷாயத்தை நோடியில் தயாரித்து கண்ணாடி டம்ளளில் ஊற்றி அவன் முகத்திற்கெதிராக அன்பொழுக சிரித்தபடி நீட்டினாள். மிகவும் சூடாக இருந்ததால், அவளது முந்தானையால் டம்ளரை பிடித்துத் தந்தவிதம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. எவ்வளவு அன்பாக நடந்து கொள்கிறாள். அவளைத் திருமணம் செய்பவன் நிச்சயம் ஒரு அதிர்ஷடக்காரனாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினான். அவன் மனம் முழுவதும் அவளாகிப் போக நாற்காலில் சாய்ந்தபடி கஷாயத்தை மெதுவாக ஊதிக் குடிக்க ஆரம்பித்தான். தொண்டைக்குள் இதமாக இறங்கியது. சிறிது நேர செருமலிற்குப் பிறகு வந்த கொத்துக் கோழையை ஜன்னல் வழியாகக் காரித் துப்பினான். ஈரம் பரவிய உதட்டோரத்தை துவாலையால் துடைத்துக் கொண்டு மீண்டும் நாற்காலியில் வந்தமர்ந்தான்.

“என் கதையின் முடிவு உனக்கு பிடித்திருக்கிறதா? மாதவியின் முடிவு பலரால் பேசப்படவேண்டும். உனக்குத் தெரிந்தால் என் கதையின் முடிவை மெருகூட்ட சித்திரவதையின் உச்சக் கட்டமான மரணத்தை மாதவிக்கு எப்படி வழங்கலாம் என்று நீயே பரிந்துரைக்கலாம்.” என்றான் இளங்கோ. அவள் உடனே பதறியபடி “நான் ஒரு சராசரி வாசகி. உங்களின் அபிமான் ரசிகை. உங்களைப் போன்ற பெரிய எழுத்தாளருக்கு அறிவுரை கூறும் தகுதி நிச்சயம் எனக்கில்லை” என்று கூறினாள்.

திடீரென்று ஒரு முடிவிற்கு வந்தவன் போல வேகமாகத் தாள்களை அடுக்கி கதையின் முடிவை அவளின் முன்னிலையிலேயே எழுத ஆரம்பித்தான். எழுத்துக்கள் மங்கலாகிக் கொண்டே வந்தது. கண்களை ஒரு முறை நன்றாகக் கசக்கிக் கொண்டு மீண்டும் எழுத முயற்சித்தான். பதம் இழந்த கத்தியால் யாரோ தொண்டையை அறுப்பது போல உணர்ந்தான் இளங்கோ. அவனுடைய கைகள் கட்டுப்படுத்த முடியாமல் நடுங்கியது. மெதுவாக இருள் கண்களில் கவிழ அந்த மழைப் பெண்ணையே உற்றுப்பார்த்தவன் மிகவும் சிரமப்பட்டு சகஜ நிலைக்குவர முயற்சி செய்தான். நடுங்கும் விரலால் அவளை சுட்டிக் காட்டி அவளின் பெயரைக் கேட்டான். ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு “நான் தான் மாதவி” என்று அவள் கூறியதைக் கேட்டவுடன் இரண்டு கைகளையும் ஒரு சேரக் கூப்பி இருக்கையிலிருந்து வாயில் நுரை தள்ள தரையில் விழுந்து இறந்து போனான் இளங்கோ.

எழுதியவர் : பிரேம பிரபா (22-Apr-14, 7:03 pm)
பார்வை : 218

சிறந்த கவிதைகள்

மேலே