காற்றில் மிதக்கும் சிறகுகள் - எண்ணப்பகிரல் 5

சில முடிவுகள் எடுப்பது எளிதாகவே இருந்துவிடுகின்றது ..ஆனால் அதை நிறைவேற்றுவதில் , அதற்குண்டான எளிமை அவ்வளவான துணிச்சலைப் பெற்றிருப்பதில்லை...யோசிக்க யோசிக்க இதன் முடிவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் ஒரு தொடக்கப் புள்ளியை இட்டபொழுது , கடந்துவந்த பாதையினை ஒரு முறை திரும்பி நின்று வெறித்துப் பார்க்கும் கால்களை நினைவின் முன் கொண்டுவந்துவிடுகின்றது ஒரு முடிவு...முடிவென்பதும் மற்றொரு புள்ளிக்கான தொடக்கமே..தொடங்குகின்றேன் ஒரு முடிவையும் அதனோடு முடித்து வைக்கின்றேன் ஒரு தொடக்கத்தையும் …....

தோழி தாரகையும் நானுமாக முதன் முதலில் அருகருகே அமர்ந்துகொண்டு புன்னகைத்துக்கொண்ட தருணங்களைக் கலைத்துபார்க்கையில் அங்கு வேறொருவரின் முதல் புன்னகையும் ஒரு கேள்வியும் ஒளிந்துகிடக்க வேண்டுமே ..என்னவாக இருக்கும் அது ..அந்த கேள்வி ?!

ஒரு புத்தகத்திற்கு இருக்கும் மதிப்பானது , அதை எதனுள் அடக்கிக் கூறுவது என்பதையும் விளக்கமுடியாது..ஒரு எழுத்தின் மாற்றம் பிழையாகிவிடும் சொல் போல , ஒரு சொல்லின் மாற்றம் பிழையாகிவிடும் வரியைப் போல ...இப்படியே கூறிக்கொண்டு போகையில் நிற்கின்றது ஒரு வழிமறிப்பு ...யாதுமாகிக் கிடப்பது நானே என்றபோது ,எதனாகிய ஒன்றில் விரிவேனோ அதனிலே அடங்குவேன் என்கின்றது தாள்களின் வாசம் ...அவை எழுத்தாக்க வாசம் ….....எழுத்தாகிப் புத்தகமான புத்தம்புது வாசம் …...

நமது தளத்தில் முன்னதாகவே தொகுப்புகள் குறித்தான செய்திகள் பவனி வரும்பொழுது , ஒரு எதிர்பார்ப்பும் உணர்வறியாது உள்சென்று தடம் பதித்திருக்கும்....சின்னதாக தலைகாட்டட்டுமே இங்கும்..ஆம் இதோ ஒரு நிமிடம் …...
மேடைக்குக் கீழே விழாவின் இறுதி நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் , அடுத்து எங்களுக்கான தொகுப்பு வெளியீடு குறித்த செய்தியொன்று சட்டென்று காதுகளைக் கூர்பார்க்க , ஒருங்கிணைந்த கவனமொன்றில் இதோ மீண்டும் எட்டிப்பார்கின்றது ஒரு ஆவல் …..நமது தொகுப்புகள் எப்படி இருக்குமென்ற எதார்த்த அசைவுகள்....இதுவாகத்தானே இருக்கமுடியும் கண்களுக்கான விருந்தாய் …

ஒவ்வொரு தொகுப்புகளாக , உங்கள் கண்களுக்கும் இப்போது விருந்தாகட்டுமே …

1.அலகுகளால் செதுக்கிய கூடு
2.எனக்கென்று ஒரு முகம் இல்லை
3.செங்காத்து வீசும் காடு

இதுமட்டுமா ? பிறகு ?

கொஞ்சும் மழலையின் எச்சில் நீர் போல் இனிமையும் இல்லை.. இனிப்பும் இல்லை...மழலையின் மொழியறியும் முன்னே விழியறிந்துகொள்ள விழைந்ததொரு இலக்கியச் சுவை …. திரு.அகன் அவர்களின் "தொட்டில் சூரியன்" - பேரத்தமிழ் இலக்கியம் ..புதுவைக்கு இந்தச் சூரியனின் முதல் விடியல் முதல் பேரத்தமிழ் இலக்கியமாக …...அடடே பிடியுங்கள் பார்க்கலாம் ...என்ன ?வண்ணத்துப் பூச்சிகள் அதோ அதோ ….எங்கு ?இங்கு தான் …... திரு.கன்னியப்பன் அய்யா அவர்களின் கவிதைத் தொகுப்பான "வகுப்பறை வண்ணத்துப்பூச்சிகள் " ...புதுக்கவிதைகளின் சிறகடிப்புகள் …..

சரி அதென்ன புன்னகையுடனான கேள்வி ?யாரது ?திருமதி .ஷ்யாமளா ராஜசேகர் ..தாரகையிடம் அறிமுகமாகிக் கொண்டவர் , அருகில் என்னைப் பார்த்துவிட்டு , தாரகை இது உங்கள் தங்கையா ?என்று கேட்டுவிட்டார்...ஹஹ்ஹா நாங்கள் இருவருமாக சிரித்துக்கொண்டோம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு ...அர்த்தமுடனே …....

பசி வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருக்கும் சமயம் அன்றுதான் உணர்ந்தேன்....அருகில் தாரகையை ஒரு வழி பண்ணியாயிற்று …...

தொகுப்பில் உள்ள அனைவருமாக மேடைக்கு அழைக்கப்பட்டு , தத்தம் தொகுப்புகளோடு , "தொட்டில் சூரியன்" மற்றும் "வகுப்பறை வண்ணத்துப் பூச்சிகள் "தொகுப்புகளுமாக மொத்தம் ஐந்து புத்தகங்கள் அடங்கிய விருந்து கண்களுக்கு …..ஒவ்வொருவராகப் பெற்றுக்கொண்டு இறங்க சிலரைக் காணவில்லை ...அந்தச் சிலருக்குள் இது எழுதுவோரும் அடக்கம் …...ஆமாம் அபி சார் எங்கே ?எங்களுக்கு உணவருந்தும் இடத்திற்கான வழியைக் கைகாட்டிவிட்டு , ஒரு புன்னகையோடு அதே புன்னகையோடு நின்றுகொண்டிருந்தார் .. பசியோடும் இருந்திருப்பார் .. இயல்பாகவே ஒரு பார்வைத் திருப்பம் இங்கு இருக்கவேண்டுமல்லவா ...கண்டோம் ... ஆனால் மனிதரைக் காணவில்லை ..விழாவின் இறுதிகட்ட நேரமாயிற்றே ...ஆரம்பம் எப்படியோ முடிவும் அதேபோல் சுபமாக இருக்கவேண்டுமே …...

ஒரு விடயம் பகிர்ந்தே ஆக வேண்டும் ….விழா முடிந்து அவரவர் வீடுகளுக்கும் ஊர்களுக்குமாக விடைபெற்றுக்கொண்ட போது விழாவில் சில தருணங்களை அசைபோட்டுக்கொண்டோம் ...அப்போது யாவருக்கும் ஒரே விடயம் பொதுவாகச் சுவையூட்டியது....அய்யா தமிழன்பன் அவர்கள் இறுதியில் மேடையிலாற்றிய உரை நிகழ்வு பசியையும் காணாமல்போகச் செய்ததே அது..அவ்வுரையின் சுவையை எண்ணப்பகிரலுக்குள் உருக்கிவிட முடியாது....மீண்டுமான வாய்ப்பினை எதிர்நோக்கலாமே …....

முன்பே ஒரு பதிவில் , சகோதரி திருமதி. சாந்தி அவர்கள் ஒரு பரிசோலைத் தயாரிப்பினைக் கொண்டுவந்திருந்ததாக கூறினேன் அல்லவா...அது மேடையில் அய்யா தமிழன்பன் அவர்களின் கையில் ...எனதருகில் அப்போது சாந்தி அவர்கள் எதையோ வாசித்தபடி இருந்தார்... நான் அங்கும் இங்குமாகப் பார்த்துக்கொண்டேன் ….சட்டென அவரை அழைத்துக் கூறியிருக்க வேண்டும்...ஆனால் கூறவில்லை....திரு. அகன் அவர்களுக்கு , திருமிகு.தமிழன்பன் அவர்கள் அப்பரிசினைக் கொடுக்க முன்வந்தபோது மேடையில் அதனை ஆக்கம் செய்தவர் பற்றிக் கூறுகையில் , வெடுக்கென தலை நிமிர்ந்த சாந்தி அவர்களின் முகத்திலும் , அகத்திலும் ஒரு வித பூரிப்பும் , இன்பமும் ,ஆவலும் எதிர்பாராமல் தொற்றிக்கொண்டது …...."எதிர்பாராமல் " என்பதற்காகவே நான் கூறவில்லை..அது இன்னும் நெகிழ்வு அல்லவா....அதைக் காணவும் முடிந்தது எதிர்பார்த்தது போல்.....

ஒரு நிகழ்ச்சியில் சொல்வதற்கென்றும் , பகிர்வதற்கென்றும் , காண்பதற்கென்றும் பல நிகழ்வுகள் முகமுரித்துக்கொள்வதுண்டு..இங்கு என்னாலான முகங்களைக் காட்டியிருப்பதன் மூலம் ஓரளவிற்கு நிறைவடைகின்றேன்...ஆனால் தேக்கங்களுடன் …....

இறுதித் துளிகள் .....அனைவரும் உணவருந்திவிட்டு விடைபெற்றுக்கொண்டோம் ...வயிற்றுக்கான விருந்துபற்றி சொல்ல முடியாது....சுவைக்கத் தான் முடியும்....நாவில் நிற்கும் சுவையுடன் மீண்டுமொரு பதிவினை நோக்கி இக்கணம் நானும் விடைபெற்றுக்கொள்கின்றேன்....

நன்றி ….....

(தொகுப்பு நூல்கள் குறித்தான விமர்சனப் பதிவுகளின் தொடர்பில் மீண்டும் இதனோடு இணைந்துகொள்வேன் …..)

எழுதியவர் : புலமி (24-Apr-14, 2:41 am)
பார்வை : 152

சிறந்த கட்டுரைகள்

மேலே