அகன் அவர்கள் தேர்ந்தெடுத்த சிறப்புக் கவிதை 1-சரவணா- விமர்சனம்

நீங்கள் செய்வீர்களா......?

நீங்கள் செய்தீர்களா.......?

சரி, யார் தான் செய்தார்கள்......?????????

5 வருடத்திருக்கு ஒரு முறை தூசி தட்டி புறப்படும் தேர்..... நசுக்கி போவது என்னவோ.... சாலையோரம் தூங்கி கொண்டிருக்கும் வாக்காளர்களைத்தான்....(பல) வாக்காளர்களும், பிரியாணிக்கும், 200 ரூபாய்க்கும் மன கண்ணாடியை தொலைப்பவர்களாக இருப்பதில்தான்....உதைப்பவன் காலிலேயே பந்தாய் கிடக்கும் அவலமும் தொடர்வதாக சொல்லும் சரவணாவின் கோபம்... தீபமல்ல.. தீப்பந்தம்....

நீ நல்லவனாக இருந்தால் உன் வேலையை மட்டும் சரியாக செய்தவனாக இருந்தால், எதற்கு மைக் பிடித்து மண்டியிட்டு பிச்சை எடுக்கிறாய் என்பது கிடுக்கி பிடி கேள்வி.... காதற்ற கனவான்களிடம் என்ன கேட்க....? அவர்கள் வாய் மட்டுமே இருக்கும் பொய் வாக்குறுதிகள்...

அதை செய்வேன் இதை செய்வேன் என்று கூறி, வேறு எதையாவது செய்து கொண்டு திரியும் பெருச்சாளிகள்.... பெருச்சாளிகள் வளர்ப்பது நமது பொழுது போக்கு.......பொய்யுக்கும் பித்தலாட்டத்துக்கும் அகராதி போட வேண்டும் என்றால் நம்மூர் அனைத்து கட்சிகளும்.. ஆளுக்கொரு புத்தகம் வெளியிடலாம்..... அத்தனை பொருத்தமான சொற்குவியல்களுக்கு சொந்தக்காரர்கள்.... அவர்களின் பெயர்கள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம்..... எண்ண ஓட்டங்கள் ஒன்றே தான்.... யார் ஜெயித்தாலும் தோற்ப்பவன் நகம் கருத்தவன்தான்....

நாற்காலிக்கு சண்டை போட்டு, மண்டை உடைத்துக் கொள்ளும் இவர்களை இன்னும் நம்பிக் கொண்டிருப்பது சுதந்திர இந்தியாவின் சாபக்கேடு....ஆங்கிலேயனிடம் அடிமைப்ப் பட்டே பழகிய அடிமை மனது இன்னும் அதன் சுகங்களை இழக்க தயாராக இல்லை.... அரசியல், சாக்கடை என்று சொல்லி விலகி நிற்பது நமது மேதாவித்தனம்...

சில பேர் தொலைகாட்சி பெட்டிக்குள் ஒளிந்து கொள்ள கிடைத்த விடுமுறை என்று கதவடைத்துக் கொன்லவதில் பிரகாசமாய் எரிகிறது.. கள்ள விரல்களின் கவுரவக் கொலைகள்........படிக்காதவன் செய்யும் தவறு அவன் படிக்கவில்லை என்பதோடு போய் விடும். படித்தவன் செய்யும் போது ஐயோ வென போய் விடுவான் என்பது பாட்டனின் வாக்கு.... வாக்குகள் உடைப்பதே நம் போக்கு.....

சரவணா திரி கிள்ளிக் கொண்டே செல்கிறார்.... வெடித்துக் கொண்டே வருகிறது மனக் குமுறல்கள்....

என் கடன் பணி செய்து கிடப்பதே ........ அது போய், என் பணி.... பணம் செய்து கிடப்பதே என்றாகி போன சூழலை வளர்தெடுக்கும் நம் தலைவர்களின் கழுத்தில், மாலைகள் ஒரு கேடு.... குதறப்பட்ட சாலைகளில் பிணம் போகினும் தடுமாற்றம்.... என்ன செய்ய.....? சுதந்திரம்.... பாடாய் படுத்துகிறது....பண்டமாற்று முறையை சுலபமாக்க கண்டுபிடிக்கப்பட்ட பணம்.... மனிதனை ஆள ஆரம்பித்ததன் விளைவு இது. எங்கும் ஊழல்.... எதிலும் வன்மம்.... எப்படியும் சுயநலம்.... ஓட்டு போட்டு மாற்றி விட முடியுமா ....? சரி.. யாருக்கு தான் ஓட்டு போடுவது.....? ஏதாவது நல்லது செய்திருந்தால் ஓட்டு கேட்டு பிச்சை எடுக்க வேண்டிய, தேவையே இல்லையே....சாராயக் கடைக்கு விளம்பரம் எதற்கு?

பூமி வெடித்த பாலம் பாலமாய்..... விவசாயி.... விழி வெடித்து வானம் நோக்கி அமர்ந்திருக்கிறான்.... சிறகடிக்கும் இயந்திரத்தில்....கண் கண்ணாடிக்குள் ஒளிந்து கிடக்கும் கண்களுக்கு வழியேது.... ம்... விழிதான் ஏது.....? கிராமத்தில் ஒரு நாளுக்கு 26 ரூபாயும், நகரத்தில் ஒரு நாளுக்கு 32 ரூபாயும் இருந்தால் அவன் ஏழை இல்லை.... என்று நம் சட்டம் சொல்கிறது..... விளங்குமா நம் தேசம்....?,விளங்க விடுவார்களா.... சட்டம் கொண்டோர்....?

ஒரு படத்தில் திரு கவுண்டமணி அவர்களும் திரு செந்தில் அவர்களும் மாறி மாறி தங்களைப் பற்றி கேவலமாக சொல்லிக் கொள்வதைப் போலதான்.... இங்கே, ஒரு ஆடும் கூத்து நடந்து கொண்டிருக்கிறது...... என்ன, காண சகியாமல், சரக்கடித்து கிடக்கிறது நம் சமூக விரல்கள்.... சுதந்திர இந்தியாவை கூறு போட்டு விற்பதில் இந்த அரசியல்வாதிகளுக்கும் அரசியலுக்கும், எத்தனை முறை ஏமாந்தாலும் முதல் முறை ஏமாருவது போலவே வரிசயில் நிற்கும் நாமும் துணை போவதுதான் நம் ஒற்றுமையின் வலிமை....அவர்களின் ஒற்றுமையின் வலிமையும் கூட.... கூட்டணி போட்டு தேர்தலில் நிற்பவர்கள் ஒரே கட்சியை வைத்துக் கொள்ளலாமே....! எதற்கு தனிக் கட்சி, தனிக் கொடி, தனி கொள்கைகள்....? தனித் தனியாக கூட்டுக் கொள்ளை என்பது இது தான்....மெய்ஞானம் தாண்டிய விஞ்ஞானம் இது,...(சித்தர்கள் இருந்தால் செத்தார்கள்)

காந்தியை இன்னும் எத்தனை முறை தான் கொல்லுவது....? வெறி கொண்ட பண பேயின் வீரியம்.... வெறும் காகிதமாய் நம்மை கிழித்தெரிந்து கொண்டிருப்பது வேதனை..... சத்திய சோதனை....ஓட்டுக்கு நோட்டு தரும் ஒவ்வொரு முறையும் காந்தி கற்பழிக்க படுகிறார் என்பது கசந்தாலும் உண்மை...உண்மைகளை வெகு சுலபமாக கடந்து விடும் மனநிலை கொண்டவர்கள் நாம்.... மட்டைப் பந்து ஒன்று போதாதா.... நம்மை இணைக்க?

ஊருக்கொரு கொடி..... கொடிக்கு பின்னால் நூறு கோடி...கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தவன் காணாமல் தேடுவது கோமணத்தை....மானம் போன பின் கோமணம் இருந்தால் என்ன... பறந்தால் என்ன...?-உலகமே 100 பணக்காரர்களுக்காகதான் இயங்கி கொண்டிருக்கிறது...... இந்தியாவே 10 பணக்காரர்களுக்காகதான் இயங்கி கொண்டிருக்கிறது....உலக நியதியை உடைத்தெறிந்த மனித வர்க்கம்... இல்லாமல் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை...

இது ஜனநாயக நாடு என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான் நமக்கு மிகப் பெரிய பொழுதுபோக்கு....என்ன செய்ய... அப்படி... பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறோம் ..... பணம் உள்ளவன் ஆளக் கடவன்.. இல்லாதாவன் வீழக் கடவன்....

சரவணாவின் வரிகளில் குருதி வழிவதைக் காண சகியாமல், நகம் அறுத்து துடிக்கும் சில பார்வைகளில் அழுதே சாகிறது நம் சுதந்திரம்.... இங்கே சாகவாது முடிகிறதே ...... அது வரை சுதந்திரம்.... சுதந்திரம் தான்.


"வரட்டி தட்டும் சுவத்துல வேட்பாளர் முகமடா....காத்திருந்து ஓட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா...புள்ள தூங்குது இடுப்புல, பூனை தூங்குது அடுப்புல, நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல...."-கபிலனின் கோபம்....வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல.... அது நகம் பிடுங்கப் பட்டவனின் கோர முகம்.....சரவணாவின் கோபத்தைப் போலவே....

சரவணா கை கொடுங்கள்.....விரலில் வழியும் குருதியை துடைக்க வேண்டும்......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (24-Apr-14, 11:52 am)
பார்வை : 187

மேலே