சிறப்புகவிதைத் தேர்வு-பருவப் பயணம்- கவிஞர் தனராஜ்

பருவப்பயணம்.! –கவிஞர் தனராஜ்-
கவிதை எண்- 190682
-------------

பாலகராய் இருந்தது முதல் பருவம் முற்றி,முதுமையை நோக்கிய பயணத்தின் சுவடுகளை பேசுகின்ற கவிதை.!
நகரத்தின் இறுக்கமான சூழலில்,வாழ்ந்து பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு,இயற்கை மலிந்துகிடந்த கிராமச்சூழலை எடுத்துக் காட்டும் கவிதையாக முதல்பார்வையில் மனதை அள்ளுகிறது இந்தக்கவிதை.

பூடகமற்ற,தொடர்ந்து நாம் பயன்படுத்துகின்ற எளிய தமிழ்ச் சொற்கள்,வாசிப்பவர் அதன் பொருளை நேரடியாகப் புரிந்துகொள்ளும் வகையில் உணர்த்திச் செல்லும் வரிகள்..,சந்தங்கள் மிகுந்து நின்று,ஒரு பாடலாக இதனைப் பாடிப்பார்;க்கலாமா..? என்ற ஆவலை ஏற்படுத்துகின்ற சொற்கட்டுகளாக நிற்கிறது இக்கவிதை.கவனமாக இதனை வடிவமைத்த வகையில் பாராட்டு பெறுகிறார் கவிஞர் தனராஜ்.

இனி கவிதையின் உட்கூறாக சில வரிகள்...,

தனித்து இயங்குகின்ற அறிவைப் பெற்றுவிட்ட வயதுக் காலத்தில், ‘இது வரை வாழ்ந்த வாழ்க்கை..’,என்று நினைத்துப் பார்க்கின்ற எல்லோருக்கும் ஏதோ சில அனுபவங்கள் மறக்கமுடியாதவையாக இருக்கத்தான் செய்கிறது.

அதுவும் பொதுவாழ்க்கையின் மீதான பார்வைக்குவிப்பு உள்ள படைப்பாளிகளுக்கு,காணுகின்ற காட்சிகள் யாவிலும்,தனது வாழ்க்கை,அல்லது அனுபவத்தின் ஏதோவொரு பதிவை அல்லது காட்சியை நினைவுக்குள் மீட்டெடுத்து,சில விநாடிகளில் ஒப்பிட்டும் பார்த்துவிடுகிறது.அதுதான் படைப்பின் வெற்றியாகவும் இருக்கிறது.

இந்த நிலையில்,கவிஞர் தனராஜ் அவர்களின் கவிதைக்கான கரு முளைத்த இடமாக சில சூழல்களை,இப்படித்தான் இருக்கவேண்டுமென நான் யூகிக்கிறேன்.

இன்றைய உலகமய,தாராளமய சூழலில், ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையும் பொருளாதார நிறைவை நோக்கிய போட்டியாகவே தயார் படுத்தப்பட்டு விட்டது. இந்தப் போட்டிக்கான தயாரிப்புகளில் எதிர்காலத் தலைமுறையான தமது குழந்தைகளை தயார் படுத்தும் முனைப்பிலேயே பெற்றோர்கள் இருக்கின்றனர்.கல்வி என்பது “சகல பரிமாணங்களிலும் சிறந்த அறிவு” என்பதை மறந்து,குழந்தையின் எதிர்காலம் என்பது “மதிப்பெண்களிலான கல்வியே” என்ற மூடத் தனத்திற்கு ஆளாகிவிடுகின்றனர் பெற்றோர்.

இதன் விளைவு..? முதலில் குழந்தைகளிடமிருந்து, குழந்தைத் தனத்தைப் பறித்துவிடுகிறோம். இவ்வாறு பறிக்கப்பட்ட குழந்தைத் தனத்தில் பிரதானமானது விளையாட்டு.

“மாலைமுழுதும் விளையாட்டு..
என்று பழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா..” - என்பதைக்கூட, விளையாட்டு நேரமான மாலையில் அவர்களை ஏறக்குறையக் கட்டிப்போடாத குறையாக,மிரட்டி அமரவைத்து படிக்கச் சொல்லும் முரண்பாடுகளே இங்கு முற்றியிருக்கிறது.இது உமது,எமது வீடுகளில் என்றில்லை.வீதிகளிலுள்ள எல்லாவீடுகளிலும் அப்படித்தான் இருக்கிறது என்பதே யதார்த்தம்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை,மாலைநேர வீதிகளில் கூடுஅடையும் பறவைகளின் குரலும்,விளையாடும் பிள்ளைகளின் குரலும் போட்டிபோடும்.இன்றைக்கோ பறவைகள் அடைய மரங்களும் இல்லை. அதேபோல்,பிள்ளைகள் விளையாடுகின்ற வீதிகளும் இல்லை.

கடந்த காலங்களில் நமது சிறுபருவ விளையாட்டுக் களாய் இருந்த,நீங்களும் நானும் விளையாடிய, எத்தனையோ விளையாட்டுக்கள் இப்போது மறைந்துவிட்டன.

உடலினை,மனதினை உறுதிசெய்யும் ஆடலும், ஓடலும்,பாடலும்,விடுகதையும்,வீரமும்,கூட்டுமுயற்சியுமாக இருந்து,எதிர்கால சமூகத்தினை எதிர்கொள்ளும் வகையிலான துணிச்சலை,படிப்பினைகளை அளித்த நமது விளையாட்டுக்கள் சுத்தமாக மறைந்துவிட்டன. இப்போது தொல்பொருள் ஆராய்ச்சிக்கு ஈடாக,அவற்றைப்பற்றிய குறிப்புகளைத் தேடுகின்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது.

இதனை இப்படியே அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில்தான்,கவிஞர் தனராஜின் இந்தக் கவிதை கூடுதல் கவனம் பெறுகிறது.

“கால் கொஞ்சம் முளைத்து
காலனை மிஞ்சிவிட்டோம்”

காலமறிந்து வந்து உயிரைக் கவர்ந்து செல்லும் காலன்,எம்மை நெருங்கி வரும்போதெல்லாம்,அவனின் வேகத்தை மிஞ்சுகின்ற,அவனிடமிருந்து தப்பித்துச் செல்லுகின்ற ஆற்றல் வாய்ந்த,வலிமையான கால்கள் எங்களிடமிருக்கிறது..! என்று குழந்தைகள் சொல்வதாயிருந்தால்,அது,தனது ஆரோக்கியத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையல்லவா..? அதனைக் கொடுத்தது அவரது விளையாட்டல்லவா..?

எல்லாவற்றிற்கும் முடிவாய்ப் பார்க்கும் காலனுக்கே சவால் விடும் நம்பிக்கை பெற்ற குழந்தைகள், எதனையும் எதிர் கொள்ளும் ஆற்றல்பெற்றவராய் விளங்குகின்ற தம் திறத்தையும், இயற்கையோடு இணைந்து வாழுகின்ற தன்மையையும்,எதிர்க்கவேண்டியவற்றை எதிர்ப்பதிலும்,இணங்கிப்போவதென்றால் அதற்கு இசைவதுமாக தமது குணங்களை,வெள்ளந்தி மனதுடன் பட்டியலிடுவதை இக்கவிதையில் நான் காண்கிறேன்.

“ஈரைந்து தலைகொண்ட இராவணனும் இணையில்லை.”

“வெட்டும் மின்னலிலும் வீரவசனம் பேசிடுவோம்..”

“குளத்தில் நீர்வந்தால் குதித்துவிளையாடிடுவோம்..”

“வளைவிட்டு வெளிவந்தா நண்டைப் பிடித்திடுவோம்..”

என்பதுபோன்ற வரிகளில்,காணப்படும் கடந்தகால வாழ்க்கையோடு ஒன்றிப்போன நினைவலைகள் ரசிக்க வைக்கிறது.

குழந்தைத் தனமுடன் வாழ்ந்துவந்த வாழ்க்கை,மெதுவாய் திசைமாறுகின்ற பருவமும் வருகிறது.

“பயமற்ற இளங்கன்றாய் பாதிவழி கடந்திட்டோம்.வயமான கால்கட்டில் மீதிவழி மறந்திட்டோம்..”- வாலிபப் பருவத்தில் எதிர்கொள்ளும் வாழ்க்கை..,சுகமாய் மட்டுமே கழியும் வகையில் இல்லை,சமூகத்தின் சிக்கல்களுக்குள்,பொருளாதார பிரச்சினைகளுக்குள் சிக்கியபடி காலத்தை நகாத்தும் நெருக்கடியான நிலையும் வருகிறது.இதனிலேயே பெரும்காலத்தைக் கழிக்கவேண்டியவராய்,கட்டாயமாக மாறிப்போய் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிவிடும் மனிதர்களின் நிலையாக, “கம்பு சுமந்த கழுதையாகவும்,தும்பு பூட்டிய எருமையாகவும் பழக்கப்படுகின்ற வாழ்க்கை..,துயரடைந்த முதுமையாச்சு..” என்று விரக்தியுடனும்,கவலையுடனும் சொல்லி முடிக்கிறது.

குழந்தைத் தனம் மிகுந்த,குதூகலத்துடன் துவங்கிய கவிதை, மகிழ்ச்சியான முதுமையை அனுபவித்து இறக்காமல், துயரடைந்த முதுமையுடன் முடிகிறதே.. ஏன்.? என்றொரு கேள்வியை வாசகனின் மனதில் ஏற்படுத்திச் செல்வதை மறுக்க முடியாது.

இந்த இடைவெளியில் மறைந்துகிடக்கும் சிக்கல் என்ன..? என்பதை வாசகர்கள்தான் பூரணமாக உணரவேண்டும்.

அது,இந்த சமூகத்தில் வேறு வழியில்லை..என்பதாக இருக்கலாம்.பொருளாதார சிக்கலாக இருக்கலாம்.இன்னும் நீங்கள் உங்கள் அனுபவத்தில் அறிந்த,கேள்விப்பட்ட பல விஷயங்களாகவும் இருக்கலாம். அவ்வாறு நீங்கள் உணர்ந்தவற்றை நீங்களும் இங்கே பதிவு செய்யுங்களேன்.!
---------
அப்புறம்..அனைவரும் உங்கள் வாக்குகளைப் பதிவு செய்துவிட்டீர்களா..? மாலை ஆறுமணிவரை நேரம் இருக்கிறது.
கையிலே மை..அது நமது கடமை..! வாழ்த்துக்கள்.!!
===============
சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்து,வாசகர்களுக்கு மறுவாசிப்பு அளித்துவரும் பெரும்பணியை செய்துவரும் தோழர்.அகன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்,வணக்கங்களும்..!
அன்புடன்
பொள்ளாச்சி அபி
---------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (24-Apr-14, 3:26 pm)
பார்வை : 133

சிறந்த கட்டுரைகள்

மேலே