பொய்மான்-2

அத்தியாயம் - 2

பொய்மான் கரடுக்குச் சுமார் ஒரு மைல் தூரத்தில் செங்கோடக் கவுண்டனின் காடும் கிணறும் இருந்தன. சேலம் ஜில்லாவில் காடு என்றால், வயல், நிலம், பண்ணை என்று அர்த்தம். செங்கோடனுடைய ஐந்து ஏக்கரா நிலம் அவனுக்குத் தியாக வீர மான்யமாகக் கிடைக்கவில்லை. ஆயினும் அவனுடைய பெற்றோர்கள் அந்த நிலத்தைப் பண்படுத்துவதற்கும் கேணி எடுப்பதற்கும் செய்த தியாகங்களின் பலனை இன்றைக்குச் செங்கோடன் அனுபவித்து வந்தான். அவனுடைய ஐந்து ஏக்கரா நிலத்தில் பொன்னும் மணியும் முத்தும் பவளமும் விளையும். இவற்றைக் காட்டிலும் விலை உயர்ந்த பொருள்களான நெல்லும் சோளமும் பருத்தியும் மிளகாயுங்கூட விளையும். செங்கோடனுடைய கேணி, புதையல் எடுக்கும் கேணி. வருஷம் முழுவதும் அதில் புதையல் எடுத்துக்கொண்டே இருக்கலாம். அப்படி வற்றாமல் தண்ணீர் சுரக்கும் கேணி அது. மூன்று வருஷமாக மழை பெய்யாமல் சுற்று வட்டாரத்துக் கேணிகளில் எல்லாம் தண்ணீர் வற்றிவிட்ட போதிலும் செங்கோடன் கேணியில் மட்டும் தண்ணீர் சுரந்து கொண்டேயிருந்தது. செங்கோடனும் தினந்தோறும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாக்காமல் வயல்களுக்கு இறைத்துக் கொண்டிருப்பான். மூன்று போகம் பயிர் செய்து பலன் எடுப்பான்.


செங்கோடன் அநாதை. அவனுடைய தாய் தந்தையர் காலமாகிவிட்டனர். அக்கா, தங்கை, அண்ணன், தம்பி பிச்சுப் பிசிறு ஒன்றும் கிடையாது. வயதான கிழ அத்தை ஒருத்தி சில காலம் அவன் வீட்டில் இருந்து சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குச் சோறு போட மனம் இல்லாமல் செங்கோடன் அவளை அடித்து விரட்டிவிட்டான் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல; அந்த அத்தைக் கிழவி தன் தங்கை மகளைச் செங்கோடன் கழுத்தில் கட்டி விடப் பிரயத்தனம் செய்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேதான் அவளைத் துரத்தி விட்டான்.

செங்கோடனைக் கலியாண வலையில் சிக்கவைத்து இல்லறத்தில் அமர்த்திவிட இன்னும் பல முயற்சிகளும் நடந்து கொண்டிருந்தன. அதே ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் பல பெண்கள் அவனுக்காக மற்றவர்களால் பேசப்பட்டார்கள். ஆனால் செங்கோடன் ஒன்றுக்கும் பிடிகொடுக்கவேயில்லை; யாருடைய வலையிலும் சிக்கவில்லை. கடைசியில் அவன் இந்தக் கலியாணப் பேச்சுத் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு காரியம் செய்தான். ஊருக்குள் இருந்த குடிசையைக் காலி செய்துவிட்டு அவனுடைய காட்டின் நடுவில் கேணிக் கரையில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு குடியிருக்கத் தொடங்கினான். அதிலிருந்து செங்கோடனுக்கு மனநிம்மதி ஏற்பட்டது. ஆனால் ஊரில் கெட்டபெயர் பரவிற்று. அவன் தரித்திரம் பிடித்த கருமி என்றும், பெண்டாட்டியைக் கட்டிக் கொண்டால் அவளுக்குச் சோறு போட வேணுமே என்பதற்காகப் பிரமச்சாரி வாழ்க்கை நடத்துகிறான் என்றும் அக்கம்பக்கத்து ஊர் ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். இது ஒன்றும் செங்கோடன் காதில் விழவில்லை. அவன் உண்டு, அவன் கேணி உண்டு, அவன் விவசாயம் உண்டு என்று வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஆனாலும் அவனுடைய மனநிம்மதி ஒவ்வொரு சமயம் குலைவதற்குக் காரணமாயிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் செம்பவளவல்லி. 'செம்பா' என்று கூப்பிடுவார்கள். செம்பா பெரிய குடும்பத்தில் பிறந்தவள். தாய், தகப்பன், பாட்டி, அத்தை, தம்பிமார்கள், தங்கைமார்கள் வீடு நிறைய இருந்தார்கள். செம்பாவின் தகப்பனுக்குக் காடு, கேணி எல்லாம் இருந்தபோதிலும் பெரிய குடும்பம் ஆகையால் ஓயாமல் தரித்திரம் குடி கொண்டிருக்கும். வயலில் எவ்வளவு விளைந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்குக் காணாது. வீட்டில் சாப்பாட்டுக்கு ஆட்கள் அதிகமே தவிர, உழைக்கக் கூடியவர்கள் அதிகமில்லை. இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் ஓயாத தரித்திரத்துக்கும் ஒழியாத கூச்சலுக்கும் மத்தியில் செம்பவளம் வாழ்ந்து, வளர்ந்து வந்தாள். சேற்றுத் தவளைகளுக்கு மத்தியில் செந்தாமரையைப் போலவும், குப்பைக் கோழிகளுக்கு மத்தியில் தோகை மயிலைப் போலவும், சப்பாத்திக் கள்ளிகளுக்கு மத்தியில் செம்பருத்திச் செடியைப் போலவும் அவள் பிரகாசித்து வந்ததாகச் செங்கோடன் அடிக்கடி எண்ணுவான்.

இவ்வாறு தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்த செம்பாவைக் கலியாணம் செய்துகொள்வது பற்றியும் அவன் அடிக்கடி யோசனை செய்யாமல் இல்லை. அவன் மனத்தில் தானாக அந்த யோசனை உதித்திராவிட்டாலும், செம்பாவின் பெற்றோர்களும் உற்றார் உறவினரும் அவனைச் சும்மா விடவில்லை. செங்கோடனை அவர்களில் யாராவது சந்திக்க நேர்ந்த போதெல்லாம், "ஏண்டா அய்யாக் கவுண்டன் மகனே! எங்கள் செம்பவளவல்லியை நீ கட்டிக்கொள்ளப் போகிறாயா, இல்லையா? இரண்டில் ஒன்று கறாராகச் சொல்லிவிடு! எத்தனை நாள் அவளைக் கன்னி கழியாமல் உனக்காக வைத்திருப்பது? நீ இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ பேர் 'கண்டேன் கண்டேன்' என்று கொத்திக் கொண்டு போய்விடக் காத்திருக்கிறார்கள்" என்று பச்சையாகக் கேட்டுவிடுவார்கள். ஆனால் செங்கோடன் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசைந்து கொடுப்பதில்லை. "அப்படி மேலே விழுந்து யாராவது பெண் கேட்க வந்தால் கட்டிக்கொடுத்து அனுப்புங்களேன்! நானா குறுக்கே விழுந்து மறிக்கிறேன்?" என்று பிடிகொடாமல் பதில் சொல்லுவான்.

எல்லோரும் சேர்ந்து சூழ்ச்சி செய்து செம்பாவைத் தன் கழுத்தில் கட்டிவிடப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பீதி செங்கோடன் மனத்தில் குடிகொண்டிருந்தது. செம்பாவைக் கட்டிக் கொள்வதில் அவனுக்கு ஆசை இல்லாமல் இல்லை. பகலில் கேணியிலிருந்து தண்ணீர் இறைக்கும் போதும் சரி, காட்டில் மண்வெட்டி பிடித்து வேலை செய்யும் போதும் சரி, இரவில் தூக்கத்தில் கனவிலும் சரி, செம்பாவின் முகமும் புன்சிரிப்பும் கண் சுழற்றலும் அவன் மனத்தில் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். குடிசைக்குள் அடுப்பு மூட்டி உலைப்பானையைப் போடும் போதெல்லாம், 'வீட்டில் ஒரு பெண்பிள்ளை இருந்தால் எவ்வளவு சல்லிசாக இருக்கும்! இந்த அடுப்பு மூட்டும் வேலையெல்லாம் நாம் செய்ய வேண்டியதில்லையல்லவா?' என்று தோன்றும். ஆனாலும், கலியாணம் என்று செய்துகொண்டால் செம்பாவின் குடும்பத்தார் அனைவரும் தன் வீட்டில் வந்து உட்கார்ந்து அட்டூழியம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்றும், நாலைந்து வருஷமாகத் தான் அரும்பாடு பட்டு இராப்பகலாக உழைத்துச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைப் பரிசம் என்றும், சேலை என்றும், கலியாண விருந்து என்றும் சொல்லிச் சூறையிட்டு விடுவார்கள் என்றும் அவன் மனத்தில் பெரும் பீதி குடிகொண்டிருந்தது. செம்பாவின் பேரில் அவனுக்குள்ள ஆசையும், சேர்த்துப் புதைத்து வைத்திருந்த பணத்தின்மேல் அவனுக்கிருந்த ஆசையும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன. இரண்டையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பினான். ஆனால் எதாவது ஒன்றைக் கை விட்டுத்தான் ஆகவேண்டும் என்று ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று தயங்கினான். சில சமயம், 'செம்பாவைப்போல் நூறு பெண்கள் கிடைப்பார்கள்; ஆனால் வெள்ளி ரூபாய் எண்ணூறு இலேசில் கிடைக்குமா? நாலு வருஷம் பாடுபட்டால் அல்லவா கிடைக்கும்?' என்று தோன்றும். 'பணமாவது பணம்! பணம் இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போகும். ஆனால் செம்பாவைப் போல் ஒரு பெண் ஆயிரம் வருஷம் தவம் செய்தாலும் கிடைப்பாளா?' என்று இன்னொரு சமயம் அவனுக்குத் தோன்றும். இந்த இரண்டுவித எண்ணங்களுக்குமிடையே நிச்சயமான ஒரு முடிவுக்கு வர முடியாமல் செங்கோடன் திகைத்தான்; திணறினான்; திண்டாடினான்.


இப்படி இருக்கும்போது ஒருநாள் காலையில் செங்கோடன் கேணியிலிருந்து தண்ணீர் இறைத்துவிட்டு, மாட்டைக் கவலை ஏற்றத்திலிருந்து அவிழ்த்து விட்டு, விட்டு, கிணற்றங்கரையில் மரத்து நிழலில் இளைப்பாற உட்கார்ந்தான். அப்போது அவன் மனம் தன்னை அறியாமல் செம்பாவின்மேல் சென்றது. 'பணச்செலவைப் பாராமல் செம்பாவைக் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இச்சமயம் கஞ்சியோ, கூழோ, அல்லது நீராகாரமோ கொண்டு வருவாள் அல்லவா?' என்று நினைத்தான். அந்தச் சமயத்தில் ஏதோ பின்னால் சலசலவென்று சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே இடுப்பில் சோற்றுக் கூடையுடன் செம்பா நின்றாள்.

மனத்தில் எவ்வளவு வியப்பும் மகிழ்ச்சியும் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், "அப்படியா! ஓகோ! நீதானா? யாரோ என்று பார்த்தேன்" என்றான் செங்கோடன்.

"என்னைப் பார்ப்பதற்குப் பிடிக்கவில்லையாக்கும்? நான் வந்தது பிசகுதான்!" என்றாள் செம்பா.

"யார் சொன்னது பிடிக்கவில்லை என்று? வா வா! வந்து விடு! இங்கே வந்து என் பக்கத்தில் உட்காரு!" என்றான் செங்கோடன்.

"இல்லை, நான் போகிறேன்!" என்று அரை மனத்துடன் செம்பா திரும்பிப்போகப் பார்த்தாள்.

செங்கோடன் எழுந்து ஓடிச் சென்று அவளை வழி மறித்து நின்று, "வா! வா! வந்துவிட்டுக் கோபித்துக் கொண்டு போகலாமா?" என்று சொல்லி, அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் அவர்கள் சும்மா இருந்தார்கள். உச்ச ஸ்தாயில் முறை வைத்துப் பாடிய இரண்டு குயில்களின் குரல் கேட்டது. அணிப்பிள்ளைகள் 'கிளிக்' 'கிளிக்' என்று சப்தித்தன. குருவி ஒன்று 'சிவ்' என்று பறந்து சென்றது.

"செம்பா! எங்கே இப்படி வந்தாய்? ஏதாவது காரியம் உண்டா?" என்றான் செங்கோடன்.

"ஒரு காரியமும் இல்லை; சும்மா உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்?"

"காரியம் இல்லாமல் வெறுமனே பார்ப்பதற்கு வருவார்களா?"

"ஏன் வரமாட்டார்கள், கவுண்டா! போன சனிக்கிழமை சின்னமநாயக்கன்பட்டிக்கு சினிமா பார்க்கப் போயிருந்தோம். அதிலே மோகனாங்கி என்று ஒருத்தி வருகிறாள். அவள் தன் புருஷனுக்காக என்னென்ன கஷ்டமெல்லாம் படுகிறாள், தெரியுமா? அதைப் பார்த்து விட்டு அழாதவர்கள் கிடையாது."


"ஓஹோ! சினிமா பார்க்கப் போயிருந்தீர்களா? ஏதோ கூடார சினிமா வந்திருக்கிறது என்று சொன்னார்களே அதற்கா போனீர்கள்? யார் யார் போயிருந்தீர்கள்?"

"அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி, எல்லாருமாகத்தான் போயிருந்தோம். தலைக்கு இரண்டே காலணா டிக்கெட். மொத்தம் ஒரு ரூபாயும் மூன்று அணாவும் செலவு. 'போனால் போகட்டும்! இந்த மாதிரி அதிசயக் காட்சிகளை எங்கே பார்க்கப் போகிறோம்? ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் பார்க்க முடியுமா?' என்று அப்பா சொன்னார். நிஜமாக எவ்வளவு நன்றாயிருந்தது தெரியுமா? நீ கூடப் போய்ப் பார்த்துவிட்டு வா" என்றாள் செம்பவளம்.

"உங்களுக்கென்ன, கொழுத்த பணக்காரர்கள்! இஷ்டப்படி செலவு செய்கிறீர்கள்! நான் எங்கே போக அம்மட்டுப் பணத்துக்கு?" என்றான் செங்கோடன்.

நமது சென்னை முதன் மந்திரி கனம் குமாரஸ்வாமி ராஜாவும் நமது கதாநாயகன் செங்கோடக் கவுண்டனும் சினிமா விஷயத்தில் ஒன்றுபட்டவர்கள். இரண்டு பேரும் சினிமா பார்த்தது கிடையாது!

ஊர் உருப்படாமல் போய்க்கொண்டிருப்பதற்கும் காலா காலத்தில் மழை பெய்யாமல் தேசம் நாசமாய்ப் போய்க் கொண்டிருப்பதற்கும் சினிமாதான் காரணம் என்பது செங்கோடனுடைய சிந்தாந்தம்!

எழுதியவர் : படித்தது (25-Apr-14, 5:30 pm)
சேர்த்தது : இஸ்மாயில்
பார்வை : 81

மேலே