கவிதைக்குழந்தை - கர்ப்பமும் பிரசவமும்

மொழியைத் தந்தையாய்
உணர்வைத் தாயாய்
கொண்டு பிறப்பது கவிதை.

கர்ப்பந் தரித்திட
கட்டாயம் தேவை
மொழியும் உணர்வும்
இரண்டறக் கலத்தல்.

அக்கலவியின் விளைவாய்
மனமெனும் பையுள்
சூல்கொண்டிடும்
கவிதைக் குழந்தை.

உண்மைப் பொருளை
உதிரமாக்கி
உணர்வுத்தாய் தர
உருவம் அடையும்.

மொழித்திறம் புகுத்திய
வார்த்தைகள் உண்டு
உருவளர்ச்சி காணும்.

புத்தியின் கூர்மையும்
இதயத்தின் ஈரமும்
கூடவே சேர்ந்தால்
கூடுதல் வளர்ச்சி.

கற்பனை மருந்து
அதிகம் உண்டால்
அறைகுறை வளர்ச்சி
அடைந்திடக்கூடும்.

பொய்யும் சேர
உடல்நலம் சோரும்.
பிரசவம் பிரச்சினையாகும்.
மேலும்,
அற்பகாலமே வாழும்.

கருப்பொருள் உண்மையாய்
இருக்கும்வரையில்
கலைந்திடாது கர்ப்பம்.

பிரசவம் சுகமாயாகும்
வாழ்நாள் கூடும்.
வாழும்வரையில்
வாசிப்போர் வாழ்த்தும் சேரும்.

கலவி நடக்கும் நேரமோ
கர்ப்பம் தரிக்கும் நேரமோ
கவிதை வெளிவரும் நேரமோ
எவரும் அறியா இனிய ரகசியம்.

மணிக்கொன்றாய் பிறக்கும் சில.
மாதக்கணக்கில் இழுக்கும் சில.
கலவியும் கர்ப்பமும் அறைகுறையாக
பிண்டமாகவே உள்ளுறையும் சில.

இத்தனை சிக்கல்
இருக்குது மொத்தம்.
இதனாலேயே
நற்பிறப்பே அற்பம்.

எழுதியவர் : இல. சுவாமி நாதன் (1-May-14, 2:01 pm)
பார்வை : 140

மேலே