விலங்குலகு
வேட்டையுண்டு, விரட்டலுண்டு
மறைந்து தாக்குவதுமுண்டு
நிணச் சுவையுடன்
பிணத்தைத் துண்டாடுவதும் உண்டு
எல்லாம் பசிக்காகத் தான்.
ருசிக்காகவோ
தசை வெறிக்காகவோ
எம் இனத்தை யாமே அழிப்பதில்லை
என்றும்.
ஜாதியில்லை
ஜாதிச் சண்டையுமில்லை
கௌரவக் கொலைகள்
ஒருபோதும் நிகழ்வதுமில்லை
நிற பேதமில்லை
நிறவெறிச் சண்டையுமில்லை
மொழியில்லா மொழியுண்டு -இருந்தும்
மொழிச் சண்டை இங்கில்லை
காசை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை
அதனால் - (காசு)
இருப்பவன் இல்லாதவன் இங்கில்லை
எளியவரை ஏப்பம் விடும் எத்தருமில்லை
அண்டிப் பிழைக்கும்
'அள்ளக்கை'களுமில்லை
கடவுள்களை நாங்கள்
உருவாக்கவில்லை
அதனால் மதங்களில்லை
மதப் போரெனும் பேரால்
மதங் கொண்ட தீவிரவாதமும் இல்லை
எங்கள் காட்டை நாங்களே
தீ வைத்துக் கொளுத்துவதுமில்லை
அறிவெண்ணிக்கை
என்னவோ அதிகமில்லைதான்
ஆனால் அடுத்தவனை
அடுத்துக் கெடுக்கும்
வித்தையை நாங்கள்
அறிந்ததேயில்லை
எங்களில்
குள்ள நரி உண்டு குழி முயலுமுண்டு
புலியுண்டு புள்ளிமானுமுண்டு
கரையோரம் பதுங்கிக் கவ்வும்
முதலை உண்டு
மரத்தோடு மரம் தாவும் மந்தியும் உண்டு
ஆனால் ஒருபோதும் நாங்கள்
பொய் வேடம் பூணுவதில்லை.
'நஞ்சு' சுயம் மறைக்க
முகமூடி கொள்வதில்லை
உங்களைப்போல்.
நன்றிக்கு மட்டுமா
அடையாளம் நாங்கள் ?
பொறுமை, விடா முயற்சி
மானம், நட்பு, கற்பு
காதல், வீரம், வேகம் , விவேகம்
இத்தனைக்கும்
உங்கள் "வாய் பிழைப்பு மன்றங்கள்"
தேடிப் பிடிக்கும்
உதாரணம் என்னவோ நாங்கள்தான்
மனிதரிடம் வற்றிப் போன இம் மாண்புகளை
மனிதப் பண்பென்று இனியேனும்
சொல்லாதே மனிதா !
விலங்குலகில் மட்டுமே
எஞ்சியிருக்கும் இவையெல்லாம்
இனியாவது
"விலங்குமாண்பு"களாகட்டும்!
வெட்கமாவது மிச்சமுண்டா
உங்களுலகில்
உண்டென்றால் தலை தாழ்த்துங்கள்
வெட்க்கத்தில் !