அவள் எனக்கு வேண்டும்-12 நிறைவுப்பகுதி

அவன் அவள் கையில் மாத்திரையை கொடுத்து, நீர் எடுத்து
கொடுத்துவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டான்.

வெளியில் இருந்து அவளை கவனித்தான். அவள் வேகமாக மாத்திரையை தலையணிக்கடியில் வைத்துவிட்டு, சாதாரணமாக அமர்ந்திருந்தாள்.

சட்டென உள்ளே வந்தவன், இன்னொரு மாத்திரையை கையில் கொடுக்க,

“இப்போதானே சாப்பிட்டேன்”, என்றாள்.

“ம்.. சிஸ்டர்”, என்றழைக்க சிஸ்டர் வந்து..

“மேடம்! உங்களுக்கு ஏன் காய்ச்சல் நிக்கவில்லை என்று கண்டுபிடித்து விட்டோம். மாத்திரையெல்லாம் சரிபட்டு வராது. இன்னும் நாலு ஊசி போடவேண்டும்”, என்றாள்.

அந்த மாத்திரையை வாய்வரைக்கும் எடுத்துபோனவள்.. அவனையே பாவமாக பார்த்தாள். இவன் பட்டென மாத்திரையை வாங்கி, அவள் வாயை திறந்து, “நீர் ஊற்றி முழுங்கு”, என்றான்.

சிஸ்டர் சென்றுவிட அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் கோமதி.

“என்ன?” என்றான்.

'ஒன்னும் இல்லை' என்பது போல தலையாட்டினாள்.

“உன்னோட மனவோட்டம் புரியுது. அவள் என்னிடம் பேசி சிரித்தது பார்த்து மனதுக்குள் புலம்பல்”, என்றான்.

“இல்லையே”, என்றாள்.

“ஷ்.. நீ மாத்திரையை என்ன பண்றன்னு.. நாங்க இரண்டு பேரும் பார்த்தோம். அதப்பத்திதான் பேசிட்டு இருந்தோம்”

சிறிது உறக்கத்திற்கு பின் அவள் சரியாகி விட, இருவரும் வீட்டுக்கு வந்தனர்.. பாட்டி ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தாள்.

“பாட்டி!”, என்று பாட்டியை கட்டிக்கொண்டாள் கோமதி.

இருவரையும் ரெடியாகி கோவிலுக்கு போகச் சொன்னாள் சிவாவின் அம்மா.

கோமதி ரெடியாகி வர சிவா அவள் சுடிதாரில் வருவது பார்த்து,
“போய் சேலை கட்டி வா”, என்றான்.

அவள் பாட்டியை தேட, “என்ன?”, என்றான்.

“தி தி திட்டமாட்டிங்கலே.. எ எனக்கு சேலை.. அம்மாவும் அக்காவும் தான்
கட்டி விடுவாங்க”, என்றாள்.

அதை கேட்டுக்கொண்டே வந்த சிவாவின் அம்மா..

“வாம்மா நான் கட்டிவிடுறேன்”, என்று அழைத்து சென்றாள்.

"ம் தாத்தா உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் கேக்கவா?"

"கேளு சிவா என்ன அது?"

"அதெப்படி நீங்களும் பாட்டியும் எப்பவும் அழகா சிரிச்சிக்கிட்டே உலா வர்றீங்க? பாட்டிய உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?"

"இதென்னடா திடீர்ன்னு இப்படி கேட்டுட்ட..! உனக்கு கோமதிய எவ்வளவு பிடிக்கும்னுகேட்டா என்ன சொல்லுவ..?"

"அது அது.."

"என்னடா இழுவ.."

"அதுபோலத்தான் நானும்.. உன்னோட பாட்டி மேல வச்சிருக்குற அன்புக்கு அளவு இல்லை.. என்னோட உசுரே அவதான்டா.. உங்க பாட்டி என் பக்கத்துல இருந்தா அதுவே போதும்டா எனக்கு. என்ன வேணும்னாலும் சாதிச்சுடுவேன்.. அதுவே அவமுகம் கொஞ்சம் வாட்டமா இருந்தாலும் கண்டுபுடிச்சிடுவேன். அவ உடம்புக்குன்னு ஒன்னும் வந்து படுத்தது இல்ல.

உங்கப்பா உங்கம்மாவ‌ கல்யாணம் பண்ணிட்டு யாருக்கும் தெரியாம போனாம்பாரு.. அப்பதான் ரொம்ப ஒடஞ்சிபோனா.. அதுக்கப்புறம் தேறி வர ரொம்ப நாளாச்சு.. அதுக்கு காரணம் உங்க மாமனார்தான்.

அவன் வீட்டுக்கு வந்து, கொஞ்சம் கொஞ்சமா பேசி ஒரு வழியா சரியானா.. எதாவது நான் கோபமா பேசினாக்கூட எதிர்த்து சண்டைபோடமாட்டா.. நான் அமைதியா இருக்கும் போது எது சரி எது தப்புன்னு புரியவைப்பா.. இரண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சி நடந்துகிட்டா குடும்பமே சந்தோஷந்தானே.. இதுல பிரிவேது.

ம் சரி சரி பேத்தி வந்தாச்சி கிளம்பு.."

கல்யாணப்புடவையில் வந்தவளை பார்த்து மெய் மறந்து பார்வையாலேயே விழுங்கிக்கொண்டு நின்றவனை அவனது அப்பாவின் குர‌ல் கவனத்தை திருப்பியது..

“ம் ம் போதும் சிவா கிளம்பலாம்”, என்றார்.

கோவிலில் சாமி முன்பு கோமதியும் சிவாவும் அமைதியாக வணங்கிக்கொண்டு நின்றனர். திரும்பியவள் அவனை காணாது திடுக்கிட்டு பிரகாரத்தை சுற்றி வந்தாள். அங்கு சாவகாசமாக நின்றவனை பார்த்தவுடன்தான் நிம்மதி ஆனாள்.

பட்டுவேட்டியில், சட்டையை முழங்கை வரை சுருட்டிவிட்டு அவனது கேசம் காற்றுக்கு லேசாக ஆட மதில்மேல் சாய்ந்து கொண்டு நின்றவ‌னை அனு அனுவாக ரசித்துக்கொண்டு வந்தாள் கோமதி.. அவளை பார்க்கவும் ஒரு மோகனப்புன்னகை உதிர்த்தான்.

மெதுவாக வந்து பக்கத்தில் இருந்த இடத்தில் அமர்ந்தாள்.

அவனும் பக்கத்தில் அமர்ந்து அவள் கையை பிடித்து இடது கையில் கிடந்த வளையலை கழற்றி வலது கையில் போட்டுவிட்டு இடது கையில் அவன் வாங்கி வைத்திருந்த கைக் கடிகாரத்தை கட்டிவிட்டான். இருவரின் உதட்டோரத்திலும் ஒரு புன்னகை வந்து மறைந்தது.

இருவரும் காருக்கு வர கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தவளின் இடையை ஒடிக்கும் படியாய் பிடித்து இழுத்து பக்கத்தில் அமர்த்திக்கொண்டான். அவர்களது கார் தேரென மெதுவாய் வீடு நோக்கி கனவுகள் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது....

(முற்றும்)

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (6-May-14, 6:24 am)
பார்வை : 743

மேலே