சிறப்புக் கவிதை 55 பொள்ளாச்சி அபி வாயை மூடுங்கள்

கண்விழித்த நேரமுதல்
கைகூப்பி தொழப்பழக்கி
அகரம்படிக்கு முன்னே
ஆண்டவனைப் பழக்கி..

எத்தனை விதமாய்
எனக்கு நம்பிக்கையூட்டினீர்கள்..?
யாருமற்ற பொழுதுகளிலும்
தெய்வமே.. துணையென
எனக்குள் தீபமேற்றீனீர்கள்..?

முகவரியற்ற காமுகர்களால்
சிதைக்கப்பட்ட உடலோடு-இன்று
சிதையில் எரிகிறேனே அம்மா.!.
“நான் வாழவேண்டும் அம்மா..!”

சிதைந்தவளுக்கு வாழ்வு
சிதைத்தவர்க்கு தண்டணை
இந்தச் சிறுமதியில் நினைத்தேனே
மாறாய் எனதுயிரைத் தந்தேனே..!

பெற்றவயிறு பரிதவிக்க..
உற்றநண்பரெல்லாம் கண்வடிக்க
கேட்டமனம் கொதிகொதிக்க
கேடுகெட்ட நிகழ்வொன்று அரங்கேற

கேட்பதற்கு யாருமில்லா நேரமதில்
கற்பழிப்பு நடந்தேற..
கூவிக் கூப்பிட்ட குரலுக்கு
செவிசாய்க்கா சமாதிகளாய் சமைந்துவிட்ட...
தெய்வங்களின் தீர்ப்பு இதுதானெனில்...,

ஐந்துநேரத் தொழுகை
ஆறுகாலப் பூசை
ஏழுதினமும் பிரார்த்தனை..!

தொழுகைகளை விட்டொழியுங்கள்..
பூசைகளைத் தொலையுங்கள்..,
பிரார்த்திப்பதை நிறுத்துங்கள்..!

திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணையென
பினாத்துபவர்களே..
வாயை மூடுங்கள்..!
-------------------------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (8-May-14, 4:51 pm)
பார்வை : 125

மேலே