தப்பாமல் நடக்கும் தரணியில் நாளும்

பிறந்தவர் எவரும் பிழைத்திட வேண்டுமே
உணவிற்காக நாளும் உழைக்க வேண்டுமே ​!
வழிகள் பலஉண்டு உலகினில் உய்த்திடவே
​வலிகளும் பலகண்டு ​உடலும் தாங்கிடவே !

அதிகாலைப் பொழுது ஆர்வமாய் வருவார்
ஆண்மகன் ஒருவர் அயர்ந்த காளையுடன் !
காலையிலும் வருவார் மாலைக்குள் வருவார்
களைத்த காளையும் கவலையுடன் வந்திடும் !

பிழைக்கவும் வழியது உழைக்கவும் உரியதென
சுயதொழிலே சுகமென அகத்திலே கொண்டவர் !
புரியாத இசையை பூம்பூம்பென இசைத்திடுவார்
ஆரூடம் சொல்வதாய் அசைந்திடும் காளையும் !

பெண்களின் பலவீனத்தை பலமாக அறிந்தவர்
துணைக்கு அழைப்பார் தும்பைப்பூ சிரிப்பையும் !
மனங்களை உருக்கிட தந்திரமாய் பேசுவதுண்டு
மானத்தைக் காத்திட காளைக்கும் ஆடையுண்டு !

கூறுவதும் பொய்யோ மெய்யோ அறியோம்
கூறுவதை கேட்போம் கூர்ந்து கவனிப்போம் !
அன்பர்கள் நாமும் அனுதாபமும் கொள்வோம்
அன்னம் வழங்குவோம் கிண்ணம் நிறைந்திட !

மகிழ்ந்திடும் மகளிர் மனங்களும் குளிர்ந்தால்
மனதார அளித்திடுவர் ஆடையோ பணமோ !
விஞ்ஞானம் வளர்ந்தாலும் விந்தைகள் இவை
அஞ்ஞானம் அழியும்வரை அன்றாடம் நிகழும் !

விலங்குகள் பாவம் உதவிடும் மனிதனுக்கு
விவேகம் உள்ளோர் சிந்தியுங்கள் சிலதுளி !
நீங்கள் பிழைத்திட தண்டிக்க வேண்டாமே
கால்நடை பயணத்திற்கு காளைகள் வேண்டாமே !

அப்பாவி அவைகளும் கொடுமைக்கு ஆளாகுதே
தப்பாமல் நடக்கும் தரணியில் நாளும் இதுவும் !
ஐந்தறிவு உயிர்களிடம் அன்பினை காட்டுங்கள்
பகுத்து அறிந்திடுக பண்பட்ட உள்ளங்களே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-May-14, 9:38 am)
பார்வை : 149

மேலே