அம்மா நீ இறைநிலை

ஞாலத்திற்கு
அன்பை ஞானமாக்கியவளே
அன்பை தானமாக்கியவளே
வேதங்களுக்கு
அன்பை அறிமுகம் செய்தவளே
அன்னையாய் நீ
அவதரித்த பின் தான்
அன்பு அவனியில் அடிஎடுத்தது
கடவுள் அவதாரங்களிலும்
அன்பு கட்டாயமாகிப்போனது..!
உனக்கு போட்டியாய்
கடவுள் கூட்டங்கள் படையெடுப்பு

ஆதியும் அந்தமும்
இல்லாத ஆண்டவனும்
அவனியில் தன் அவதாரத்தை
உன்னிலிருந்து தொடங்கியது எப்படி?

தூணிலும் துரும்பிலும்
கல்லிலும் சொல்லிலும்
துஞ்சிய கடவுளுக்கு
தாய் மடியில் துஞ்சிட
தாய்க்குள் தங்கி இருந்திட
இறங்கிட தோன்றியது எப்படி?
கடவுளை தூண்டிவிடும்
சக்தி உனக்கு சாத்தியமானது எப்படி?

நீ உள்அனுப்பும் சுவாசத்திலும்
பாசம் பாய்வது எப்படி?

விழும் விதை
மடிந்து
நிலம் கடந்து
வெளி வந்து
விருட்சமாவது இயற்கை
ஆனால்
நிலம் மடிந்து
தன் நிலை துறந்து
புலன் திறந்து
விதை பிறக்கிறதே - இது
கவிதையாய் காட்சியாகிறதே..!
இது இயற்கையை விஞ்சிய
இறைநிலை
அம்மா நீ
இயற்கையாய் வந்த இறைநிலை ..!

எழுதியவர் : Raymond (11-May-14, 3:20 pm)
பார்வை : 214

மேலே