சிறப்புக் கவிதை 61 கவிதா சபாபதி ஒரு தெய்வமகள் கனவுகள் விற்கிறாள்

'கனவு வாங்கலையோ
கனவு...?'

காஷ்மீரத் தோட்டமுதல்
குமரிக்கட லோரம்வரை
சுதந்திரத்தின் செல்வமகள்
கூவிக்கூவி அழைக்கின்றாள்

ஒரு கனவும் விற்கவில்லை - அவள்
குரல் கேட்க யாருமில்லை
ஆனால் அந்தக்
கூவல் மட்டும் ஓயவில்லை

'கனவு வாங்கலையோ
கனவு...?'

நதி வீணைகள் மீட்டும்
ராகங்கள் எல்லாம்- ஒரு
தேசீயப் பாடடாகும்
தேனிசைக் கனவு

வறுமையினால் காயம்பட்ட
பாரதத்தின் வைகறை
இளைய தீபங்களின்
திறமையினால் விடியுமென்ற
செவ்வானக் கனவு

பூப்பூவாய்ப் பூத்திருக்கும்
மொழிப்பூக்கள் எல்லாம்
ஒரு தோட்டப் பூக்களெனும்
இந்தியக் கனவு

தலையுதிரும் காலங்கள்
கருகின: - இனிவரும் நாள்
நிலையுயரும் காலமெனும்
வசந்த கனவு

எதிர்த்தால் கோடி
இமயங்கள் எழுந்துவரும்
அணைத்நால் அன்பு
கங்கைகள் பெருகிவரும்
இதுதான் இவர்களி்ன்
இந்திய பூமியென்று
எதிரிகள் குலைநடுங்கும்
வல்லரசுக் கனவு!

பூங்கனவு பொன்கனவு
புரட்சிப் புதுக்கனவு
கனவு வாங்கலையோ
கனவு...?

அரசியல் வீரர்கள்
விளையாடும் கோட்டைகளில்
மதங்கள் உரசிக்கொள்ளும்
ஆலய வாசல்களில்
இருண்ட தேசத்தின்
மெலிந்த வீதிகளில்
காஷ்மீரத் தோட்டமுதல்
குமரிக்கட லோரம்வரை
சுதந்திரத்தின் செல்வமகள்
கூவிக்கூவி அழைக்கின்றாள்

ஒரு கனவும் விற்கவில்லை - அவள்
குரல் கேட்க யாருமில்லை
ஆனால் அந்தக்
கூவல் மட்டும் ஓயவில்லை

'கனவு வாங்கலையோ
கனவு...?'

எழுதியவர் : கவிதா சபாபதி (13-May-14, 9:05 pm)
பார்வை : 180

மேலே