குடும்பமே கோயில்

கூட்டுக் குடும்பக்கூடு கலைந்து போனதே
வீட்டி லிருப்பது நால்வ ரென்றானதே
அவரவர் பணியிலே ஆளுக்கொரு அறையிலே
அழைப்ப தென்றால்கூட விடுகைஅலை பேசியிலே
பதியுடன் சதியும் பணிநிமித்தம் சென்றிட
பள்ளிவிட்டு வந்தபிள்ளை பரிதவித்து நின்றதே
இணையத்துட னுறவுஇணை பிரியாது தொடர்ந்ததே
இன்னல்களை அதனால் சந்திக்க நேர்ந்ததே ....!!
உறவுகள் போற்றிட வாழ்க்கை வசந்தமே
உள்ளங்கள் வண்ண மலர்களின் சுகந்தமே
மூத்தோர் பேணிட இல்லம் சொர்க்கமே
முந்துதமிழ் இனிமையாய் இன்பம் நிறையுமே ..!!
குடும்பத்தினர் கூடிப்பேசி உண்டு களித்திட
குதூகலம் கூடிவரும் நாளும் வீட்டிலே
பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து
பிரியமுடன் அரவணைத்தால் குடும்பம் கோயிலே
விட்டுக்கொடுத்து வாழ்ந்திட கெடுத லில்லையே
விலகியோடும் துன்பமும் வந்த வழியிலே -இந்த
உண்மைதனை உணர்ந்திட பிரிவுஎன்று மில்லையே
உள்ளபடி பொறுமையே என்றுமன்பின் எல்லையே....!!
(உலக குடும்பதினம் 15-05-2014)