அப்பாவும் குழந்தையும்
அப்பா ...
ஏன் அப்பா பேசாம இருக்க
நீ போன் பண்ணலைன்னு அம்மா திட்டினாங்களே
அதுக்காக கோவமா அப்பா
“ இல்ல “
ஒழுங்கா சாப்பிடலைன்னு அம்மா பேசினாங்களே
அதுனால கோவமா
சரி அப்பா ... வா நாம அம்மாவோட
டுக்கா போட்டுருவோம்
அப்பா ...அப்பா
நான் பொம்மை வாங்கிட்டு
வரசொன்னனே வாங்குனியா அப்பா
பொம்மை எங்க அப்பா ?
வாங்கிட்டு வரலையா
போ ... அப்பா
" பரவாயில்ல "
வாசல் ல ஐஸ்கீரிம் மாமா வந்துருக்காங்க
ஐஸ்கீரிம் வாங்கி தாங்கப்பா
வாங்கி தாங்கப்பா
ஓகோ ... இன்னும் கோவமா இருக்கியாப்பா
சரி வா ...அப்பா கண்ணாமூச்சி விளையாடுவோம்
1…2… 3 அப்பா வரேன்
ஐய்யா கண்டுபிடிச்சுட்டேன்
அப்பா ... நீ அந்த பூவுக்குள்ளே ஒளிஞ்சுருக்கே
அப்பா ... நீ கண்ணபொத்து நான்
ஒளிஞ்சுக்கிறேன்
“அப்பாடி ஒளிஞ்சாச்சு “
எங்க அப்பாவே காணோம்
ஓகோ ...இன்னும் அப்பா
பூவுக்குள்ளேயே தான் கண்ணப்பொத்தி இருக்காரு
ம்ம்ம் ... இன்னும் அப்பாவுக்கு கோவம் போகல
அய்ய..யயோ ... மாமா அப்பாவ
எங்கே கூட்டிட்டு போறீங்க
அப்பாவ வேலைக்கு கூட்டிட்டு போறீங்களா ?
கூட்டிட்டு போங்க மாமா
மாமா ...அப்பா என்மேலயும் அம்மாவோடயும்
கோவமா இருக்காரு
அடுத்த தடவை வீட்டுக்கு வரும்பொழுது
என்கூடயும் அம்மாவுடயும்
பேச சொல்லுங்க மாமா
அப்பா ...
டாடா ... டாடா....
அப்பா... டாடா ...
(மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு சமர்ப்பணம் )