முட்டாள் நானானேன்

வள்ளுவன் கூற்று சரியென்றால்
வடிகட்டிய முட்டாள் நானென்பேன்
உலகத்தோடு ஒட்ட ஒழுகத் தெரியாதலால்.

மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே
“பட்டாசு வெடிப்பது சுற்றுச்சூழல் கேடு” என்றார் அப்பா.
இயற்கையப் போற்றுபவர்; தமிழ்த் தாத்தா பெயரை
என்க்கு சூட்டி மகிழ்ந்த நல்ல மனிதர்.

இன்றுவரை இயற்கைக்கும் உயிரினத்தும்
கேடுசெய்யும் பட்டாசைத் தொடுவதில்லை நான்.
அக்கம்பக்கம் உள்ளவர் வெடித்துக் கும்மாளமிட்டு
ஏளமானாய்ப் பார்ப்பர் எங்களை; சொல்லாமல் சொல்லுவார்
கஞ்சம் பிடித்தவர்கள் நாங்கள் என்று.
எங்கள் நல்ல எண்ணம் பற்றி எதுவும் தெரியாமல்.

நல்லவேளை நான்பெற்ற இருபிள்ளைகளும்
செய்வதில்லை பட்டாசு வெடிக்கும் பாவத்தை.

படிக்கும் காலத்தில்.திரைப்படங்கள் சிலவும்
திருட்டுத் தனமாய்ப் பார்த்தேன் நண்பர்கள் சிலரோடு.
பெற்றோர்க்குத் தெரிந்து மொத்தும் கிடைத்ததுண்மை

பணியில் சேர்ந்தபின்பு நண்பரின் வற்புறுத்தலில்
பாசமலர் திருவளையாடல் ஹரிதாஸ் போன்றவை
நான் பார்த்த சிலபடங்கள் கூட்டத்தையும் விசிலையும்
கூச்சலையும் நேரத்தை வீணடித்து வரிசையில் நிற்பதையும்
சகித்துக் கொள்ளத் தெரியாத நான்.

திரையரங்கு சென்று கால்நூற்றாண்டு ஆகிறது
வன்முறை பழிவாங்கல் ஆபாசம் எல்லாம்
அரங்கேறிக் கோலோச்சுவதை பார்த்து இரசிக்கவா முடியும்?
சின்னத் திரையிலும் செய்திகள் கவியரங்கம் பட்டிமன்றம்
தமிழையும் இயற்கையையும் போற்றும் நிகழ்ச்சிகளே போதும்.
தமிழை அமுதாய்க் கண்டார் புரட்சிக் கவிஞர்
அவ்வமுதைத் சுவைப்பதில் முன்னணியில் நிற்பேன்.

பிள்ளைகள் இருவருக்கும் தமிழ்ப் பெயர்களையே சூட்டினேன்
ஆசிரியர் பலரும் உடன் பணியாற்றும் பலரும்
முகம் சுளித்தார் என் தமிழ்ப் பற்றைப் பார்த்தும் கேட்டும்.
கேடெவர்க்கும் மனமறிந்து செய்யாத போது
எவர்க்கு நான் அஞ்சுவேன் நல்லதைச் செய்து.

ஆபாசம் பழிவாங்கல் வன்முறையை ஆதரிப்போர்
தமிழ் என்று சொன்னாலே முகம் சுளிக்கும் தமிழர்கள்.
இவர்களில் பலரின் வெறுப்புக்கு ஆளாவேன்
இப்போது சொல்லுங்கள் உலகப் பொதுமறை தந்த
வள்ளுவன் கூற்று பொய்யா மெய்யா என்று.


.

எழுதியவர் : இரா.சுவமிநாதன் (18-May-14, 11:07 pm)
பார்வை : 999

மேலே