உன் பார்வையில் ஓராயிரம்
கடலோரம் அலைபோல
தெருவோரம் நீ விளையாட
கதவோரம் நான் நிற்க
மனதுக்குள் அலை அலையாய்...
சில நேரம்...
சிறு பூக்களுடன் சில்விளையாட
கணுக்காலை தூக்கி குதிக்க
இடுப்பில் பாவாடையை நீ தூக்கிச்சொருகையில்
நொண்டியடித்தது என் இதயம்!!
நதியிலிறங்கி நீ நீராட
கரையில் என் மனம் போராட
நீச்சலடிப்பது நீ அல்ல
நீந்த தெரியாத என் உள்ளம்!!
வழுக்குமரத் திருவிழா
வந்து நின்றாய் முன்னாக
மஞ்சள் நீரை வாரி இரைக்க
வழுக்கி விழுந்தேன் உன்மனதுள் நான்!!
திருவீதி உலா
தெய்வங்களுக்கு...
விடியும் வரை சுற்றுகிறேன்
உன்கடைக்கண் தரிசனத்திற்கு
திருவிழா முடிவில்
வீதியெல்லாம் வெறிச்சோட
எம் மனமும் வெறிக்க பார்க்குதடி
பட்டணம் நோக்கி பரந்த உனையெண்ணி
பசுமைகள் எரிஞ்சதடி
நான் பார்த்த பார்வையிலே
சூரியனும் மறைந்ததடி
என் மன நோக்கமறிந்து
அன்றிருந்து இன்றுவரை மழை
இன்னும் வரவில்லையடி
நதிவற்றி நிலம் பட்டு போனதடி
நீ வருவாயென நித்தம் நினைக்குதடி!!
நாம் இணையாத இருப்புப்பாதையோ
பரவாயில்லை விரைவாகி வா
என் காய்ச்சலால்
மண்காய்வது முறையோ ?