நான்-வித்யா

உறவுகளை சேமித்து
கண்ணீரை செலவழிக்க
கற்றுக் கொடுத்தது
காலம்.........!
நேற்றைய இரவிலும்
நாளைய விடியலிலும்
எனக்காக நானே
காத்துக் கொண்டிருந்திருப்பேன்.......!
இதழிடுக்கில் எப்போதும்
சிறு புன்னகை........
விழியோரம் எப்போதும்
சிறு குறும்பு.............
மௌனமாய் அரங்கேறும்
புன்முறுவல்.............
கொஞ்சம் கொஞ்சமாக
நான் தொலைத்த எனது
அடையாளங்களிவை........!
காதல் தோல்வி
இல்லை........
புன்னகைகள் விற்று
கண்ணீர் வாங்கியதில்லை....
வார்த்தைகளில்
வசியமில்லை.......
என் கிறுக்கல்கள்
கவிதையாகிப்போனதால்
கவி எழுதிய நான்
கிறுக்கியாகிப்போனேன்......
கவி வரிகளை நேசித்துக்கொண்டே.......!
எப்போதும் அழகை
துதிப்பாடும் குரல்களுக்கு
செவிசாய்த்ததில்லை.......!
ஒரு விபத்து
ஒரு நோய் போதும்.....
அழகை சிதைப்பதற்கு.....!
உடலை உடல் அனுபவிக்க
ஒரு உடலுறவு போதும்.....
உடல் மனதை அனுபவிக்க
ஒரு குழந்தை போதும்.........
மனம் மனதை அனுபவிக்க
நூறு ஜென்மமங்கள் போதாது.......!
வாழ்வியல் எதார்த்தம்
அறிந்தவள் நான்..........!
ஆம்
மனம் திறக்கும்
காதல் கடிதங்களுக்கு
திறந்து பார்த்து பதில்
சொல்ல தவறியதில்லை........!
நான் உனக்கானவள் அல்ல என்று....!
பறவைக்காய்ச்சல் போல
பரபரப்பை ஏற்படுத்தும்
சில தருணங்களில்
நிதானம் இழந்திருப்பேன்......
அப்போதெல்லாம் அசரீரி
தண்ணீர் தெளித்து மயக்கம்
மீட்கும்............!
எனக்கான சமாதானங்களில்
பிடிவாதங்கள் அற்றுப்போக
சிறு புன்னகையில்
எல்லாவற்றையும்
புதைத்துக்கொள்ளும்
கவிதைக்காரி நான்.....!
திமிர் கலந்த
உணர்வுகள் பருகி
வளர்ந்துவிட்டேன்......
கொஞ்சம் இதமான
வருடல்களில்
மலர்ந்திருப்பேன்......!
பெயர் சொல்லும் அளவிற்கு
நான் புத்தனும் அல்ல
தெரசாவும் அல்ல...........!
-வித்யா
****************************************************************************