வினோத் வந்தாச்சா

"ஹேய் அங்க பாருங்க யாரு வரான்னு! கீத்து.... ஹாய் எப்படி இருக்க? ஏன் இவ்வளவு லேட்?" கீத்துவின் பால்ய சினேகிதி பிரபா அன்பாய் விசாரித்தாள்.

"பிரபா எப்படி இருக்க? பிள்ளைகள் நல்லா இருக்காங்களா? கணவர் எப்படி இருக்கார்? வந்திருக்காரா?" கீத்து பிரபாவிடம் கேட்டாள்
கீத்து ஒரு திருமண வீட்டிற்கு சென்றிந்த போதுதான் இந்த விசாரிப்பு!

"ஸ்ரீஜா அக்கா நீங்க எப்படி இருக்கிறீங்க? நான் நல்லா இருக்கேன்மா! பார்த்து எத்தனை வருஷம் ஆகுது?" என்று கேட்டாள் கீத்து

'கீத்து இது உன் வீட்டுக்காரரா? "

"ஆமாக்கா!"

"எப்படி இருக்கிறீங்க" நலம் விசாரித்தார் சரோ கஈத்துவின் கணவரிடம்

"சரோக்கா நீங்க எப்படி இருக்கிறீங்க? உஷா, தேவி, முத்து, சுரேஷ் நல்லா இருக்காங்களா அக்கா?
உஷா என்ன பன்றாக்கா?" கேட்டாள் கீத்து!

"உஷாவ அம்பாசமுத்திரத்துல கல்யாணம் பண்ணிக் குடுத்திருக்கு! ஒரு குழந்தையும் இருக்கான்!"

"முத்துக்கா?"

"முத்துவா? அவனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு தென்காசில வச்சுதான் கல்யாணம்! இப்ப விக்கிரம சிங்கபுரத்தில இருக்கான்!"

"ஆமா சரோக்கா நீங்க மட்டும் தான் பேரப்பிள்ளைகள் எடுத்தபிறகும் வயசாகாமல் அப்படியே இருக்கிறீங்க!"

"ஏய் சும்மா இரு கீத்து!"
சரோக்கா கீத்துவின் தாய் வீட்டின் பக்கத்துவீட்டில் வசிக்கக் கூடியவர்!

"சரி கீத்து ஏன் இவ்ளோ லேட்!" கேட்டாள் பிரபா! "இல்ல பிரபா
"காலையில ஆபீஸ் போயிட்டு ஹாப் டே லீவ் போட்டுத்தான் வந்தேன்!"

"சரி பொய் சாப்பிட்டு வாங்க போங்க!"

" சரிம்மா நான் சாப்பிட்டு வரேன்! "

கீத்து நேராக டைனிங் ஹாலுக்கு சென்றாள்! அங்கே அவள் ஊரில் உள்ளவர்கள் நிறைய பேர் இருந்தார்கள்!

"ஹே கீத்து எப்படி இருக்க? "நலம் விசாரித்தான் சேகர்!

"சேகர் அண்ணா! எப்படி இருக்கிறீங்க? நான் நல்லா இருக்கேன்! பிள்ளைகள் எப்படி இருக்காங்க அண்ணா? மனைவி எப்படி இருக்காங்க?"

"எல்லோரும் நல்லா இருக்காங்கம்மா! வா சாப்பிடு!"

"டேய் மாரி எப்படி இருக்க?" மாரியிடம் கேட்டாள் கீத்து

"நல்லா இருக்கேன் கீத்து நீ எப்படி இருக்க? பாத்து எத்தனை வருஷமாச்சு?
சரி கீத்து நீ சாப்பிடு மாப்பிள்ளைக்கு பசிக்கும்! உக்காந்து சாப்பிடுங்க மாப்ளே!" என்றான் மாரி! மாரி கீத்துவுடன் படித்த வகுப்புத்தோழன்!

கீத்து எல்லோரிடமும் அன்பாய் இருப்பாள்! அதனால் திருமண வீட்டில் வந்த அனைவரும் அவளிடம் நலம் விசாரிப்பதும் அவள் பதிலுக்கு அனைவரிடமும் பேசுவதுமாக இருந்தாள்!

"அங்கப் பாரு மாரி வினோத்! வினோத் நீ எப்படி இருக்க? "என்று வினோத்திடம் விசாரித்தாள் கீத்து

"நல்லா இருக்கிறேன்" என்று தலையை அசைத்தே பதில் சொன்னான்! வினோத் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் !

"சரி சரி சாப்பிடு" என்றாள் கீத்து!

ஒரு வழியாக பேசிப் பேசியே சாப்பிட்டு முடித்தாள் கீத்து! "சரி வாங்க நாம போயி மாப்பிள்ளை பெண்ணைப் பார்த்துட்டு வருவோம்" என்று சொல்லிக் கொண்டே கீத்து தன் கணவரையும் அழைத்துக் கொண்டு கல்யாண மண்டபத்தின் வரவேற்பறைக்கு சென்றாள்! அவள் வந்த நேரம் முகூர்த்தம் முடிந்து போயிருந்தது!
திருமணம் கீத்துவின் தாய்வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவரின் மகளுக்குத்தான்! கீத்துவின் அலுவலகம் சென்று பத்திரகை வைத்து அழைத்ததால் கீத்து தன் கணவருடன் திருமணத்திற்கு வந்திருந்தாள்!

மேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு மணமகளின் பெற்றோரிடம் சென்று விடை சொல்லி வீட்டுக்கு கிளம்பினாள் கீத்து! ஆனாலும் ஒவ்வொருவராக விசாரித்தபடியே இருந்தனர்! அவள் ஊரிலிருந்து அத்தனை பெரும் திருமணத்திற்கு வந்திருந்தனர்! அதனால் எல்லோரையும் அவளால் பார்த்து பேச முடிந்தது!

அவள் ஆசையாய் பேசும் சரோ அக்காவிடம் கேட்டாள் கீத்து "அக்கா எங்கம்மா அப்பா யாரும் வரலியா? "

"தெரியலியே" என்றாள் சரோக்கா!

"சரிக்கா பிள்ளைகள் வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி போகணும் நான் கிளம்பட்டுமா?" என்றாள் கீத்து!

"ஹாய் கீத்து நீ எப்ப வந்த? "என்றான் சந்தோஷ்! சந்தோஷ் கீத்துவின் தோழியின் அண்ணன்!

"நான் இப்பத்தான் வந்தேன் சந்தோஷ்! "என்றாள்
கீத்து!

"சாப்பிட்டியா கீத்து" என்று அன்பாய் நலம் விசாரித்தான்! சந்தோஷ் !

"நான் சாப்பிட்டேன்! நீ சாப்பிட்டியா?" என்று கேட்டாள் கீத்து ! "உங்க எல்லோரையும் இங்க பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு! ஏறக்குறைய நம்ம ஊரிலேருந்து எல்லோருமே கல்யாணத்திற்கு வந்திருக்காங்க! நம்ம ஊரிலேருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு போன எல்லா பொண்ணுங்களும் கல்யாணத்துக்கு வந்திருக்காங்க! இதப் பாத்தா எதோ கெட்டுகதர் மாதிரி இருக்கு இல்லையா சந்தோஷ்? "என்றாள் கீத்து

"ஆமா கீத்து அப்படித்தான் இருக்கு! எனக்கும் உன்னை பார்த்ததில் ரொம்ப சந்தோசம் சரி கீத்து மாப்பிள்ளை வெயிட் பண்றார் கிளம்பு!"

"சரி சந்தோஷ் நான் கிளம்புறன்!" எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள் கீத்து!

கீத்துவின் கணவர் கேட்டார்" இனி யாரிடமாவது பேசணுமா? கொஞ்சம் நேரத்துல எத்தனை பேர்கிட்ட பேசிட்ட?"

"இல்லங்க எல்லோரையும் பார்த்து ரொம்ப நாளாச்சா அதுதான் இப்படி! சரி கிளம்புங்க பிள்ளைகள் வந்துடுவாங்க! "என்று அவசரப் படுத்தினாள் கீத்து!

கீத்துவின் கணவர் மோட்டார்சைக்கிளை ஓட்ட கீத்து மண்டபத்தில் உள்ளவர்களிடம் பார்வையால் விடை சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்!

கீத்து வீட்டிற்கு வந்து பிள்ளைகளுக்கு மாலை டிபன் கொடுத்து டியூஷன் அனுப்பிவைத்துவிட்டு இரவு உணவுக்கான ஆயுத்தத்தில் இறங்கினாள்! கீத்துவின் கணவர் கடைவீதிக்கு சென்று வருவதாக சொல்லிக்கொண்டு வெளியில் கிளம்பினார்!

கீத்து வீட்டில் விளக்கு ஏற்றி சிறிது ஜெபங்கள் உச்சரித்துவிட்டு அடுப்பங்கரைக்கு சென்றாள்! காய்கறிகளை எடுத்து சுத்தம் செய்துகொண்டே மத்தியானம் திருமண மண்டபத்தில் பேசினவர்களை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தாள்! அப்பொழுதுதான் அவளுக்கு நினைவு வந்தது ஐயோ எல்லோரிடமும் போயிட்டு வரேன்னு சொன்னேன் வினோத் கிட்ட சொல்லலியே! ஐயோ பாவம் நான் வரும் பொது என்னையே பார்த்துட்டு நின்னான்! பாவி பாவி அவன் கிட்ட சொல்லாம வந்துட்டியே உள்மனது குத்திக் காட்டியது!

மொபலைக் கையிலெடுத்தாள் "அம்மா! நான் தான் கீத்து பேசுறேன் எப்படி இருக்கிறீங்க? "

"நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? மாப்பிள்ளை எப்படி இருக்கார்? பிள்ளைகள் எப்படி இருக்காங்க? பிள்ளைகள் எங்க? அவங்க கிட்ட போனைக் குடு" என்று கீத்துவின் அம்மா பேசிக்கொண்டே இருந்தார்!

"அய்யோ அம்மா! என்னக் கொஞ்சம் பேச விடுங்களேன்! "

"சரி பேசு "என்றார் கீத்துவின் அம்மா!

"அம்மா எதுக்கு காலையில ஷீஜுவொட கலயாணத்துக்கு வரலை? "

"அதுவா இன்னைக்கு நம்ம ஊர்ல நிறைய கல்யாணம் அதுதான் நேத்தே வரவேற்புக்கு போயிட்டேன் அதுதான் வரலை! இதைக் கேட்கத்தான் கூப்பிட்ட்டியா" என்றாள் அம்மா!

"இல்லம்மா சந்தோஷ் இருக்கான் இல்ல அவன் போன் நம்ப்ர் தெரியுமா? "

"எந்த சந்தோஷ்?"


"அதுதாம்மா நம்ம ஹெலனோட அண்ணன் சந்தோஷ்!"

"ஓ ! அவனா? அவன் நம்பர் உனக்கெதுக்கு? "

என்ன பதில் சொல்வதென்று யோசித்தாள் கீத்து! "இல்லம்மா திடீர்ன்னு ஹெலன் நெனப்பு வந்துது அதுதான் அவன் கிட்ட கேட்டு அவ நம்ம்பர் வாங்கலாமுன்னு கேட்டேன்!" எப்படியோ சமாளித்தாள் கீத்து!

அம்மா நம்பரை சொன்னார் அதை அப்படியே குறித்துக் கொண்டாள் கீத்து!

சந்தோஷுக்கு போன் செய்தாள் கீத்து! "சந்தோஷ் நான் தான் கீத்து பேசுறேன்!"

"என்ன கீத்து இந்த நேரத்துல?"

"ஒண்ணுமில்லை சந்தோஷ் அதுவந்து அதுவந்து.... உன் மனைவி எப்படி இருக்கா? "

"அவ நல்லாயிருக்கா!"

"பிள்ளைங்க எப்படி இருக்காங்க?"

"நல்லாயிருக்காங்க?"

"ஆமா சந்தோஷ் உன்னோட மனைவிக்கு ஹார்ட்ல எதோ பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன்! எப்படி இருக்கா?"

"உன்கிட்ட யார் சொன்னா? "

"என் அம்மா சொன்னாங்க!"

"ஒண்ணுமில்ல கீத்து! எதோ ஒரு சின்ன அடைப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க! இப்ப ட்றீட்மெண்டுல இருக்கா!"

"இப்ப பரவாயில்லையா சந்தோஷ்?"

"ம்ம்ம் பரவாயில்ல!"

"உன்னோட நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாது சந்தோஷ்! கவலைப் படாத! ஆமா உன்னோட தங்கச்சி ஹெலன் எப்படி இருக்கா? எங்க இருக்கா? "

"அவளா? அம்பாசமுத்திரத்துல இருக்கா ரெண்டு குழந்தைங்க இருக்காங்க!"

"சந்தோஷ் உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நெனைக்க மாட்டியே !"

"என்ன கீத்து இப்படி கேட்குற? கேளு!
இல்ல சந்தோஷ் அதுவந்து......"

"என்ன இழுக்குற வந்து போயின்னு?"

"இல்ல சந்தோஷ் அதுவந்து ... வினோத்தோட பொன் நம்பர் இருந்தா தரியா?"

"என்ன திடீர்ன்னு ? "கேட்டான் சந்தோஷ்!

"இல்ல சந்தோஷ் காலையில எல்லார் கிட்டேயும் போயிட்டுவரேன்னு சொன்னேன்! ஆனா அவன் கிட்ட மட்டும் சொல்லலை அதுதான்!"

"ஓ ஓ இவ்வளவு தானா! சரி எழுதிக்கோ என்று போன் நம்பரைக் கொடுத்தான் சந்தோஷ்!"

"ஹாய் வினோத் நான் தான் கீத்து பேசுறேன் வினோத்! எப்படி இருக்க? "

"கீத்து இந்த நம்பர் எப்படி கெடச்சுது?"

"சந்தொஷ்கிட்ட வாங்கினேன் வினோத்?"

"நீ எப்படிமா இருக்க?"

"நான் இருக்கேன் வினோத்! நீ எப்படி இருக்க? உன் மனைவி பிள்ளைகள் எப்படி இருக்காங்க?"

"நல்லா இருக்காங்கம்மா! உன் கணவர் பிள்ளைகள் எங்கே?"

"கணவர் கடைக்குப் போயிருக்கார்! பிள்ளைகள் டியூஷனுக்கு போயிருக்காங்க? "

"பிள்ளைகள் என்ன படிக்கிறாங்க? கீத்து!"

"பெரியவன் ஒன்பது, சின்னவ எட்டாம் கிளாஸ் படிக்கிறா! உன் பிள்ளைகள் என்ன பண்றாங்க?"

"பெரியவன் செக்கண்ட் போறான் சின்னவ பஸ்ட் போறா!"

"சின்ன பிள்ளைங்க தானா?"

"ஆமா உன் கல்யாணத்துக்கு எத்தனை வருஷம் கழிச்சு எனக்கு கல்யாணம் ஆச்சு?"

"ஆமாப்பா நான் தான் சீக்கிரம் பண்ணிட்டேன்!
எப்படி இருக்க வினோத்?"

"நீ எப்படி இருக்க கீத்து?"

'நான் நல்லா இருக்கேன் வினோத்! என்னை மன்னிச்சுடு வினோத்!"

"எதுக்கும்மா?"

"மண்டபத்துல எல்லோர்கிட்டேயும் போயிட்டுவரேன்னு சொன்னேன் உன்கிட்ட மட்டும் சொல்லலியே அதுதான்!"

"அதுவா உன் பார்வையிலே நான் புரிஞ்சுகிட்டேன் நீ சொன்ன வார்த்தைகளை!"

"என் மேல கோபம் இல்லையா வினோத்?"

"இல்லமா எந்த கோபமும் இல்லை! ஆமா நான் எப்ப உன் ஊர் பக்கம் வந்தாலும் உன் வீட்டுக்கு முன்னாடி ரோட்டுல தான் போவேன் உன்னை ஒருதடவை கூட நன் வெளில பார்த்ததே இல்லையே!"

"ஏய் நான் என்ன எப்பவும் ரோட்டுல நிப்பேன்னு நெனச்சியா? நான் அடிக்கடி வெளில வரமாட்டேன்! "

"ஒருநாள் உன் மனைவியை அழைச்சுட்டு என் வீட்டுக்கு வாயேன்! "

"பார்க்கலாம் கண்டிப்பா வரேன்!"

"நீ இப்ப எங்க இருக்குற வினோத்?"

"நான் இப்ப மூணார் ல இருக்கேன்! ஆமா நீ ஒருதடவை குடும்பமா மூணார் வாயேன் அங்க கெஸ்ட்கவுஸ் இருக்கு அங்க வந்து தங்கிட்டு மூணாரை சுத்திப் பார்த்துட்டு போகலாமே!"

"கண்டிப்பா கணவர் கிட்ட பேசிட்டு வரோம் வினோத்!"

"சந்தோஷமா இருக்கியா வினோத்?"

"எனக்கென்ன ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா?"

"நீ சந்தோஷமா இருக்கியாமா?"

"நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கணும்
அதுதான் என்னோட ஆசை வினோத்!"

"என்ன இது பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு?"

"அதுஒன்னுமில்லை! அதுவந்து......" யாரோ கானிங்க்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது!

"யாரோ கூப்பிடுறாங்க வினோத் யாருன்னு பார்த்துட்டு அப்புறமா கூப்பிடுறேன்!"

"சரிம்மா போ போயி யாருன்னு பாரு!பத்திரமா இரு!"

"சரி வினோத் டேக்கேர் பை !"

"பை கீத்து!"

கீத்து வாசலைத் திறந்தாள் அங்கே அவள் கணவர் நின்று கொண்டிருந்தார்!

"என்னங்க கடைக்குப் போயிட்டு வந்தாச்சா?"

"ஆமா வந்துட்டேன்! வினோத் வந்தானா?"

"வினோத் .....வினோத்..... ??????????" என்று இழுத்தாள் கீத்து

"என்ன முழிக்குற?"

'இல்ல வினோத்......."

"என்னடி நம்ம பையன் வினோத் டியூஷன்லெருந்து வந்தானா? இல்லையா?"

"இ ...இ ..இல்லைங்க.....!"

.......................சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (27-May-14, 8:23 am)
பார்வை : 487

மேலே