விபத்து

1
சட்டை பையில் இருந்த கைபேசி ஒலிக்க, எடுத்து பேச தொடங்கினான் குமரேசன்.
"ஹலோ, குமரேசனா..."
"ஆமா, நீங்க யாரு "
"நான் மகேஷ் பேசறேன், நேத்து உங்க கிட்ட 2 லோடு ஆத்து மணல் வேணும்னு சொல்லி இருந்தேன்.
நீங்களும் அனுப்பறேன்னு சொன்னீங்க, ஆனா இன்னும் மணல் வரல!
அதான் என்னாச்சுனு கேக்க போன் பண்ணினேன்"
"பதட்ட படாதீங்கண்ணே, உங்களுக்கு ஏற்கனவே லோடு அனுப்ப சொல்லிட்டேன்.
விசாரிச்சுட்டு கால் பண்றேன்" என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
மதியானமே லோடு போயிருக்கணுமே? ஏன் போகல? என சிந்தித்து கொண்டே
குவாரியில் வேலை செய்யும் முத்துவிற்கு கால் செய்தான்.
கைபேசி அணைத்து வைக்கபட்டிருந்தது! ஒன்றும் புரியாததால், குவாரிக்கு செல்ல காரை எடுத்தான்.
பாதி வழியில் தன்னுடைய லாரியும் ஒரு அரசாங்க முத்திரை பதித்த காரும் நிற்பதை கண்டு ஓரமாக நிறுத்தினான்.


2
சட்டை பையில் இருந்த கைபேசி ஒலிக்க, எடுத்து பேச தொடங்கினார் தமிழ்ச்செல்வன்.
"ஹலோ, தாசில்தார் ஐயவா "
"ஆமாம், சொல்லுங்க என்ன விஷயம் "
"அய்யா, நான் புதுப்பட்டில இருந்து பேசறேனுங்க, மணல் கொள்ளை பத்தி தகவல்
தெரிவிச்சா நடவடிக்கை எடுப்பீங்கன்னு பேப்பர்ல படிச்சேன்"
"ஆமாங்க, நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்"
"புதுபட்டில மணல் கொள்ளை நடக்குதுங்க, சீக்கிரமா போனிங்கனா புடிச்சரலாம்ங்க "
சொல்லிவிட்டு தொடர்பு துண்டானது.
கண்டிப்பாக பிடித்து விட வேண்டும் என்று சிந்தித்து கொண்டே ஓட்டுனரை அழைத்து,
"புதுப்பட்டிக்கு போங்க" என்று கூறிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தார்.
புதுப்பட்டி சென்று 1 மணி நேரம் காத்திருந்தும் மணல் வண்டி எதுவும் வரவில்லை.
வதந்தியா இருக்குமா? இல்ல நாம வரதுக்குள்ள தப்பிச்சுட்டாங்கலா?
சரி இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பலாம் என்று முடிவெடுத்தார் தமிழ்ச்செல்வன்!
எதற்கும் இருக்கட்டுமே என்று, அழைப்பு வந்த எண்ணிற்கு அழைத்து பார்த்தார்,
ரிங் போனது, அனால் யாரும் எடுக்கவில்லை. மீண்டும் இரண்டு முறை முயற்சி செய்தார், பலனில்லை.
வதந்தி என உறுதி செய்துவிட்டு மீண்டும் அலுவலகம் கிளம்பினார்.
அலுவலகம் வரும் வழியில் ஒரு கார் நின்று கொண்டிருக்க,
அதன் ஓரமாக ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.


3
அருகில் சென்றபொழுது புரிந்து விட்டது. புது தாசில்தார் வண்டியை நிறுத்தி,
மணல் அள்ளும் உரிமங்களை சோதனை செய்து கொண்டிருந்தார்.
"என்ன சார் பிரச்சினை" என்று கேட்டான்.
"நீங்க யாரு" தாசில்தார்.
"நான் தான் இந்த வண்டிக்கு ஓனர், மணல் குவாரி வெச்சுருக்கேன், அங்க இருந்து வர மணல் தான் இது"
"அதெல்லாம் சரி, பெர்மிட்ல இருக்குறத விட ரெண்டு மடங்கு மணல் இருக்கே"
"பதட்டப்படாதீங்க தாசில்தார் சார், தர வேண்டியவங்களுக்கு எல்லாம் தந்து தான் மணல் எடுக்கறோம்,
உங்க பங்கையும் தர்றோம் வாங்கிகிட்டு வண்டிய விடுங்க"
பொறுமையாக கூறிய குமரேசனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தார் தமிழ்ச்செல்வன்.
பின் உதவியாளரிடம் திரும்பி, "வண்டிய பறிமுதல் பண்ணுங்க, இவர் தான் ஓனர் னு சொல்றாரு.
இவர் மேல கேஸ் போடுங்க.கோர்ட்ல வந்து கேஸ் அ முடிச்சுட்டு வண்டிய எடுத்துக்கட்டும்"
என்று கூறிவிட்டு அடுத்த வண்டியை சோதனையிட சென்று விட்டார்.


4
அருகில் சென்றபொழுது புரிந்து விட்டது. காரில் ஏதொ பழுது என்று!
"என்ன பிரச்சனை"
"தெரியலங்க, டிரைவர் பாத்துட்டு இருக்கார்"
"நீங்க எங்க போகணும் னு சொல்லுங்க, நாங்க இறக்கி விட்டுடறோம்"
"இல்ல பரவால இருக்கட்டும்"
"நான் ஒரு அரசு அதிகாரி, என்ன நீங்க நம்பலாம்!
கைக்குழந்தைய வெச்சுகிட்டு கஷ்டபடாதீங்க, எங்க போகணும்னு சொல்லுங்க"
"வீடு வரைக்கும்லாம் வேணாம், என்ன பஸ் ஸ்டாண்ட் இறக்கி விட்டுடுங்க.
நான் அங்க இருந்து ஆட்டோல போய்க்கறேன்"
"சரி, உங்க கணவர்கிட்ட போன் பண்ணி சொல்லிருங்க"..
"நான் போன் பண்ணினேன் அவர் எடுக்கல, போன் பாத்ததும் கூப்பிடுவாரு. அப்ப சொல்லிக்கறேன்"
"சரி" என்று அவர்களை பின்னால் உட்கார வைத்து விட்டு முன் இருக்கைக்கு மாறினான் தமிழ்ச்செல்வன்.


5
அபராதம், லாரி பறிமுதல் என ஒரு பெரும் தொகை இழப்பு குமரேசனுக்கு.
தாசில்தாரின் நடவடிக்கையால் அவரின் மீதான வன்மம் வளர்ந்து கொண்டே இருந்தது.
"மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல், தாசில்தார் தொடர் நடவடிக்கை"
என்ற புதிய செய்தியை பார்த்ததும் அவரின் மேலிருந்த கோபம் இன்னும் அதிகமானது.
அவரை பழி வாங்க வழி தேடும்பொழுது கண்களில் சிக்கியது பின்வரும் செய்தி
"புதுப்பட்டி அருகே ஆபத்தான பாலத்து வளைவில் விபத்து".
மனதில் உதித்த சிந்தனையை உடனே செயல் படுத்த தொடங்கினான்.
"முத்து, ஒரு காரியம் பண்ணனும் வீட்டுக்கு வா"
"அய்யா, வீட்டுக்கா? அம்மாவும் சின்னையாவும் இருப்பாங்களே"
"அவங்க வீட்ல இல்ல ஊருக்கு போயிருக்காங்க. சாயங்காலம் தான் வருவாங்க"
"சரிங்கையா, வரேன்"
முத்து வந்தவுடன் திட்டம் தீட்டப்பட்டது.
"நான் அவனுக்கு கால் பண்ணி புதுப்பட்டி வழியா மணல் கடத்துறாங்க னு சொல்லுவேன்,
அவன் அங்க போய் பாத்துட்டு யாரும் இல்லனு திரும்பி வருவான்.
சரியா அந்த பாலத்து வளைவுல அவன் கார் பின்னாடி இடிக்கனும்.
கார் ஆத்துல விழுந்தா கண்டிப்பா அவன் காலி, புரிஞ்சுதா "
"புரிஞ்சுதுங்க"
"சந்தேகம் வராம இருக்க, ஒரு கட்டிங்க போட்டுக்க, குடிபோதையில் விபத்து னு கேஸ் மாறிடும்"
"சரிங்க" என்று கூறிவிட்டு முத்து புறப்பட்டான்.
குமரேசன் போனை எடுத்து தமிழ்ச்செல்வனுக்கு கால் செய்தான்.
"ஹலோ, தாசில்தார் ஐயவா"
"ஆமாம், சொல்லுங்க என்ன விஷயம் "
"அய்யா, நான் புதுப்பட்டில இருந்து பேசறேனுங்க,
மணல் கொள்ளை பத்தி தகவல் தெரிவிச்சா நடவடிக்கை எடுப்பீங்கன்னு பேப்பர்ல படிச்சேன்"
"ஆமாங்க, நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்"
"புதுபட்டில மணல் கொள்ளை நடக்குதுங்க, சீக்கிரமா போனிங்கனா புடிச்சரலாம்ங்க"
சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான்.
2 மணி நேரத்திற்கு பிறகு தமிழ்செல்வனிடம் இருந்துஅழைப்பு வர..
எடுக்காமல் இருந்தான் குமரேசன். மீண்டும் அவனிடமிருந்து அழைப்பு
வரவே போனை சைலென்ட் மோடில் வைத்து விட்டு குளிக்க சென்றான்.
வந்து பார்த்த பொழுது 5 தவறிய அழைப்புகள் இருந்தன. திலகா இரண்டு முறை கால் பண்ணி இருந்தாள்.
உடனே அவளுக்கு கால் செய்தான்.


6
"பாத்து மெதுவா போங்கண்ணே.. இந்த வழில அடிக்கடி விபத்துனு செய்தில படிக்கறேன்" என்று தமிழ்ச்செல்வன் கூறும் போது
பின்னால் இருந்த பெண்ணின் அலைபேசி சிணுங்கவும் அமைதியானார்.
"ஹலோ மாமா"
"ஹலோ திலகா, எங்க இருக்க?, பையன் என்ன பண்றான்"
"வந்துகிட்டு இருக்கேன் மாமா, அவன் தூங்கறான்.போன் பண்ணும்போது எடுக்காம என்ன பண்ணிட்டு இருந்தீங்க"
"பதட்டப்படாத திலகா, விஷயத்த சொல்லு"
"வர வழில கார் ரிப்பேர் ஆச்சு, அதான் வேற கார் அனுப்ப சொல்ல கால் பண்ணினேன்"
"ஓஹோ, இப்ப சரி ஆச்சுல? நம்ம வண்டில தானே வர?"
"இல்ல மாமா, ஒரு அரசாங்க அதிகாரி"
இடைமறித்து "தாசில்தார்னு சொல்லுங்க" என்றார் தமிழ்ச்செல்வன்.
"ஆங், தாசில்தார் என்னைய பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விட்டுடறேன்னு சொன்னாரு.
அவரு கார்ல தான் வரேன்" தூக்கி வாரி போட்டது குமரேசனுக்கு...
"எ.. எ.. என்ன சொ..சொல்ற ? எ... எ... எங்க இ.. இருக்க?"
"பதட்டப்படாதீங்க மாமா, பாலத்துக்கு முன்னாடி வந்துகிட்டு இருக்கோம்"
என்று சொல்லும்போதே முத்துவின் லாரி தாசில்தாரின் காரில் மோத
"டமார்" என்ற சத்தம் கேட்டு பதட்டத்தில் மயங்கினான் குமரேசன் !

எழுதியவர் : வினோத் பாஸ்கரன் (27-May-14, 6:24 am)
Tanglish : vibathu
பார்வை : 484

மேலே