நினைவிருக்கிறதா
நினைவிருக்கிறதா உனக்கு?
எதிரெதிர்த் திசையில்
எங்கோ பயணித்தோம்...
காலச் சுழற்சியில் - நம்
கண்கள் சந்தித்த போது-
என்னதான் நடந்ததென
நினைவிருக்கிறதா உனக்கு?
*
உன் மூச்சுக்காற்று
என் மார்பினிலே
சூடாகக் கேட்டது!
நான்கு கண்களும்
நிஜமிழந்தது!
இதயம் முழுதும் இதமானது!
உயிரே இல்லை-
உடலையும் காணவில்லை!
*
காலம் வரைந்த
அந்தக் கோலங்கள்-
அலங்கோலமாகிப் போனதால்-
காலமே தன் காலால்
அழித்துப் போட்டது!
அழித்த பின்னும்...
திட்டுத்திட்டாய் இன்று வரை-
கோலத்தின் சுவடுகள்...
காலத்தின் கால் தடங்கள்...
- வாசலிலிருந்து இதயம் வரை!
*
வாசல் எது?
கண்கள் எது?
பயணம் எது?
பாதை எது?
நினைவிருக்கிறதா உனக்கு?