ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள் -7
ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள்.
பழந்தமிழ் கவிதைகளில் காணப்படும் காதல் அல்லது காமம் பற்றிய கவிமரபு ‘அகம்’ எனும் பிரிவில் அடக்கப்பட்டு அதுவும் அன்பினைந்திணை என ஒரு கூறாகவும் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரு வகையும் பிறிதொரு கூறாகவும் வகுக்கப்பட்டு வந்துள்ளது.
இதனை நம்பி அகப் பொருள்
ஐந்திணையுடையது
அன்புடைக் காமம்
கைக்கிளையுடையது
ஒருதலைக் காமம்
பெருந்திணை என்பது
பொருந்தாக் காமம்
என மூவித அடைமொழி கொடுத்து வழங்கப் படுவனவற்றுள் அறம் பொருள் இன்பம் உள்ளிட்ட அன்பினைந்திணை உடைய அன்புடைக் காமமொன்றே ஒழுக்கமுடையதென்றும் பிற இரண்டும் குறைபாடுடையன என்றும் இதனாலேயே புலவர்களால் இவை இரண்டும் ஒதுக்கப்பட்டது என நம்புதற்கிடமுண்டு.
ஆண் பெண் எனும் இரு பாலர் கூடிக் களிக்கும் களவியியலிலெ இயற்கைப் புணர்ச்சிக்கண் அன்பினைந்திணைக்குரிய காதலனும் காதலியும் எதிர்படுதலை கூறும்பொழுது,
ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலதாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
என்பர் தொல்காப்பியர்.
இவர்கள் இருவரும் ஒத்த கிழவன் கிழத்தி என்பதை விளக்கும் வகையிலெத்தனை வகையில் ஒத்து இருந்தனர் என்றால், குலம், ஒழுக்கம், ஆள்வினையுடைமை, பருவன், அழகு, அன்பு, அடக்கம், கருணை, அறிவு, செல்வம். ஆகியன என்கிறது மற்றொரு சூத்திரம். இவ்வாறு ஆண் பெண் என இரு பாலர் இருப்பதால். இந்தப் பால் பற்றி மேலும் நாம் ஆய்தல் கடப்பாடு ஆகும்.
தமிழ் இலக்கண நூல் ஆகிய நேமிநாதம் பாலின் வகை ஐந்து என இவ்வாறு கூறுகிறது.
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென்று
மருவியபா லனைத்தும் வகுப்பின் –பொருவிலா
வோங்கு திணைப்பால் ஒரு மூன் றொழிந்தவை
பாங்கில் அஃறினைப் பாலாம்
அதனைத் தொடர்ந்து சொல் என்பதை விளக்கப் போந்த அதே நூல்,
ஏற்ற திணையிரண்டும் பாலைந்தும் ஏழ்வழுவும்
வேற்றுமை எட்டும் தொகையாறும்-ஆற்றறிய
மூன்றிடமுங் காலங்கள் மூன்றும் இரண்டிடத்தால்
தோன்ற வுரைப்பதாஞ் சொல்
என ஆண், பெண், ஒன்றன் பால், பலவின் பால், அஃறினைப் பால் எனு ஐந்து வகையைக் கூறுகிறது.
ஈஸ்வர பாரதி தொகுத்து அளித்த வடமலை நிகண்டு பால் என்ற சொல்லுக்கு
பாலெனும் பெயரே பகுத்தலும் பக்கமும்
கீரமும் இயல்பும் இடமுங் கிளத்துவர்
என ஐந்து பொருள்களை கூறுகிறது.
ஆயினும் பால் என்பது சேரும் இடத்தைப் பொறுத்தது என பத்து வகைப் பாலை மொத்தமாய் விவரிக்கிறது விவேக சூடாமணி/
பொருட் பாலை விரும்புவார்கள் காமப்பால் இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்று இல்லார்
குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவார்.
பாட்டியலில் பால் பொருத்தம் எவ்வாறு அமையும் என ஆயுங்கால்,
”குற்றெழுத்து எல்லாம் ஆண்பால் எனவும் நெட்டெழுத்து எல்லாம் பெண்பால் எனவும் கொள்க. அன்றியும் உயிரெல்லாம் ஆண்பால் எனவும் உயிர்மெய்யெல்லாம் பெண்பால் எனவும் கொள்வர் பிங்கலந்தை முதலிய நூலார். அவற்றுள் மாந்தரைப் புகழ ஆண்பால் எழுத்தும் மாதரைப் புகழ பெண்பால் எழுத்தும் முதற்கண் வரின் பால் ஒன்றிச் சிறப்பாம். ஆயினும் அவை மயங்கி வரினும் இழுக்காகா. ஒற்றெழுத்தும் ஆய்தமும் முதற்கண் வாரா. அவை அலி எனப்படும்” என சிதம்பரப் பாட்டியல் பிட்டு வைக்கிறது.
இதனையே வெண்பாப் பாட்டியல்,
எண்ணுங் குறிலாண் இயைந்த நெடிலெல்லாம்
பெண்ணாகும் ஒற்றாய்தம் பேடாகும்-பெண்ணினோடு
ஆண்புணர்ச்சிக் கவ்வவ் வெழுத்தே மயங்கினுமா
மான்பில்பே டென்றார் மதித்து
என விளக்குகிறது..
உண்மையில் செய்யுளில் பால் பொருத்தம் வேறு. வாழ்வில் பால் பொருத்தம் வேறு. வாழ்வில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பால் பொருத்தமே இணை விழைச்சுக்கு காரணம் ஆகிறது. இந்தக் காரணமே கரணம் ஆகி திருமணம் எனச் சொல்லப் படுகிறது. இதனை களவொழுக்கம் என தமிழ் இலக்கியம் கூறுகிறது. களவு என்றாலே காதலும் திருட்டும் எனப் பொருள்படும்போது அடுத்தவர்க்குத் தெரியாமல் செய்வதுவே களவு என்றால் அதில் ஒழுக்கம் எங்கே வந்தது.. பாரதிதாசனின் முதல் முத்தத்தில், அத்தை மகன் மாமன் மகள் என உறவு இருந்தும், பருவம் வந்தபோது பார்ப்பது தடுக்கபபட்டு, பெண்ணின் நடை ஒடுக்கப்பட்டு இருப்பினும், காதலும் காமமும் ஒருசேர எப்படி வெளிப்படுகிறது என்பதை ஒரே ஒரு ’எதிர்பாராத முத்தத்தில்”.விளக்கிக் காட்டுகிறார்..
வையம் சிலிர்த்தது நற் புனிதையேக,
மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச்சென்று
கையலுத்துப் போகு'தென்று மரத்தின்வேர்மேல்
கடிதுவைத்தாள்; "அத்தான்நீர் மறந்தீர்என்று
மெய்யாக நான்நினைத்தேன்" என்றாள்.அன்னோன்
வெடுக்கென்று தான்அனைத்தான். "விடாதீர்"என்றாள்!
கையிரண்டும் மெய்யிருக, இதழ்நிலத்தில்
கனஉதட்டை ஊன்றினான் விதைத்தான்முத்தம்!
இத்தகைய பருவ கால காதலை, அன்னை தந்தை அறியாமல் செய்துவிட்டு பின் அதனை நன்முறையில் முறைப் படுத்தும் ஒழுக்கம் என்பதாலேயே களவொழுக்கம் என பிற்காலப் புலவர்கள் நியாயப் படுத்த முனைந்தனர் எனறே கொள்ள வேண்டும்.
களவென்றால் என்ன என்று விளக்காமல் காமக் கூட்டம் என்னும் சொற்களில் கந்தர்வம் போன்ற இயல்பினது என்கிறது தொல்காப்பியம். கந்தர்வக் காதல் என்றால் அதற்குக் கரணம் –கல்யானம் தேவையில்லை. ஆயினும் மறையோர் தேயத்து எட்டுவகை மன்றலுள்ளும் இதுவே சிறந்தது என சொல்வதாகவே கொள்ள வைக்கிறது அந்த தொல்காப்பிய சூத்திரம்..
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்
காமக் கூட்டம் காணும் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே
இணை விழைச்சில், உந்தப்பட்டு கண்டதும் காதல் கொண்டு அதனால் காமம் கொண்டு வாழ்வதே நடமுறையாக இருக்கிறது. இது நவீன தமிழ் இலக்கியத்திலும் பெரிதும் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 'ராமன் இழந்த சூர்ப்பநகை' எனும் தலைப்பில் கவிஞர் பிரமிள் சூர்ப்பனகை ராமனை விரும்பினாலும் அவன் அவளை இழந்ததற்குக் காரணம் அவன் கடவுளாக இருந்ததுவே என்பதில், காமமா காதலா என்பது பகுக்க இயலாத பொருள் ஆகிவிடுகிறது என விளக்குகிறார். சென்ற நூற்றாண்டில் வந்த அந்தக் கவிதையை பலரும் வாசித்து இருக்க முடியாது என்பதால் அதனை அப்படியே கீழே அளிக்கிறேன்.
'இருளின்நிற முகக்கதுப்பில்
தணல்கள் சிரித்தன
அவள் ராக்ஷஸப்பாறைகள்
பாகாய் உருகின.
உருகியென்?
அவனோ கடவுள்
ஆடையின் இரவினுள்
உதயத்தை நாடும்
பருவ இருள்
நடையோ
ரடியொவ்வோ
ரடியில்
தசையின்
ஜ்வாலை நடுக்கம்
நடுங்கியென்?
அவனோ, பாவம்
கடவுள்
தழுவ விரியும்
தொடைகள் திரண்டு
பிரிந்துபிரிந்து
இடையே ஓர்
தலைகீழ்க் கருஞ்சுடர்
எரிந்தெரிந்து அழைக்கும்
அழைத்தென்?
அவனோ, த்சொ,
கடவுள்'.
சில நேரங்களில் ஆண் பெண் உறவில் காதல் மற்றும் காமம் தலை தூக்கி இருப்பினும் அதில் புரிதல் என்பது இரு பாலர்க்கும் இருப்பதில்லை. பெண்ணின் உணர்வுகளை ஆண் மகன் பெரும்பாலும் அறிவதில்லை . ஏனெனில் அவை வெட்கப்பட்டு நாணம் கொண்டு மறைக்கப் பட்டவை. ஆயினும் அவள் காதலில் ஏன் காமத்தில் சளைத்தவள் அல்ல. இதனை விளக்க ஒரெ ஒரு துளி மிக மிக அபூர்வமாக தமிழில் தைரியமாக படைக்கப் பட்ட “என் காமத்தின் துளி” எனும் குட்டி ரேவதியின் கவிதையைக் காணலாம்.
'என் காமத்தை இதுவரை
நீ வருடிப்பார்த்தது கூட இல்லை
அது அணையாது காக்கவேண்டிய
ஒரு சுடரைப்போலத்
தெருவெங்கும் அலைகிறது
பின்புதான் குப்பைகளை எரிக்கும்
நெருப்போடு சேர்கிறது.
..........
வருடிப்பார்த்திருக்கிறாயா என் காமத்தை
ஒரு புதிய காகிதத்தில் எழுத விரும்புவதைப்போலவோ
அல்லது
ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும்
ஆர்வத்துடனோ?'
பால் பொருத்தம் பாடலில் மட்டும் அல்ல பாழாகி விடாமல் வாழ்க்கை அமைவதற்கும் மிக மிக இன்றியமயாதது என்பது இப்போது அனைவர்க்கும் அங்கையிற் கனியென விளங்கி இருக்கும்.
பி.கு. இறுதி வரிகளில் சுட்டியுள்ள கவிதை குட்டி ரேவதி எழுதியது என்பதை நான் வேறு ஒருவர் மேற்கொள் இல் இருந்து எழுதி உள்ளேன். ஆயினும் அது சில்வியா ப்ளாத்தின் கவிதை என தற்போது எதேச்சையாகப் பார்த்தேன். சமகாலப் படைப்பாளிகள் யாரையும் நாம் மேற்கோள் காட்டக் கூடாது என்பதை பாடமாகக் கொண்டேன்.