எனக்கு மட்டுமே தெரிந்த உனது வலிகள்
எனக்கு வாழ்க்கை சலிக்கவில்லை; வெறுத்துவிட்டது
நம்பிக்கை குறையவில்லை; இறந்துவிட்டது
உணர்ச்சி கூடவில்லை; மரத்துவிட்டது
ஆன்மாவில் உயிர்ச்சியில்லை; மடிந்துவிட்டது!
நான் பைத்தியமில்லை
இது தண்டனை…
எனக்கு நானே கொடுக்கும் தண்டனை
என் முட்டாள்தனத்திற்கு நான் கொடுக்கும் பரிசு!
நம்பி நம்பி ஏமாறும் முட்டாள் நான்
நம்பிக்கை இன்றி எப்படி வாழ்வது?
எனக்கு நானே தீர்மானம் செய்கிறேன்
தவறிழைத்து விட்டதால் தண்டனை விதிக்கிறேன்!
கசிந்துருகி காதல் செய்தேன்
இன்று கண்ணீரில் நனைகிறேன்
மழையிலும் வெயிலிலும் உலவுகிறேன்
என் தோல்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை
அதுவும் செத்துவிட்டதோ?
எக்கச்சக்கமான காயங்கள்
கணக்கு வழக்கு இல்லாத வடுக்கள்
வெந்த புண்ணில் பாயும் வேல்கள்
குற்றுயிரும் குலையுயிருமாக என் ஆன்மா!
அன்பைத் தேடி அலைந்த வேளையில்
கிடைத்தன கன்னத்தில் அறைகள்!
படு கேவலமான வார்த்தைகள்
அனுதினமும் அர்ச்சனையாய் பூஜிக்கப்பட்டன…
நிறைகள் எல்லாம் குறையாகக் காணப்பட்டன
பிடித்தன எல்லாம் பிடிக்காததாய் மாறின
***அதிக நம்பிக்கை துரோகத்தைப் பரிசளித்தது
ஆழமான காதல் புதைக்குழியில் சமாதியானது!***
கண்ணீருக்கு மதிப்பில்லை
காயத்திற்கு மருந்தில்லை
உறவுகள் அனைத்தும் இழந்தேன்
அவனுக்காக ஏங்கி உருகினேன்
இன்று திருந்துவான், நாளை திருந்துவான் என
என்னை நானே சமாதானப்படுத்தினேன்!
மணித்துளிகள் நாட்களாயின
நாட்கள் வாரங்களாயின
வாரங்கள் மாதங்களாயின…
கரம் பிடிப்பதாய் சொன்னவன்
நிர்க்கதியாய் தவிக்கவிட்டுவிட்டான்...!
நான் படும் வேதனை புரிந்தும்
பிடிவாதமாய் அவன்...!
வலிகள் பெருகி மரணத்தை நெருங்கியது
நம்பிக்கை உடைந்து ஏமாற்றமாகியது
ஏமாற்றங்கள் கூடி விரக்தியளித்தது
பொறுத்து பொறுத்து பொறுமை இழந்தேன்
ஆனால், பொங்கி எழவில்லை!
நியாயம் கேட்டேன்
அநியாயமான பதில்கள் வந்தன
வாக்குறுதிகள் கரைந்துப் போய்விட்டன
பழைய காதல் மரித்துப் போய்விட்டது
மனிதர்கள்(அவன்) மாறிப் போய்விட்டனர்!
தவறு செய்துவிட்டேன்
பொய் என்று தெரிந்தும் மெய் என்று நம்பினேன்
போலியை அடையாளம் கண்ட பின்னும் காதலித்தேன்
வலி என்று தெரிந்தும் மென்மேலும் விரும்பினேன்
அதற்கான தண்டனை இன்று பெறுகிறேன்
என்னை நானே வதைக்கிறேன்!
ஒன்றை நினைத்து பார்க்க மறந்து விடாதே...!
இன்று உன்முன் நடமாடுபவர்களின் போலியான
அன்பில் மயங்கி ஏமாந்துவிடாதே...!
ஏமாற்றத்தின் வலியும் வேதனையும் எனக்கு
மட்டுமே தெரியும்..!
நீயும் அதனை அனுபவிக்க நான் ஒரு போதும் விரும்பமாட்டேன்...
இப்படிக்கு.................. உன்னால் ஏமாற்றப்பட்டவள்!!!
("என் வாழ்வில் என்னை கடந்து சென்றவர்களின்
சிலரது வலிகளை நினைவூட்டிய வரிகள் இவை")