கற்றவரில் கற்றவர் எத்தனை பேர்

எழுதப் படிக்கத் தெரிந்தவர் எல்லாம்தம்மைக் கற்றவராய்க் கருதும் காலம். தேர்வுக்கு மட்டும் பாடத்தை மனப்பாடம் செய்து தேர்வெழுதி அதிக மதிப்பெண் பெறுபவன் கற்றவர் பட்டியலில் இடம்பெற மாட்டான். அவன் அறிவைப் பெருக்கப் படித்தவன் அல்ல. பெரும்பொருள் ஈட்ட அரும்பாடு பட்டு அதிக மதிப்பெண் பெற்றவன். நல்ல நூல்களைக் கற்கும் வாய்ப்பை இழந்தவன்.
குறைந்த மதிப்பெண் பெற்றவன் கணினி செல்பேசி விளையாட்டில் நேரத்தைப் படுகொலை செய்து பொழுதைக் கழிக்கும் மனச்சாட்சி இல்லாதவன்.
பட்டம் பெற்றவர் எல்லோரையும் கற்றவர் பட்டியலில் சேர்த்திட முடியாது. சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்காதவன் கற்றும் கல்லாப் பதரே.
காமராசர், கண்ணதாசன், கலைஞர் போன்றோர் பள்ளி இறுதி வகுப்பையே தாண்டாதவர்கள். ஆனால் காமராசர் நல்ல நூல்களைப் படித்தவர். சமுதாயதைப் பற்றிய சிந்தனையில் உயர்ந்த நிலையை அடைந்தவர். கண்ணதாசனும், கலைஞரும் தமிழ்ப் பேராசிரியர்களை மிஞ்சும் அளவுக்கு தமிழ் நூல்களைப் படித்துவிட்டு தங்கள் நுண்ணறிவைத் தங்கள் எழுத்தில். சிந்தனையில், கதைகளில். கட்டுரைகளில், கவிதைகளில், பாடல்களில் வெளிப்படுத்தியவர்கள்.
பெரியாரும் ஒரு படிக்காத மேதை, புராண இதிகாசங்களில் ஆழ்ந்த புலமை உடையவர். அவரது கொள்கையை நம்மில் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவரது அறிவுத் திறனையும் சமுதாய முன்னேற்றம் பற்றிய அவரது சிந்தனையயும் யாரும் குறை சொல்ல முடியாது.
நம்மில் கற்றவரில் கற்றவர் எத்தனை பேர்?