கவித்தென்றல் நூல் ஆசிரியர் கவிஞர் பி மாரியம்மாள் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

கவித்தென்றல் !

நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 30.

நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் குறை இல்லாத காரணத்தால் ஆழ்ந்து சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .குடத்து விளக்காக இருந்த கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களின் கவிதை ஆற்றலை குன்றத்து விளக்காக ஒளிரும் வண்ணம் நூலாக்கிய இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் படித்து உள்ளார்கள்.இந்த நூலை தன் பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் . இந்த நூல் வெளி வர உதவிய உள்ளங்களுக்கு மறக்காமல் நன்றியை பதிவு செய்துள்ளார்கள் .

நூலில் முதல் கவிதை செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்புச் செய்தியானவர் .இந்தியாவின் கடைக்கோடியான இராமேசுவரத்தில் படகோட்டி மகனாகப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றிய கவிதை நன்று.

ஐயா அப்துல் கலாம் !

கனவுகளை
கனவில் மட்டுமல்லாமல்
நினைவிலும்
சிற்பமாக செதுக்கியவர் .

வீடு வீடாக
செய்தித்தாள் போட்டு
கல்வி பயின்ற
பல்கலைக்கழகம் .

10 வகுப்பு தேர்வில் தோற்று பின் நாளில் பெரிய சாதனைகள் புரிந்தவர்கள் பட்டியல் நீளம்.இதை உணராமல் தேர்வில் தோல்வி அடையும் சிறு தோல்வி கூட தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் .தோல்வியால் துவளும் நெஞ்சங்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதை மிக நன்று .

வீழ்வது தோல்வியல்ல !

கீழே விழுவதால்
வீழ்ந்து போவதில்லை ..
அருவி !

மண்ணில் விழுவதால்
பழுதாவது இல்லை ..
விதை !

தவறி விழுவதால்
தளிர்நடை மறுப்பதில்லை
மழலை !

முயற்சியில் தோல்வியடைந்தால்
விட்டு விலகுதல் அழகா ?
உனக்கு ..

எளிய சொற்களின் மூலம் வாழ்வியல் கருத்துக்களை நுட்பமாக கற்பிக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

கற்றது கையளவு !

அம்மாவிடம்
அன்பைக் கற்க வேண்டும் !

நண்பரிடம்
நேசத்தைக் கற்க வேண்டும் !

உறவினர்களிடம்
விட்டுக்கொடுத்தலைக் கற்க வேண்டும் !

முதியோர்களிடம்
அனுபவத்தைக் கற்க வேண்டும் !

இனிய நண்பர் மாற்றுத்திறனாளிகள் கவிதைத் தொகுப்பு வெளியிட்டவர் பதிப்பாளர் ஏகலைவன் பற்றிய கவிதை நன்று .

நம்பிக்கை நாயகனே வா !

மாற்றுத்திறனாளிகளின்
நலனுக்காகவே
வாழ்ந்து கொண்டு
பலரின் வாழ்க்கைப் பாதையில்
ஒளியை மலரச் செய்யும்
சகோதரனே ஏகலைவா ..!

புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் நூலின் உள்ளன. பாராட்டுக்கள் .

அன்பின் மேன்மை சொல்லும் ஹைக்கூ நன்று .

எதிரியையும் பணியவைக்கும்
ஆன்ம மந்திரம்
அன்பு !

நட்பின் நுட்பம் சொல்லும் ஹைக்கூ மிக நன்று .

இன்பத்தில் தூரமிருந்தாலும்
துன்பத்தில் பக்கமிருக்கும்
உன்னதமான நட்பு !

இன்று பலர் குடியால் சீரழிந்து வருகிறார்கள் .மதிப்பை எங்கும் இழந்து வருகின்றனர் . அவர்களுக்கான ஹைக்கூ ஒன்று .

குடியை நிறுத்து
ஊற்றெடுக்கும்
வளமை !

கவித்தென்றல் நூலிருக்கான தலைப்பு மிகப் பொருத்தம் பெயருக்குப் பெயர் வைக்காமல் உண்மையில் கவிதைகள் கவித்தென்றலாகவே இருந்தது .நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களுக்கு எழுதிய இந்த நூலிற்காக பாராட்டுக்கள் .இன்னும் எழுத உள்ள நூலிற்கு வாழ்த்துக்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (31-May-14, 8:26 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 149

மேலே