பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்கள் - ஆசாரக் கோவை 27

இழியாமை நன்குமிழ்ந் தெச்சி லறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்காற் குடித்துத் துடைத்து முகத்துறுப்
பொத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி. 27 ஆசாரக் கோவை

இன்னிசை பஃறொடை வெண்பா

பொருளுரை:

வாயில் புகுந்த நீர் விழுங்காதபடி நன்றாய்க் கொப்புளித்து எச்சில் நீங்கும்படி வாயையும், அதன் கீழேயும் நன்றாகத் துடைத்து அழகு உடையதாக முக்கால் குடித்து, துடைத்துக்கொண்டு முகத் திலுள்ள கண் முதலிய உறுப்புக்களை அவற் றிற்குத் தக்க வகைகளால் மந்திரஞ் சொல்லி விரல்களைச் செலுத்தி வாய் துடைத்தல் பெரியோர் அறிந் துரைத்த ஒழுக்கங்களாகும்.

கருத்துரை:

உணவு உண்டபின் வாயை நன்கு கொப்புளித்து, எச்சிலறச் சுத்தி செய்து முக்கால் குடிக்க வேண் டும்.

முக்கால் குடித்தல் என்பது கடவுளின் பெயரைச் சொல்லிக், குடங்கையிட்டு உமிழும் அளவுள்ள நீரை எடுத்து உட்கொள்ளுதல் ஆகும்.

இரண்டு கண்கள், இரண்டு செவிகள், மூக்கின் இருபுறம் ஆகிய இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெயரைச் சொல்லி ஒவ்வொரு விரலை யமைத்தல் விதியாதலின் ‘ஒத்த வகையால் விரலுறுத்தி' என்றார்.

முகத்து உறுப்பு என்பதற்கு முகத்திலுள்ள கண் முதலிய உறுப்புக்கள் என்பது முறை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-14, 7:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 145

சிறந்த கட்டுரைகள்

மேலே