மழைக்கு மனு போடுகிறேன்
மழைக்காகத் தான்
மண்ணில்
முதல் கவிதை
எழுதப்பட்டிருக்கக்கூடும்
என்று நம்புகிறேன்...
ஏனென்றால்,
மழைதானே
மண்ணில் விழுந்த
முதல் கவிதை!
சற்றே எண்ணிப்பாருங்கள்...
நகராத மரங்கள்,
ஜடமான மலைகள்,
மாதவிடாய்போல மாதம்
ஒரு முறை
தேய்ந்துத் திரும்பும் நிலா,
யாரும் தன் முழு அழகைப்
பார்த்திராத வண்ணம்
பிரகாசித்துக் கண்கூசச்செய்யும் சூரியன் -
இவை யாவும்
மனித கவனத்தை
ஈர்த்திருக்கக்கூடுமா?!
கவிதையின் விதை
கற்பனையன்றோ!
சிறுதுளியாய் வீழினும்,
பெருமழையாய் பொழியினும்,
மழை ஒரு
கற்பனை தரும்
கல்ப தரு!
நீள வானம்,
தன் நீலம் ஊற்றாமல்
வெறும் நீரைக் கொண்டு
கவி படைக்கிறது...
மழைக்கு வானம் தரும்
அறிமுகமே,
அற்புதம்... அபாரம்...!
யார் சொன்னது,
மழை வான்அழுகை யென்று?
பூமி அதிர உரக்கச் சிரித்து,
கருத்த மேகங்களை
ஒன்றாய்ச் சேர்த்து,
வெள்ளைப் பற்கள் கொண்டு
மின்னலாய் மின்ன...
வானவேடிக்கையோடு
பூமிக்கு வருகிறது
வான்தரும் சீதனம்!
மழை
வான் தாய்,
தன் இரு மார் கிள்ளி,
பெரு மனதோடு
உலகிற்கூட்டும்
முலைப் பால்!
மண்ணில் மக்கள்
நீர்கலந்த பால் அருந்திப்
பழகியவர்கள்
என்றுணர்ந்ததாலோ என்னவோ,
பாலின் வெண்மை,
மேகங்களாய் தங்கி விட
நீர் மட்டும்
தரைத் தொடுகிறது!
பரவாயில்லை,
நீரும்
உயிர்ப்பால் தான்!
அஹோ! பெய்கிறது அடைமழை!
இது வானைக் குத்தாமல்
குடையாமல் பெய்யும் மாமழை!
அதை மதிக்காமல்
குடையால் தடுப்பது மாபிழை!
மழைக்கு
ஒதுங்குவோரே!
நீங்கள் எல்லாம்
முறைப்பெண் வந்தால்
வெட்கப்படும் மாமன்களா?
ஜன்னல் வழியே
மழை ரசிக்கும்
மதியிலிகாள்!
நீங்கள் எல்லாம்,
கிட்ட நிற்கும் பத்தினியை
தொடாமல் பட்டினி கிடப்பவர்களா?
ஐயோ! கையாலாகாதவர்களே!
மழை தடம்மாறி போகாமல்,
மேகம் இடம்மாறி திரியாமல்,
வானம் மும்மாரி பொழிவதற்கு,
நான் மனுவொன்றை எழுதுகிறேன்...
நீங்கள் மறவாமல்
வீட்டை விட்டு
தெருக்களில் வந்து,
காலொப்பத்தால் ஒரு
கையொப்பம் மட்டும்
இடுவீராக!
சப்தம் போட்டு,
சபதம் ஏற்போம்!
* உடம்பின் ரகசியங்கள்
நனைய நனைய
மழையை ரசிப்போம் என்று...
* அடைமழை பெய்தால் கூட
நடந்துக்கொண்டே
நீச்சல் அடிப்போம் என்று....
* பிள்ளைகளை பயமுறுத்தாமல்
மழைக் கயிற்றில்
ஏற்றி விடுவோம் என்று...
* மழையை ரசிப்பவன்
மட்டுமே காதலிக்க
தகுதியானவன் என்று...
* வான் தரும் கொடையை
பூமி வங்கியில்
சேமித்து வைப்போம் என்று ...
சற்றே
வெளியே
வாரீர்!