இருதேவர் பார்ப்பா ரிடைபோகார் - ஆசாரக் கோவை 31
இருதேவர் பார்ப்பா ரிடைபோகார் தும்மினும்
மிக்கார் வழுத்திற் றொழுதெழுக ஒப்பார்க்
குடன்செல்ல லுள்ள முவந்து. 31 ஆசாரக்கோவை
பொருளுரை:
இரண்டு தெய்வங்களுக்கு இடையிலும், பார்ப்பார் இடையிலும் போக வேண்டாம்.
ஒருவர் தாம் போகும் போது தும்மினாலும், பெரியவர்கள் வாழ்த்தினால் அவரைத் தொழுது எழுந்து செல்ல வேண்டும்.
தாம் புறப்படுகையில் தம்மோடு ஒத்த நண்பர் எதிர்ப்பட்டால் மனம் மகிழ்ந்து அவருடன் செல்ல வேண்டும்.
கருத்துரை:
இரண்டு தெய்வங்களுக்கும் பார்ப்பாருக்கும் இடையில் செல்லக்கூடாது. தும்மின பொழுது பெரியோர் வாழ்த்தினால் அவரை அங்கமெல்லாம் தரையில் படத் தொழுது எழ வேண்டும். ஒத்த நண்பன் எதிர் வருவானானால் அவனுடன் செல்ல வேண்டும்.
பெரியோர் கூடியிருக்கும் மன்றத்தின் நடுவில் ஊடறுத்துப் போகலாகாது என்பது "என்றூடறுத்துச் சென்றாலும் மன்றூடறுத்துச் செல்லற்க" என்ற பழமொழியாலும் விளங்கும்.